ஒரே நாளில் 5,693 பேருக்குத் தொற்று! - தமிழகத்தில் 5 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு #NowAtVikatan

13-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
தமிழகத்தில் 5 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,02,759-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 74-ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 8,381-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 5,714 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,47,366 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் இன்று 994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நிறைவடைந்த நீட் தேர்வு!
மதுரையில் நீட் தேர்வை முடித்து வெளியே வரும் மாணவர்கள். படங்கள் - ஈ.ஜெ.நந்தகுமார்
தேசிய அளவில் இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு நிறைவடைந்தது. தமிழகத்தில் சென்னை உள்பட 14 ஊர்களில் அமைக்கப்பட்டிருந்த 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்வை நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
திடீரென மயக்கமடைந்த ஆதித்யாவின் தாய்!
நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஆதித்யாவின் உடல் தருமபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆதித்யாவின் உடலை அவருடைய பெற்றோரான மணிவண்ணன் - ஜெயசித்ராவிடம் கையெழுத்து வாங்காமல் உடற்கூறு செய்துவிட்டார்கள். அதனால், உடலை வாங்காமல் ஆதித்யாவின் பெற்றோர், உறவினர்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆதித்யாவின் தாய் ஜெயசித்ரா மயக்கம் அடைந்து, வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-வீ.கே.ரமேஷ்
படங்கள் - எம். விஜயகுமார்
நீட் தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்கள்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்வை நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் இருந்து இந்தத் தேர்வுக்காக சுமார் 18,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நீட் தேர்வெழுதச் செல்லும் மாணவர்கள் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
இடம் : மதுரை யாதவா கல்லூரி
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்
இந்தியாவில் ஒரு லட்சத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47,54,356 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,114 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,626 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், 24 மணி நேரத்தில் 78,586 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 37.02 ஆகவும் உயர்ந்துள்ளது.