Published:Updated:

``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா?” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்

``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா?” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்
``முதல்வர் நிலத்துக்கு மட்டும்தான் தண்ணி போகுமா?” - காவிரிக்காகப் போராடும் சேலம் மக்கள்

``மேட்டூர் அணை ஒரு வருடம், இரண்டு வருடத்தில் ஆலோசனை செய்து கட்டப்பட்டது அல்ல. 90 வருட ஆலோசனைக்குப் பிறகே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது சேலம் மாவட்ட பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்க யோசனை செய்யாமலா இருந்திருப்பார்கள்?"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் 2,91,000 கன அடி நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவேரிக் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளைத் தண்ணீர் மூழ்கடித்துச் செல்கிறது. கரையோர மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இரவு பகலாக வெள்ள அபாய எச்சரிக்கை செய்து வருவதோடு பேரிடர் மீட்புப் படைகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வளவு நீரும் கடைமடையை அடைந்து கடலில் கலக்கும். ஆனால், மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள் வறண்டு முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. 

இதுபற்றி நங்கவள்ளி முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான ஜீவானந்தம், ``தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இருந்தாலும் சேலத்தில் பாசன வசதி இல்லாமல் வறண்டு கிடக்கிறது. தற்போது மேட்டூர் அணை 120 அடி இரண்டாவது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால், மேட்டூரைச் சுற்றியுள்ள மேட்டூர், நங்கவள்ளி, மேச்சேரி, குஞ்சாண்டியூர், ஜலகண்டாபுரம், ஓமலூர், எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகள் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதற்காக நாங்கள் சுமார் 20 ஆண்டுகளாகக் காவிரி உபரி நீர் பாதுகாப்புக் குழு என அமைப்பைத் தொடங்கி பாசன வசதி செய்து கொடுக்க வேண்டும் எனப் போராடி வருகிறோம். ஆனால், அரசு கண்டுகொள்ளவே இல்லை. தற்போது காவிரியில் உபரி நீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்க்கும்போது எங்க பகுதியில் உள்ள ஏரிகளெல்லாம் வறண்டு கிடக்கிறதே என்று வேதனை அடைகிறோம். அரசு தற்போது போர்க்கால அடிப்படையில் மேட்டூர் காவிரி ஆற்றில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் மூலம் எங்கள் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்குத் தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும்.  

புதியதாக அமைக்கப்பட்ட நங்கவள்ளி மேச்சேரி கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் பணிகள் நிறைவடைந்து வெள்ளோட்டமும் பார்த்து விட்டார்கள். இந்தப் பைப் லைனில் தண்ணீர் விட்டால் நங்கவள்ளி ஒன்றியம், மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள சுமார் 100 ஏரிகள், 500 சிற்றோடைகளை நிரப்ப முடியும். அதேபோல சேலம் மாநகராட்சிக்கு இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டப் பைப் லைன்கள் இருக்கின்றன. அதில் ஒரு லைன் செயல்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள். அந்தப் பைப் லைன் மூலமாகவும் தண்ணீர் விடலாம்.

அதேபோல தனியார் நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ பைப் லைன் மூலமாக அவர்கள் 10 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் எடுக்கிறார்கள். அந்தப் பைப் லைன் மூலமாகவும் ஏரிகளுக்குத் தண்ணீர் விட முடியும். அதேபோல இருப்பாளி கூட்டுக் குடிநீர் பைப் லைன் மூலம் தண்ணீர் விடலாம். இந்தப் பைப் லைன் மூலம் நங்கவள்ளி, கொங்கணாபுரம், எடப்பாடி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகளை நிரப்பலாம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் உடனே சிறப்புக் கவனம் எடுத்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை, ``காவிரியின் உபரி நீரைச் சேலம் மக்களுக்கு வழங்க வேண்டும்

என்பது எங்களுடைய நீண்ட கால கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஐயா ராமதாஸ் தலைமையில் 50,000 விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தினோம். சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தோம். அதையடுத்து ஜெயலலிதா திட்ட அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அந்த அறிக்கை என்ன ஆனது என்று தெரியவில்லை. நேற்றுகூட மாவட்ட ஆட்சித்தலைவரைச் சந்தித்து அவசர நிலையாகக் கருதி கூட்டுக் குடிநீர் குழாய்கள் மூலம் காவிரி நீரை மேட்டூரைச் சுற்றியுள்ள ஏரிகளில் நிரப்ப உத்தரவிட வேண்டும் என்று மனு கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு முட்புதர்களாக இருக்கிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவருடைய உறவினர்களுக்கும் வெள்ளரி ஏரியைச் சுற்றி காடுகள் இருப்பதால் அந்த ஏரிக்கு மட்டும் தனியாக நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பிக் கொண்டார்.

மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதுபோல தெரியவில்லை. ஐயாவிடம் அனுமதி பெற்று மக்களைத் திரட்டி உண்ணாவிரதம் செய்யப்போகிறேன்'' என்றார்.

ஓமலூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ பல்பாக்கி கிருஷ்ணன், ``2013-ல் மேட்டூர் அணையில் உபரி நீர் வெளியேறியபோது புதியதாகச் சேலம் மாநகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம் பைப் லைன் போட்டு வெள்ளோட்டம் பார்த்திருந்த நிலையில் இருந்தது. அந்தப் பைப் லைன் வால்வுகளைத் திறந்துவிட்டு பெரியேரிப்பட்டி ஏரி, முத்தநாயக்கன்பட்டி ஏரி, எல்லையூர் ஏரி போன்ற ஏரிகளை நிரப்பினேன். அதேபோல தற்போதும் கூட்டுக் குடிநீர்த் திட்ட பைப் லைன் மூலம் தண்ணீர் திறந்து ஏரிகளை நிரப்ப வேண்டும் என்று முதல்வருக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம். முதல்வரும் இது சம்பந்தமாக தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். அவரைச் சந்திக்க இருக்கிறோம். நிச்சயம் நம் முதல்வர் இந்த மண்ணின் மீதும் மக்கள் மீதும் அக்கறை வைத்துள்ளார். போர்க்கால அடிப்படையில் தண்ணீர் கிடைக்க வழி செய்வார்'' என்றார்.

இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``மேட்டூர் அணை ஒரு வருடம், இரண்டு வருடத்தில் ஆலோசனை செய்து கட்டப்பட்டது அல்ல. 90 வருட ஆலோசனைக்குப் பிறகே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது சேலம் மாவட்ட பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்க யோசனை செய்யாமலா இருந்திருப்பார்கள்? கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஏரிகளில் நிரப்புவது என்பது சாத்தியம் இல்லாதது. 24 மணி நேரமும் மக்களின் குடிநீருக்காக இந்த பைப் லைன் மூலம் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு மணி நேரம் நிறுத்தினால்கூட மக்களுக்கு முறையாகக் குடிநீர் வழங்க முடியாது.

தண்ணீரைவிட மின்சார செலவு அதிகரிக்கும். உதாரணமாகச் சேலம் மாநகராட்சி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு மட்டும் மாதம் 2.5 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்துகிறோம். எந்த நதியாக இருந்தாலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கடலில் கலப்பதுதான் இயற்கையின் நியதி. சீனாவில் மஞ்சள் ஆற்றின் தண்ணீரைக் கடலில் கலக்க விடாமல் இருந்ததால் அந்த ஆறே உப்பு நீராக மாறிப் போனது. அதனால் இயற்கையை எல்லை மீறி அபகரிக்க நினைக்கக் கூடாது'' என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு