Published:Updated:

விராட் கோலிக்கு கேல்ரத்னா விருது வழங்கிக் கௌரவித்த ஜனாதிபதி!

விராட் கோலிக்கு கேல்ரத்னா விருது வழங்கிக் கௌரவித்த ஜனாதிபதி!
விராட் கோலிக்கு கேல்ரத்னா விருது வழங்கிக் கௌரவித்த ஜனாதிபதி!

விராட் கோலிக்கு விளையாட்டுத்துறையில் உயரிய விருதான கேல்ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. 

விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயலாற்றும் வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக அர்ஜுனா விருது, துரோணாச்சாரியார் விருது உள்ளிட்ட உயரிய விருதுகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில், விளையாட்டுத் துறையில் முக்கியமான விருதாகக் கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு ஆகியோரது பெயர்கள் பரிந்துரைசெய்யப்பட்டன.

ஆனால், விருதுகள் அறிவிப்பில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது அதிருப்தி தெரிவித்திருந்தார் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது. இதற்கிடையே, இன்று டெல்லியில் விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீரர்களுக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார். விராட் கோலி தன் மனைவியுடன் விழாவில் கலந்துகொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். சச்சின், தோனிக்குப் பிறகு மூன்றாவது கிரிக்கெட் வீரராக கோலி கேல்ரத்னா விருதைப் பெற்றார்.

இதேபோல் மீராபாய் சானுவும் கேல்ரத்னா விருது பெற்றார். மேலும், நீரஜ் சோப்ரா, ஹிமா தாஸ், ஜின்சன் ஜான்சன், ஸ்மிரிதி மந்தனா, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. குட்டப்பா, விஜய் ஷர்மா உள்ளிட்டோருக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டது.