Published:Updated:

கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் சர்ச்சை! -விளக்கமளித்த விளையாட்டுத்துறை அமைச்சகம்

கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் சர்ச்சை! -விளக்கமளித்த விளையாட்டுத்துறை அமைச்சகம்
கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் சர்ச்சை! -விளக்கமளித்த விளையாட்டுத்துறை அமைச்சகம்

விராட் கோலி மற்றும் மீராபாய் சானு ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக, எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம். 

விளையாட்டு வீரர்களின் சர்வதேச சாதனைகளைப் பாராட்டி அவர்களைக் கௌரவிக்கும் விதமாக அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருது உள்ளிட்ட  விருதுகள், மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில், விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.  

பொதுவாக, சர்வதேச அளவில் வீரர்கள் எடுக்கும் புள்ளிகள் அடிப்படையில் விருதுக்குப் பரிந்துரைக்கப்படு விருது வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கேப்டன் விராட் கோலி மற்றும் மீராபாய் சானு ஆகியோருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதிருப்தி அளிப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்திருந்தார். `புள்ளிகள் அடிப்படையில் கேப்டன் விராட் கோலி மற்றும் மீராபாய் சானுவை விட தான் அதிகம் புள்ளிகள் பெற்றும் விருதுக்கு தம்மை தேர்வு செய்யவில்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது. நீதி கிடைக்க நீதித்துறையையும் நாடுவேன்' எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். பஜ்ரங் புனியா காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இவரது குற்றச்சாட்டுக்கு தற்போது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது, `விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகள் என்பது, ``வீரர்களின் சாதனையை ஒட்டுமொத்தமாக வேறுபடுத்தி கணக்கிடுவது அல்ல. ஒரு வீரர் அவர் சார்ந்த விளையாட்டு துறையில் சாதித்ததை மட்டுமே அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.அந்த வகையில், டெஸ்ட், ஒருநாள், டி20 என்ற மூன்று வித போட்டிகளின்  ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட்கோலி 3-க்கு 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் இருந்து மீராபாய் சானு மட்டுமே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தற்போது உலக சாம்பியனாக உள்ளார். இதன் அடிப்படியிலேயே விருது வழங்கப்பட்டுள்ளது' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.