Published:Updated:

வயது 14... ஒரு கம்பெனிக்கு சி.இ.ஓ... வருமானத்தில் ஆதரவற்றோருக்கு உதவி - `ரோல்மாடல்’ சரண்!

சரணுக்கு 14 வயதுதான் ஆகிறது. பேச்சிலும் செயலிலும் அத்தனை உற்சாகம். டிரம்மரான சரண், இந்தக் கொரொனா லாக்டௌனில், ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறார்.

அதன் மூலம் ஈட்டிய தொகையில் பெரும்பகுதியைக் கொண்டு சிரமப்படும் மக்களுக்கு உணவும், மளிகைப் பொருள்கள் வாங்கி வழங்கியிருக்கிறார்.

சென்னை ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த சரண், `டிரம்ஸ் சர்க்கிள் என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். கைகளாலும் கால்களாலும் தாளமிட்டுக் கொண்டே பேசுகிறார்.

``இந்த வருஷம் ஒன்பதாம் வகுப்பு போறேன். பிசினஸ்மேன் ஆகணுங்கிறதுதான் என்னோட ஆசை. இப்போ அது நிறைவேறிக்கிட்டு இருக்கு. என்னோட `டிரம்ஸ் சர்க்கிள்' கம்பெனிக்கு நான்தான் சி.இ.ஒ" என்று புன்னகைக்கிறார் சரண்.

``அப்பா சர்ப்ரைஸ் பிளானிங் பிசினஸ் பண்ணிட்டு இருக்காங்க. அம்மா ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கிறாங்க. தங்கச்சி லயாவுக்கு 4 வயசு ஆகுது. ரொம்ப நல்லா பாட்டுப் பாடுவா.

ஜூம் கால்
ஜூம் கால்

தட்டு, தம்ளரை வெச்சுத்தான் ஆரம்பத்தில தாளம் போட பழகினேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு டிரம்ஸ் வகுப்புல சேர்த்துவிட்டாங்க. டிரம்ஸ் கத்துக்கிட்டது மட்டுமல்லாமல் பாங்கோ, ஜிம்பே, ககூன், பறை, டிரம்ஸ், துடும்புனு நிறைய கருவிகள் வாசிக்கக் கத்துக்கிட்டேன். ஆனா, நான் டிரம்ஸ் சம்பந்தமா எந்தப் போட்டிக்கும் போனதில்ல. எந்தப் பரிசும் வாங்கினது இல்ல. எங்க வீட்டுலயும் என்னைக் கட்டாயப்படுத்தினது இல்ல. திறமைக்கு அங்கீகாரம் பாராட்டுகள்தான், பரிசுகள் இல்லை. நம்ம திறமையை வெளிப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கு.

`காலத்துக்குத் தகுந்தமாதிரி நாமும் அப்டேட் ஆகிட்டே இருந்தாதான் இந்த உலகத்தில் சர்வைவ் பண்ண முடியும்'னு அப்பா சொல்லுவாங்க. அந்த வார்த்தைதான் எல்லாத்துக்கும் காரணம். `சின்ன பையன் சின்ன பையன் மாதிரி இரு'னு சொல்லி பசங்களை வீட்டில் யோசிக்கவே விடமாட்டாங்க. ஆனா, எங்க வீட்டில் எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. நம்ம மனசில் நினைக்கிறதை வெளிப்படையா பேசுனாதான் தப்பானதை திருத்திக்க முடியும். அப்போதான் நம் தன்னம்பிக்கை அதிகமாகும். அதுக்கு எனக்கு எங்க வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. எந்த ஒரு வேலையைச் செய்யவும் கைடன்ஸ் கொடுப்பாங்க.

பழைய வாட்டர் கேன் பயன்படுத்தி டிரம் தயாரிப்பு
பழைய வாட்டர் கேன் பயன்படுத்தி டிரம் தயாரிப்பு

ஒரு வேலையை நாம தனியா எடுத்துச் செய்யும்போதுதான் தப்புகள் வரும். அப்போதுதான் அது மறக்க முடியாத பாடமாக மாறும். `நீ டாக்டர் ஆகணும், பெரிய வக்கீல் ஆகணும்'னு எனக்கு எந்த நிர்பந்தத்தையும் எங்க வீட்டுல கொடுக்கல. `படிப்பு, வாழ்க்கைதான். ஆனா படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை'னு அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. அதனால் மார்க் பத்தி எந்த பயமும் இல்லாமல் ஸ்கூல் பாடத்தோட சேர்த்து மியூஸிக்லயும் என்னால் கவனம் செலுத்த முடிகிறது" என்று கண்கள் மிளிரப் பேசும் சரண் தன்னுடைய டிரம்ஸ் பயணம் பற்றிப் பகிர்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எங்க அப்பா ஒரு பிசினஸ் மேன். எங்க குடும்பத்திலேயே அவங்கதான் முதலில் பிசினஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. அப்பாவை பார்த்து எனக்கு ஆசைவந்துச்சு. என்னோட 10 வயசுல அப்பாகிட்ட, `நானும் பிசினஸ் பண்ணட்டுமா'னு கேட்டேன். அப்பா மறுப்பு சொல்லல. அதுதான் என் ஆர்வம்னு புரிஞ்சுக்கிட்டு, அவங்க ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி கார்ப்ரேட் நிறுவனங்களில் டிரம்ஸ் ஈவெண்ட் நடத்த வாய்ப்பு வாங்கிக் கொடுத்தாங்க. நிறைய குழப்பங்கள் பண்ணிருக்கேன். தவறுகள் நடந்திருக்கு. ஆனா அதெல்லாம் ஒரு பாடம்தான். சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் குழந்தைகளுக்கான பிசினஸ் கோர்ஸும் படிச்சேன். டிரம்ஸ் வெச்சு புதுசு புதுசா எப்படி ஈவெண்ட் பண்ணலாம். ஒவ்வொரு ஈவெண்ட்டிலும் என்ன புதுசா பண்ணலாம்னு நானே பார்த்து பார்த்து கிரியேட் பண்ணதுதான் என்னுடைய பிசினஸ்.

பழைய பொருள்களில் டிரம் தயாரிப்பு
பழைய பொருள்களில் டிரம் தயாரிப்பு

இதுவரை 25 ஈவெண்டுக்கு மேல பண்ணியாச்சு. நிறைய ஈவெண்ட்கள் பண்ண ஆரம்பிச்சதால் `டிரம்ஸ் சர்க்கிள்'னு நிறுவனத்தை ஆரம்பிச்சேன். ஈவெண்ட் பிளான் பண்றதிலிருந்து, அதை நடத்தி முடிக்கிறது வரை எல்லாமே என்னோட பொறுப்புதான். இதுக்கு அப்பா வாங்கிக்கொடுத்த ஆரம்ப கால வாய்ப்புகளைத் தவிர யாருடைய பின்புலமும் கிடையாது. விடுமுறை நாளில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குனு சில ஈவெண்ட்களும் நடத்திட்டு இருக்கேன்.

நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக சேர்த்துவைத்த பணம் அது! -கொரோனாவுக்கு நிதி கொடுத்த 12 வயது சிறுவன்

நிறுவனங்களில் நடத்தும் ஈவெண்ட்களில் கிடக்கிற காசை புதுபுதுசான மேளம் சார்ந்த கருவிகள் வாங்க இன்வெஸ்ட் பண்ணுவேன். இப்போ என்கிட்ட 100 ககூன், 2 துடும்பு, ஒரு டிரம்ஸ் செட், ஒரு பறை இருக்கு" என்றவரிடம் கொரோனா நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கத்தொடங்கியது பற்றிக் கேட்டோம்.

``கொரோனா நேரம் ஊரடங்கு விதிச்சதால் அப்பாவுக்கு பிசினஸ் கொஞ்சம் சரியா போகல. வீட்ல உட்கார்ந்து புலம்பிட்டு இருந்தாங்க. எனக்கும் ஈவெண்ட்ஸ் இல்ல. அப்போதான் புதுசா என்ன பண்ணலாம்னு யோசிச்சு டிரம்ஸ்க்கான ஆன்லைன் க்ளாஸ் ஆரம்பிச்சேன். ஒரு ஆளுக்கு 199 ரூபாய். 5 வயசுக்கு மேல் இருக்க குழந்தைகள் சேரலாம். zoom வழியா மொத்தம் ஐந்து நாள் ஆன்லைன் வகுப்பு நடக்கும். முதல் வகுப்பில் வீட்டிலேயே ஒரு டிரம் எப்படி தயார் செய்யணும்ங்கிறது மாதிரி அடிப்படை விஷயங்களைக் கத்துக்கொடுத்துருவேன்.

இந்த ஆன்லைன் க்ளாஸ்ஸோட அடிப்படை `டும் டக்கா' என்ற வார்த்தைதான். முதலில் டிரம்ஸ்ல எப்படி `டும், டக்கா' ஓசையை வரவைக்கணும்னு சொல்லிக்கொடுத்துருவேன். அடுத்தடுத்த நாள் வகுப்புகளில் ஒரு பாட்டுல இருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் `டும், டக்கா'னு ஓசையில் மாத்தி அதை எப்படி வாசிக்கணும்னு சொல்லிக்கொடுப்பேன். இதுவரை 160 பேர் பேஸிக் வகுப்பும் 20 பேருக்கு மேல் அட்வான்ஸ் வகுப்புகளும் முடிச்சிருக்காங்க. இன்னும் ஆன்லைன் வகுப்புகளுக்கு நிறைய பேர் கேட்டுட்டு இருக்காங்க.

டும், டக்கா டிரம்ஸ்
டும், டக்கா டிரம்ஸ்

எனக்கு கிடைத்த பணத்துல ஆதரவற்றவர்களுக்கு உணவு, மளிகைப் பொருள்கள் வாங்கிக் கொடுக்குறேன். ஒரு பகுதியை என்னோட ஸ்கூல் ஃ பீஸ்க்காக வெச்சுருக்கேன். படிப்பைத் தாண்டிய இன்னொரு உலகம் இருக்கு. அது நம்ளோட கனவுகளுக்கானது. கனவுகளுக்கு உயிர் கொடுப்போம்" என்று தம்ஸ் அப் செய்து விடையளிக்கிறார் சரண்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு