அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள்! - விசாரணை குழு அமைத்தது தமிழக அரசு #NowAtVikatan

13-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!
சூரப்பா மீது விசாரணை நடத்த குழு!
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விசாரணை குழு, 3 மாதங்களில் அறிக்கை அளிக்க குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா இந்த தகவலை தெரிவித்தார்.

அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது முன்னர் புகார் தெரிவிக்கப்பட்டது. குழு தரும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மருமகள் ஜெயமாலா கைது!

சென்னையில் கணவர் குடும்பத்தினர் மீதான ஆத்திரத்தில் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில் மருமகள் மற்றும் அவரின் குடும்பத்தினரை போலீஸார் தேடிவந்த நிலையில், மருமகள் ஜெயமாலா உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கொலை நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் போலீஸார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். `கைதுசெய்யப்பட்ட ஜெயமாலாஉள்ளிட்டவர்களிடம் விசாரித்தால், கொலைக்கான காரணம் தெரிய வரும்’ என்கிறார்கள் போலீஸார்.