Published:Updated:

புல்வாமாவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை - ஆயுதங்கள் பறிமுதல் #NowAtVikatan

பாதுகாப்புப்படையினர்
பாதுகாப்புப்படையினர்

13.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

13 Jan 2020 8 PM

புல்வாமாவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை - ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்களை பாதுகாப்புபடையினர் பறிமுதல் செய்தனர்.

13 Jan 2020 3 PM

சோனியா கூட்டத்தைப் புறக்கணித்த தி.மு.க!

நாடு முழுவதும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி, இன்று மதியம் அனைத்துக் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ள உள்ளனர் எனக் கூறப்பட்டது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சி.ஏ.ஏ விவகாரத்தில் எதிர்கொள்வது குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மத்திய அரசுக்கு எதிராகக் கூட்டாகச் செயல்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின்
சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சோனியா காந்தியே அழைப்பு விடுத்ததால் பல்வேறு கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் பல்வேறு காரணங்களை காட்டி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கிடையே இதில் புதிய திருப்பமாக தி.மு.க சார்பில் யாரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க காங்கிரஸ் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி தி.மு.க-வை குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இதுதொடர்பாக அவர் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் தி.மு.க கூட்டத்தில் கலந்துகொள்ளாதது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

13 Jan 2020 12 PM

4 பேருக்கு ஆயுள் தண்டனை!

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் தனியார் வங்கியில் பயிற்சிக்கு வந்த வட மாநில இளம் பெண்ணை நான்கு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். 2018-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

குற்றவாளிகள்
குற்றவாளிகள்

இந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் பெண்ணை வன்கொடுமை செய்த தினேஷ், வசந்தகுமார், அன்பரசன், புருஷோத்தமன் ஆகிய நான்கு பேரின் குற்றங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எழிலரசி உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு 7ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

13 Jan 2020 10 AM

சீராய்வு மனுக்களை மட்டும் விசாரிக்கப் போவதில்லை!

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனு இன்று முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கப்படுகிறது. இந்த விசாரணையின் போது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ``சபரிமலை விவகாரத்தில் நாங்கள் சீராய்வு மனுக்களை மட்டும் விசாரிக்கப் போவதில்லை. கோயில், மசூதி உள்ளிட்ட வழிப்பாட்டு தளங்களுக்கு பெண்கள் செல்வது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்ததா என்பது குறித்து கேட்டறியவுள்ளோம்” என தெரிவித்துள்ளது.

13 Jan 2020 8 AM

குடியரசு தின ஒத்திகை!

குடியரசு தின ஒத்திகை!
குடியரசு தின ஒத்திகை!

ஜனவரி மாதம் 26 -ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்புக்கான ஒத்திகை நிகழ்ச்சி, தற்போது டெல்லியில் கடும் குளிரிலும் நடைபெற்றுவருகிறது.

13 Jan 2020 8 AM

இன்று முதல் விசாரணை!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராகப் பதியப்பட்ட சீராய்வு மனுக்கள்மீது, 9 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வு, இன்று முதல் விசாரணை நடத்துகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, இந்த விசாரணையை நடத்துகிறது.

அடுத்த கட்டுரைக்கு