Published:Updated:

க்ளோஸ் டோர் மேட்ச்.. வீழ்ந்த சென்னை.. ஐஎஸ்எல் கால்பந்தில் சாம்பியன் ஆன கொல்கத்தா! #NowAtVikatan

@IndSuperLeague
@IndSuperLeague

14-3-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளில் தொகுப்பு...!

14 Mar 2020 9 PM

கொல்கத்தா சாம்பியன்!

ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப்போட்டியில் சென்னை அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுளள்து. கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது மூன்றாவது முறையாகும். இன்றைய மேட்சில் கொல்கத்தா அணியின் சேவியர் ஹெர்னாண்ட்ஸ் 2 கோல் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். கொரோனா எதிரொலி காரணமாக இந்த மேட்ச் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

14 Mar 2020 8 PM

வந்து வான்ட்டடா மாட்டிராத... மாஸ்டர் விஜய்யின் `வாத்தி ரெய்டு' சிங்கிள்

மாஸ்டர் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நாளை வெளியாகவுள்ள நிலையில் இன்று படத்தின் மூன்றாவது சிங்கிளாக `வாத்தி ரெய்டு' பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

14 Mar 2020 3 PM

பேரிடராக கருதி நடவடிக்கை எடுங்கள்!

கொரோனா தாக்கத்தை பேரிடராக கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கொரோனா பாதிப்பை பேரிடர் சூழலாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில பேரிடர் ஆணையத்தின் மூலம் தேவையான நிதி மற்றும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

14 Mar 2020 12 PM

விடுமுறை அறிவிப்பு நிறுத்திவைப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு இந்த மாதம் 31-ம் தேதி வரை விடுமுறை வழங்கி பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று அந்த உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மழலையர் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் தமிழக அரசுடன் விவாதிக்க வேண்டியுள்ளதால் இந்த உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது!

14 Mar 2020 11 AM

`அனைவருக்கும் நன்றி!' - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினி இருதினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக விளக்கினார். இதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், இன்று அவர் ட்விட்டரில், ``அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டுபோய் சேர்த்த ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் சமூக வலைதளங்களுக்கும் மன்ற உறுப்பினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி" என பதிவிட்டுள்ளார்!

14 Mar 2020 10 AM

கலால் வரி.... அதிகரிக்கும் பெட்ரோல், டீசல்!

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த சில நாள்களாக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு குறைக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தற்போது கண்டுள்ள கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால் மலிவான விலையில் மக்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். கச்சா எண்ணெய் விலை குறைந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என்ற குற்றச்சாட்டும் மத்திய அரசின் மீது வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. விலை குறைப்பை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு