Published:Updated:

`சென்னையில் 30 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு; தமிழகத்தில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்’ -கொரோனா அப்டேட்ஸ் #NowAtVikatan

கொரோனா
கொரோனா

13.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

13 Jun 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,684 ஆக பதிவாகியுள்ளது. மேலும், மாநிலத்தில் ஒரே நாளில் 1,362 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், ஒரே நாளில் தமிழகத்தில் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 0.90% ஆக இருந்த இறப்பு விகிதம் தற்போது 0.93% ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,487 பேருக்கு தொற்று உறுதுசெய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு 30,444 ஆக அதிகரித்துள்ளது.

13 Jun 2020 3 PM

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்!

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன், வடபழனி தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 69.

இயக்குநர் பாரதிராஜாவின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய இவர், 'அலைகள் ஓய்வதில்லை' (1981), 'கண்களால் கைது செய்' (2004) ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருதினை வென்றுள்ளார். இவர், புகழ்பெற்ற பழம்பெரும் திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் இளைய சகோதரரும் ஆவார்.

13 Jun 2020 3 PM

அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா!

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ, கே.பழனிக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவருக்கு வைரஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான சோதனை முடிவில் எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

13 Jun 2020 1 PM

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தற்போதைக்கு இல்லை!

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புள்ள நிலையில், தற்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. `சூழல் சரியானதும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலி இடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்’ என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

13 Jun 2020 9 AM

இந்தியாவில் 3 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,535 -லிருந்து 3,08,993 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 11,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை
மாதிரிப் படம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,47,195 -லிருந்து 1,54,330 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,498-லிருந்து 8,884ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,01,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு