Published:Updated:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: `சொன்ன வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றிட வேண்டும்!’ - டிடிவி தினகரன் #NowAtVikatan

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

14-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

14 Jun 2021 12 PM

`சொன்ன வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றிட வேண்டும்!’

இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ``தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இப்படி உயர்ந்து கொண்டே செல்வதால், விலைவாசியும் உயர்ந்தபடியே இருக்கிறது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதையெல்லாம் உணர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

'பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைப்போம்' என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

14 Jun 2021 11 AM

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம்!

ஏ.கே.எஸ்.விஜயன்
ஏ.கே.எஸ்.விஜயன்

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநியாக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ் விஜயன் நியமனம் செய்யப்பட்டிருக்கிரார். ஏ.கே.எஸ் விஜயன் அடுத்த ஓராண்டுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநியாக இருப்பார் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்திருக்கிறார். வரும் 17 -ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ள நிலையில், இந்த நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

14 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து ஏழாவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,95,10,410 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,921. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,74,305-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா முடிவுகள்
கொரோனா முடிவுகள்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,81,62,947-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 9,73,158 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,19,501 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 25,48,49,301 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

14 Jun 2021 7 AM

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது!

தமிழகத்தில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொற்று பரவல் அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாட்டங்களிலும் கடந்த ஊரடங்கை காட்டிலும் சில கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. தொற்று பாதிக்குக் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், டாஸ்மாக் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே டீக்கடைகள், இனிப்பு - கார தின்பண்ட கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுவந்தன. அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று முதல் அந்தக் கடைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளார். இன்று காலை முதல் இந்தத் தளர்வுகள் அமலுக்கு வந்தன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் முகக்கவசம் அணிந்து, பாதுகாப்புடன் தேவைகளுக்கு மட்டும் வீட்டைவிட்டு வெளியே வருமாறு அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

புதிய ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி... முழு விவரம்கீழே உள்ள லிங்க்கில்..!

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு: டாஸ்மாக், பள்ளிகள்..! - எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்?
அடுத்த கட்டுரைக்கு