Published:Updated:

புதிதாக 5,752 பேருக்குத் தொற்று! - தமிழகத்தில் 5.08 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு #NowAtVikatan

Fight against Covid-19
Fight against Covid-19

14-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

14 Sep 2020 6 PM

தமிழகத்தில் 5.08 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,08,511-ஆக உயர்ந்துள்ளது.

protection from covid-19
protection from covid-19

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 8,434-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 5,799 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,53,165 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் 46,192 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சையில் இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் இன்று 991 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 1,49,583 ஆக உயர்ந்துள்ளது.

``கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து பரவியதுதான்!" - மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் வைராலஜிஸ்ட்
14 Sep 2020 3 PM

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம்!

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கையில் நீதித்துறையின் மாண்பைக் குலைக்கும் வகையில் கருத்துகள் இடம்பெற்றிருந்ததாகக் கூறி அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வலியுறுத்தியிருந்தார். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

இந்தநிலையில், நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் கூட்டாக தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன் மற்றும் ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில், ``நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதைப் போல் நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை. மாணவர்கள் 4 பேர் மரணம் தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்திருந்த கருத்துகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவரது அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையுடன் விட்டுவிட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு: நடிகர் சூர்யா அறிக்கை.. `நீதிமன்ற அவமதிப்பு’ என தலைமை நீதிபதிக்கு கடிதம்
14 Sep 2020 10 AM

தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்குக்கு மாற்றப்பட்டது. முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாஸ்க் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மூன்று நாள் மட்டுமே நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் நீட் தற்கொலைகள், கிசான் திட்ட முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு 'Ban Neet, Save Tn Students' என்ற முகக் கவசத்துடன் கலந்து கொண்டனர்.

14 Sep 2020 10 AM

மக்களவையில் இரங்கல் தீர்மானம்!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, கன்னியாகுமரி எம்.பி., வசந்தகுமார் ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது

14 Sep 2020 8 AM

தி.மு.க எம்.பி-க்கள் போராட்டம்!

கொரோனா பரவலுக்குப் பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. முன்னதாக நாடாளுமன்ற வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு மக்களவை கூடியதும் மறைந்த உறுப்பினர்கள் பிரணாப்முகர்ஜி, வசந்தகுமாருக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். 2020-21 ம் நிதியாண்டிற்கு தேவையான துணை மானிய கோரிக்கை மீதான அறிக்கை மற்றும் தீர்மானத்தை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைக்க உள்ளார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி-க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய மாஸ்க்கை அணிந்து டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு