Published:Updated:

போரிஸ் ஜான்சன் வெற்றி! இந்திய வம்சாவளியினர் 15 பேர் எம்.பிக்களாகத் தேர்வு #GE2019 polls #NowAtVikatan

13.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்
13 Dec 2019 6 AM

குடியுரிமைச் சட்டம்!

நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பல்வேறு இடங்களில் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம் மசோதா சட்டமாகி உள்ளது. நேற்றிரவு இந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

13 Dec 2019 7 AM

சம்ஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது!

கணேஷ் சிங் பா.ஜ.க எம்.பி
கணேஷ் சிங் பா.ஜ.க எம்.பி

மக்களவையில் நேற்று மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தில் பேசிய பா.ஜ.க எம்.பி கணேஷ் சிங், ``அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தினமும் சம்ஸ்கிருதம் பேசினால் அது நமது நரம்புகளை சிறப்பாகச் செயல்பட வைத்து அதன் மூலம் சர்க்கரை மற்றும் கொழுப்பு நோய்களைத் தள்ளி வைக்கும். அதேபோன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய ஆய்வில், கணினி மென்பொருள்களை சம்ஸ்கிருத மொழியில் உருவாக்கம் செய்யப்பட்டால் அதில் எந்தக் குறைபாடும் வராது” எனத் தெரிவித்தார். மேலும், உலகில் உள்ள மொழிகளில் 97% மொழிகள் சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டவைதான் என்றார். இவரது பேச்சுதான் தற்போது செம வைரல்!

`700 வருடம் இளைய மொழி; மறைமுக கள்ளத்தனம்'- நாடாளுமன்றத்தில் கொதித்த தமிழக எம்.பி-க்கள்!
13 Dec 2019 11 AM

சி.பி.ஐ விசாரணை கிடையாது!

ஐ.ஐ.டி
ஐ.ஐ.டி

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லை என்பதாலும், தற்கொலை வழக்கை விசாரிக்கும் குழுவில் சி.பி.ஐயில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்ற தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று சி.பி.ஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம். மேலும் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 Dec 2019 11 AM

பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்குத் தேவையானதைக் காட்டிலும் அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிறார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

13 Dec 2019 7 PM

அமைச்சரவை பரிந்துரைத்தும் முடிவெடுக்கவில்லை - உயர்நீதிமன்றத்தில் நளினி ஆட்கொணர்வு மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். “ 10 ஆண்டுகள் சிறையில் இருந்த 3000 கைதிகள் நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசின் முடிவுக்குப் பிறகும் சட்டவிரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறியுள்ளார்.

13 Dec 2019 10 PM

இந்திய வம்சாவளியினர் 15 பேர் வெற்றி!

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்குத் தேவையானதைக் காட்டிலும் அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிறார். போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 203 இடங்களில் வென்றுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பிரிட்டன் பொதுத்தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 எம்.பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் தலா 7 பேரும், லிபரெல் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.