Published:Updated:

இனி பி.இ படிக்க வேதியியல் கட்டாயம் இல்லை... தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு! #NowAtVikatan

13.2.2020 இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

13 Feb 2020 3 PM

வேதியியல் கட்டாயம் இல்லை!

பொறியியல் படிப்பில் சேருவதற்கு இனி வேதியியல் கட்டாயம் இல்லை என்று தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. இயற்பியல், கணிதம் படித்திருந்தால் பொறியியல் படிப்பில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் , கணிதம், உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் படிந்திருந்தால் போதும் என்றும், இந்த முறை இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 Feb 2020 11 AM

சேலத்திலும் முறைகேடு?!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பாக தினம் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இது தொடர்பாக அவர், ``தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொடர்ச்சியாக நடந்த முறைகேடுகள் தொடர்பான கைதுப்படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த புகார்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர்கள், அது சம்பந்தமான புகாரை முதல்வரிடம் கொடுத்துள்ளதாகப் பேட்டி தந்துள்ளார்கள். அதற்கான விசாரணையை அரசு தொடங்கிவிட்டதா? தொடங்கவில்லை என்றால் உடனடியாகத் தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2A, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, தொடர்ந்து காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது, சிபிஐ விசாரணை நடத்த கால தாமதமின்றி உடனடியாக உத்தரவிடப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

13 Feb 2020 11 AM

உச்சநீதிமன்றம் அதிரடி!

இனி பி.இ படிக்க வேதியியல் கட்டாயம் இல்லை... தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு! #NowAtVikatan

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற அமர்வு பரபரப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இனி வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

அதை பிராந்திய நாளிதழ்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிய வேண்டும். வேட்பாளர்களின் நற்சான்றுகளுடன் அவர்களின் குற்றப்பின்னணியையும் வெளியிட வேண்டும். மேலும், குற்றப்பின்னணி உடைய ஒருவரை ஒரு கட்சி வேட்பாளராக அறிவிக்கும்பட்சத்தில், அவரது குற்றப்பின்னணியையும் தாண்டி எதற்காக அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தோம் என்பதையும் கட்சி 72 மணி நேரத்தில் விளக்க வேண்டும்.

இந்த விதிமுறையை அரசியல் கட்சிகள் பின்பற்றத் தவறினால், தேர்தல் ஆணையம் அந்தக் கட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளில் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

13 Feb 2020 10 AM

போக்ஸோ சட்டத்தில் துணை தலைமை ஆசிரியர் கைது!

இனி பி.இ படிக்க வேதியியல் கட்டாயம் இல்லை... தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு! #NowAtVikatan

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்காவுக்கு உட்பட்ட அரசு துவக்கப்பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மாகாளியப்பன். இவர் அந்தப் பள்ளியில், 11 மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆசிரியர் தவறாக நடப்பதாக பெற்றோர்களிடம், மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உடல்நிலை சரியில்லை எனக்கூறி மாகாளிப்பன் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து, `தெரியாமல் நடந்துவிட்டதாகவும் தன்னை மன்னிக்கும்படி' கூறியுள்ளார். மாகாளிப்பன் மீது பல புகார்கள் இருந்தும் அவர்மீது போலீஸில் யாரும் புகாரளிக்கவில்லை்

இதனிடையே, காவல் துறையினர் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரை மிரட்டுவதாக அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர். இதையடுத்து, மாகாளியப்பன் காட்டம்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியராக மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சிறுமிகளிடம் அத்துமீறி நடந்ததாக குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் மாகாளியப்பன் மீது புகாரளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து, மாகாளியப்பனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

13 Feb 2020 8 AM

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

கொரோனா
கொரோனா

சீனாவின் ஹூபே மாகாணத்திலிருக்கும் வுகான் நகரில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தாலும், சீனாவில் அந்த வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்களைத் தடுக்க முடியவில்லை. நேற்று ஒரே நாளில் ஹூபே மாகாணத்தில் 242 பேர் இந்த வைரஸ் காரணமாகப் பலியாகியுள்ளனர். தற்போது வரை கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,355 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருவது உலக மக்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது. அதிலும் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு