Published:Updated:

தொப்பூர்: `4 பேர் பலி; நொறுங்கிய கார்கள்!’ - விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை மடக்கிய போலீஸ் #NowAtVikatan

தொப்பூர் விபத்து
தொப்பூர் விபத்து

13-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

13 Dec 2020 3 PM

தொப்பூர் விபத்து! - லாரி டிரைவரை மடக்கிய போலீஸ்

தருமபுரி அருகே தொப்பூர் பகுதியில் விபத்தை ஏற்படுத்தி 4 பேர் உயிரிழப்புக் காரணமான லாரி டிரைவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

தொப்பூர் விபத்து
தொப்பூர் விபத்து

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி அருகே தொப்பூர் கணவாய்ப் பாதையில் நேற்று இருசக்கர வாகனமும் மினிலாரி ஒன்றும் மோதி சிறிய அளவில் விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த பகுதியில் நீண்டவரிசையில் கார்கள் உள்பட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சரிவுப் பாதையில் வாகனங்கள் பல கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நின்றிருந்த நிலையில், சிமென்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி ஒன்று கார்களின் பின்புறமாக வேகமாக வந்து மோதியது.

இதில், 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரிய அளவில் விபத்து ஏற்பட்டது. இதில், 5-க்கும் மேற்பட்ட கார்கள் நொறுங்கின. சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால், உயிரிழப்பு நான்காக அதிகரித்தது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. விபத்துக் காரணமான லாரி டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிய நிலையில், தற்போது போலீஸார் அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

13 Dec 2020 12 PM

ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் யாரைக்காக்க?

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்
கமல்

ரூ.971 கோடி செலவில் பழைய நாடாளுமன்றக் கட்டடம் அருகே கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 10-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்தநிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் மத்திய அரசுக்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல், ``சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே....’’ என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு