Published:Updated:

முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த இந்திய ராணுவம்..!

முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த இந்திய ராணுவம்..!
News
முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த இந்திய ராணுவம்..!

முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த இந்திய ராணுவம்..!

முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகளை இந்திய ராணுவத்தைச் சேர்ந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.

கடந்த 22-ம் தேதி முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து உடைந்த மதகுகள் பகுதியில் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. முக்கொம்பு மேலணை கொள்ளிடத்தில் உடைந்த மதகுகளை சீரமைப்பதற்காக, மணல் மூட்டைகள் தடுப்புகளைத் தவிர்த்து கடந்த 3 நாள்களாக உடைந்த பகுதிகளில் திருச்சி மட்டுமல்லாமல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட குவாரிகளில் இருந்து பெரிய அளவிலான பாறைகற்கள் கொண்டுவரப்பட்டு தடுப்புகள் அமைக்கப்படுகிறது.

தற்போதுவரை சுமார் 360 லோடு பாறைக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன என்கிறது மாவட்ட நிர்வாகம். நாளை இரவுக்குள் கற்கள் முழுமையாக கொண்டுவரப்பட்டு, கொட்டப்படும் கற்கள் மீது மணலை பரப்பி முன்னேறிச் செல்லும் வகையில் தடுப்பு பாலம் அமைக்கப்படவுள்ளது. மேலும், பெரிய அளவிலான இரும்புக் குழாய்களை இறக்கி தண்ணீரின் போக்கை தடுத்து தடுப்புகள் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டு, நாளைக்குள் தடுப்பு பணிகள் முழுமையடையும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். இதுமட்டுமல்லாது முதலாவது மதகு அமைந்த பகுதியில் இருந்து 98 மீட்டர் தொலைவுக்கு மணல் மூட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அணையை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனனும் அணையை ஆய்வு செய்தார். இந்த நிலையில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகளை உடன் இருந்து கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ``அதிகாரிகள், தொழிலாளர்களை விரைவுபடுத்தி பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதுவரை 75 சதவிகித பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 25 சதவிகித பணிகளும் புதன்கிழமைக்குள் நிறைவு பெறும். 182 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான மேலணையானது தொடர்ச்சியாக 3 லட்சம் கன அடி வரையில் அதிக நாள்களுக்கு தண்ணீர் சென்றதன் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இதற்காக முதல்வர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவது நகைப்புக்குரியது" என்றார்.

இந்த நிலையில், முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகள் குறித்து கூடுதல் தொழில்நுட்ப ஆலோசனையினை வழங்குமாறு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராணுவ அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பெங்களுரிலிருந்து வருகை தந்த ராணுவ மேஜர் அரவிந்த் தலைமையிலான குழுவினர் சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். பெரிய பாறாங்கற்களை கொண்டு உடைப்பினை சரிசெய்வதையும், மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கி தடுப்பு ஏற்படுத்தும் பணியினையும் பார்வையிட்டனர்.

அதன்படி பொதுப்பணித்துறை மூலம் தற்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளான பெரிய பெரிய பாறாங்கற்களைக் கொண்டு உடைப்பினை அடைக்கும் பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது எனவும் தற்போது நடைபெற்று வரும் தடுப்பு நடவடிக்கைகள் முறையே சரியானது எனக் கூறியதாகவும், இப்பணியைத் தொடர்ந்தால், பணியை விரைவில் முடிக்கலாம் எனவும் கருத்து தெரிவித்ததாகவும், மேலும் முக்கொம்பு மேலணை பணிக்கு ராணுவத்தின் உதவி தேவைப்படவில்லை என தெரிவித்ததாக கூறினார் திருச்சி மாவட்ட கலெக்டர் இராசாமணி. 

மேலும் ‘’முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணிகள், இன்று இரவுக்குள் சீரமைப்பு பணிகள் முடிந்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படும்’ என பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  கூறினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz