Published:Updated:

Live Updates: பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி தனியாக ஆலோசனை?! - துணை முதல்வர் பங்கேற்கவில்லை எனத் தகவல்

மோடி - பழனிசாமி - பன்னீர்செல்வம்
மோடி - பழனிசாமி - பன்னீர்செல்வம்

14-02-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

14 Feb 2021 1 PM

மோடி - பழனிசாமி சந்திப்பு... ஆலோசனை!

நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது உரையை முடித்த பிரதமர் மோடி, புறப்படுவதற்கு முன்னதாக, அரங்கில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரு சில நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் இந்தச் சூழலில் இந்தச் சந்திப்பு குறித்த தகவல் தமிழக அரசியலில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது!

14 Feb 2021 1 PM

`நன்றி சென்னை... அன்பான வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்!' - பிரதமர் மோடி ட்வீட்

14 Feb 2021 1 PM

பன்னீர்செல்வம் - மோடி - பழனிசாமி!

தனது உரையை முடித்த பிரதமர் மோடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆகியோர் கைகளைப் பிடித்து உயர்த்திக்காட்டினார். பின்னர் நேரு விளையாட்டு அரங்கத்திலிருந்து புறப்பட்டார் மோடி.

14 Feb 2021 1 PM

இலங்கை தமிழர் நலனில் அக்கறைகொண்ட அரசு! - மோடி 

Live Updates: பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி தனியாக ஆலோசனை?! - துணை முதல்வர் பங்கேற்கவில்லை எனத் தகவல்

இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாகவும் மீனவர்கள் பிரச்னை தொடர்பாகவும் பேசிய பிரதமர் மோடி, ``மீனவர்களை நினைத்து தேசம் பெருமைகொள்கிறது. அவர்களுக்கான கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. இலங்கை கடற்படையால் எப்போது மீனவர்கள் கைதுசெய்யப்பட்டாலும் உடனே விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம் சென்ற ஒரே இந்தியப் பிரதமர் நான்தான். இலங்கைத் தமிழர் நலன் காக்கும் அரசாக மத்திய அரசு இருக்கிறது” என்றார்.

14 Feb 2021 1 PM

தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கை ஏற்பு!

Live Updates: பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி தனியாக ஆலோசனை?! - துணை முதல்வர் பங்கேற்கவில்லை எனத் தகவல்

தொடர்ந்து பேசிய மோடி, ``தமிழகத்திலிருந்து வைக்கப்பட்ட நீண்டநாள் கோரிக்கையான ஒன்று இன்று நிறைவேற்றப்படுகிறது. தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்ற அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் `தேவேந்திர குல வேளாளர்’ என்று அழைக்கப்படுவர்” என்றார்.

14 Feb 2021 12 PM

பாரதியாரை மேற்கோள்காட்டிய மோடி!

மோடி
மோடி

பிரதமர் மோடி, ``கொரோனா காலத்திலும் மெட்ரோ பணிகள் குறுப்பிட்ட காலகட்டத்தில் முடிக்கப்பட்டிருக்கின்றன. இது சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும்” என்றார். ``இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. நம் யாராலும் மறக்க முடியாது நிகழ்வு அது. அதனால் ராணுவத்தில் இந்தியத் தயாரிப்புகளை ஊக்குவிக்கத் தொடங்கினோம். கவிஞர் பாரதியார் வரிகளை மேற்கோள்காட்ட விரும்புகிறேன். `ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்’ என்றார் பாரதியார். இன்று இந்தியாவிலேயே, தமிழகத்திலேயே செய்யப்பட்ட அர்ஜுன் ராணுவ பீரங்கி வடக்கில் நமது எல்லைகளைக் காக்க உதவப்போகிறது. இதுவே தன்னிறைவு இந்தியாவை நோக்கிய பயணம்” என்றார்.

14 Feb 2021 12 PM

ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டிய மோடி!

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசத் தொடங்கிய பிரதமர் மோடி, ``வணக்கம் சென்னை... வணக்கம் தமிழ்நாடு’’ என்றார். தொடர்ந்து பேசிய மோடி, ``சென்னை மக்கள் எனக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை முழுவதும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இன்று தமிழகத்தில்; தொடங்கிவைக்கப்படும் திட்டங்கள் மக்களுக்கு அதிக பயனுள்ளவையாக இருக்கும்” என்றார்.

மோடி
மோடி

தமிழக விவசாயிகள் குறித்துப் பேசிய மோடி, ``தமிழக விவசாயிகள் நீர் மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்டுவருகிறார்கள். இந்த இடத்தில் தமிழ்ப் பெண் கவிஞர் ஔவையார் கூறியதை மேற்கோள்காட்டுகிறேன்...

வரப்பு உயர நீர் உயரும்.

நீர் உயர நெல் உயரும்.

நெல் உயரக் குடி உயரும்.

குடி உயரக் கோல் உயரும்”

என்றார்.

14 Feb 2021 12 PM

மோடி தொடங்கி வைத்த திட்டங்கள்!

Live Updates: பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி தனியாக ஆலோசனை?! - துணை முதல்வர் பங்கேற்கவில்லை எனத் தகவல்

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஐ.ஐ.டி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் முதல் கட்டத்தில் 1,000 கோடி ரூபாய் செலவில் சென்னை அருகே உள்ள தாயூரில் இந்த வளாகம் கட்டப்படும்.

சென்னை கடற்கரைக்கும் அட்டிப்பட்டுக்கும் இடையிலான நான்காவது ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ . 293.40 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த 22.1 கி.மீ பிரிவு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக பயணிக்கிறது.

14 Feb 2021 12 PM

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்!

Live Updates: பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி தனியாக ஆலோசனை?! - துணை முதல்வர் பங்கேற்கவில்லை எனத் தகவல்

துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை தொடர்ந்து சிறப்புரை வழங்கிய முதல்வர் பழனிசாமி, ``எனது அழைப்பை ஏற்று தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்கும் நன்றிதெரிவித்து கொள்கிறேன். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமரின் முயற்சிக்கு தமிழக அரசின் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றவர் `சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

14 Feb 2021 12 PM

மோடிக்கு நன்றி தெரிவித்த துணை முதல்வர்!

Live Updates: பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி தனியாக ஆலோசனை?! - துணை முதல்வர் பங்கேற்கவில்லை எனத் தகவல்

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி அளித்த ஆதரவில் அவர் உறுதியுடன் இருந்தார். பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது. மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன” என்றார். மேலும் ``மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி” தெரிவித்ததுடன், காவிரி பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது” என்றார்.

14 Feb 2021 11 AM

நேரு விளையாட்டு அரங்கத்தில் மோடி!

Live Updates: பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி தனியாக ஆலோசனை?! - துணை முதல்வர் பங்கேற்கவில்லை எனத் தகவல்

இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி, அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் வந்தார். பின்னர் அங்கிருந்து கால் மூரல் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தந்தார். அங்கு அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது முழுக்க முழுக்க உள்நாட்டிலே தயாரானது.

தொடர்ந்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செய்தார். பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி வரவேற்றார். அவருக்கு கிருஷ்ணர் சிலை ஒன்றையும் பரிசாக அளித்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அமைச்சர்கள், பா.ஜ.க கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

14 Feb 2021 11 AM

அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் டு நேரு விளையாட்டு அரங்கம்!

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்பாளர்கள்.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்பாளர்கள்.

சென்னை அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு அரங்கத்துக்கு செல்கிறார். வழியில் கூடி இருந்த கட்சி தொண்டர்களையும் மக்களையும் பார்த்து கையசத்த படி சென்றார் பிரதமர் மோடி. முன்னதாக ஹெலிகாப்டரில் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்தார் மோடி.

14 Feb 2021 10 AM

சென்னை வந்தார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, தற்போது சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். அவரை விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி வரவேற்றார். அங்கிருந்து விழா நடைபெறும் அடையாறு கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார் பிரதமர்.

14 Feb 2021 10 AM

பிரதமர் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள்!

பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி
பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி

சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, த.மா.கா கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். பிரதமர் நிகழ்ச்சியில் தங்களுக்கும் அழைப்பு வந்ததாக தெரிவித்தனர் கூட்டணி கட்சி நிர்வாகிகள். இது அரசு நிகழ்ச்சி என்பதால், பிரதமர் அரசியல் பேச வாய்ப்பில்ல என தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் ரவி தெரிவித்திருந்த நிலையில் தற்போது கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் வரவால், சூடுப்பிடித்துள்ளது பிரதமரின் சென்னை விசிட். மோடியின் சென்னை வருகையின் போது கூட்டணி இறுதி செய்யப்படுமா என்பது வந்து சென்ற பிறகே தெரியும்.

14 Feb 2021 9 AM

சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி, இன்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார். இன்று காலை 10.30 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடி, அரசு விழாவில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னையில் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று தமிழகம் வருகை தொடர்பாக ட்வீட் செய்திருந்த பிரதமர், ``பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை(இன்று) நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார், மதியம் தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு கேரளா செல்கிறார் பிரதமர் மோடி.

அடுத்த கட்டுரைக்கு