Published:Updated:

CoronaVirus: தமிழகத்தில் 3.26 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,890 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

Corona
Corona

14.8.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

14 Aug 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,556 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை, 2,67,015 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 117 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 5,514ஆக அதிகரித்துள்ளது.

Corona
Corona

சென்னையில் மேலும் 1,187 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,187 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,260 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா... குணமான பின்னும் தொடரும் சிக்கல்கள்... ஓர் அலசல்
14 Aug 2020 5 PM

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் பின்னடைவு!

கொரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று பாதிப்பு தனக்கு இருப்பதாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இந்தநிலையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அவர் உயிர்காக்கும் மருந்துகள் உதவியோடு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 Aug 2020 4 PM

அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி!

அசோக் கெலாட், ராகுல் காந்தி, சச்சின் பைலட்
அசோக் கெலாட், ராகுல் காந்தி, சச்சின் பைலட்

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த அரசியல் குழப்பங்கள் அனைவரும் அறிந்ததே. பல்வேறு பரபரப்பு சம்பவங்களுக்குப் பிறகு, சட்டசபை இன்று கூடியது. அப்போது முதல்வர் அசோக் கெலாட் தனக்கு 125 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். சச்சின் பைலட், அசோக் கெலாட் இடையே ஆன பிரச்னை முடிவுக்கு வந்ததால், குரல் வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. இதை சபாநாயகர் அறிவித்தார்.

இதனால் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளது. குறைந்தது இன்னும் 6 மாதத்துக்கு அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

14 Aug 2020 2 PM

இ-பாஸ்: தளர்வுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் இ-பாஸ் வழங்குவதில் பல்வேறு கெடுபிடிகள் இருந்து வந்த நிலையில் தற்போது, ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பின் மூலம் திருமணம், துக்க நிகழ்வு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது.

முதல்வர் அறிவிப்பு
முதல்வர் அறிவிப்பு

``வரும் 17.8.2020 முதல் குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டையுடன் அலைபேசி எண் சேர்த்து இ-பாஸ் விண்ணப்பித்தால் உடனடியாக பாஸ் வழங்கப்படும்” என முதல்வர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தவிர்க்க முடியாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பம் செய்து பெற்று, பயணிக்க முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

14 Aug 2020 12 PM

பிரசாந்த் பூஷன் குற்றவாளி!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புலம்பெயர்த்த தொழிலாளர்கள் வழக்கு முதல் பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்றம் திறம்பட விசாரிக்கவில்லை என்றும், நீதிபதிகளின் செயல்பாட்டை சமூக வலைதளங்களில் விமர்சித்தது தொடர்பாகவும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பிரசாந்த் பூஷனை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அவரது தண்டனை தொடர்பான வாதங்களை ஆகஸ்ட் 20-ம் தேதி அன்று நடைபெறும்.

14 Aug 2020 10 AM

இந்தியாவில் 24 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,61,191 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 64,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,007 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 48,040 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17,51,556 ஆகவும் உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு