Published:Updated:

CoronaVirus: தமிழகத்தில் 3.2 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,835 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

corona
corona ( Unsplash )

13.8.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

13 Aug 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,835 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,146 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை, 2,61,459 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 119 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 5,397ஆக அதிகரித்துள்ளது.

corona
corona

சென்னையில் மேலும் 989 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,13,058 ஆக அதிகரித்துள்ளது.

`பன்றிக் காய்ச்சல்' வதந்தி டு கொரோனா தொற்று... எப்படியிருக்கிறார் அமித் ஷா?
13 Aug 2020 1 PM

`அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்; உரிய நேரத்தில் முடிவு!’

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் தொடர்பாகவும் கூட்டணி நிலைப்பாடுகள் தொடர்பாகவும் தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ` சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தற்போது ஆலோசனை நடத்தினோம். அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

13 Aug 2020 12 PM

தி.மு.க-வில் இருந்து கு.க.செல்வம் நீக்கம்!

CoronaVirus: தமிழகத்தில் 3.2 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,835 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் முன்னதாகத் தி.மு.க-விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். `அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாத காரணத்தால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனத் தி.மு.க-வின் தலைமைக் கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 Aug 2020 12 PM

தமிழகத்தில் தற்போது கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளது. இதனிடையே ஆளும் அ.தி.மு.க கட்சியில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் கிளம்பியுள்ளது. முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜு, `சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறார்களோ அவர்தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்’ என்றார்.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``எடப்பாடியார் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு, களத்தைச் சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தித் தளம் அமைப்போம். களம் காண்போம். வெற்றி கொள்வோம். 2021-ம் நமதே” தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``எடப்பாடியாரை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்திப்போம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்திருக்கிறோம். அதே போல 2021 சட்டசபைத் தேர்தலையும் சந்திப்போம். எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எளிமையின் அடையாளமான முதல்வர், வலிமையான அரசு என்று நிரூபித்திருக்கிறார்” என்றார்.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

இது ஒருபுறம் என்றால் மறுபுறம் பா.ஜ.க சார்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி,``எங்களுடன் அனுசரித்து செல்பவர்களுடன்தான் நாங்கள் கூட்டணி வைப்போம். நேற்று வரை அ.தி.மு.க vs தி.மு.க என இருந்த நிலை தற்போது மாறியுள்ளது. தமிழகத்தில் இனி பா.ஜ.க vs தி.மு.க என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க தேசியக் கட்சி என்பதால் தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும்’ என்றார்.

இப்படி பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்க, சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

13 Aug 2020 10 AM

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் மாற்றம் இல்லை!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. முன்னதாக அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமானது. தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி உடல் நிலை குறித்து சமூக வலைதளங்கள் சில வதந்திகள் பரவின.

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

தற்போது பிரணாப் முகர்ஜியின் மகனான அபிஜித் முகர்ஜி அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அவரது ட்விட்டர் பதிவில், ``என் தந்தை பிரணாப் முகர்ஜி உயிருடன் இருக்கிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், `பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு சுயநினைவின்றி, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 Aug 2020 10 AM

இந்தியாவில் 24 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,96,638 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 942 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 47,033 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,95,982 ஆகவும் உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு