Published:Updated:

ஆணையம் வந்தது... தண்ணீர் வரவில்லை... இந்த ஆண்டும் பொய்த்துப்போன குறுவைச் சாகுபடி!

ஆணையம் வந்தது... தண்ணீர் வரவில்லை... இந்த ஆண்டும் பொய்த்துப்போன குறுவைச் சாகுபடி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆணையம் வந்தது... தண்ணீர் வரவில்லை... இந்த ஆண்டும் பொய்த்துப்போன குறுவைச் சாகுபடி!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த், க.பாலாஜி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறந்துவிடும் என்ற நம்பிக்கையோடு ஆயிரக்கணக்கில் போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, காவிரி வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்த மத்திய அரசு, காவிரி மேலாண்மை  ஆணையம் அமைத்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது. 

ஆணையம் வந்தது... தண்ணீர் வரவில்லை... இந்த ஆண்டும் பொய்த்துப்போன குறுவைச் சாகுபடி!

இது, ‘எங்களால்தான் கிடைத்தது’ எனப் பெருமையாகச் சொல்லிக்கொண்டு வருகிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இன்னமும் டெல்டா பகுதி விவசாயிகளுக்குக் கானல் நீராகத்தான் இருக்கிறது, காவிரி நீர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆம், இந்த ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறக்கமுடியாத நிலை இருப்பதால், குறுவைச் சாகுபடிக்குத் தேவையான நீர் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘நசுவிணி ஆறு படுகை அணைப் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர்’ வீரசேனன், “தொடர்ந்து 7-வது முறையாக இந்த ஆண்டும் குறுவை நெல் சாகுபடியைக் கைவிட வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்ட ஆண்டுகளில், ஜூன் மாதம் குறுவைச் சாகுபடியைத் தொடங்கி, அக்டோபர் தொடக்கத்தில் நெல் அறுவடை செய்து... தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆறு ஆண்டுகளாக அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 38.45 அடிதான் உள்ளது. 90 அடி இருந்தால்தான் குறுவைச்சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க முடியும். ‘தண்ணீர் தர மாட்டோம்’ எனக் கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதியாகத் தெரிவித்துவிட்டார். உச்சநீதிமன்றத்தின் மூலம் காவிரிப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதால், இனி நாம் கர்நாடக மாநிலத்திடம் நேரடியாகத் தண்ணீர் கேட்க முடியாது. காவிரி மேலாண்மை ஆணையத்தில்தான் முறையீடு செய்ய முடியும். குறுவைக்குத் தண்ணீர் திறப்பது குறித்துக் காவிரி மேலாண்மை ஆணையம்தான் கூட்டம் நடத்தி முடிவெடுக்க முடியும். காவிரி மேலாண்மை ஆணையத்துக்குத் தமிழக அரசு மட்டும்தான் பிரதிநிதியைப் பரிந்துரை செய்துள்ளது. கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் தங்களது பிரதிநிதிகளைப் பரிந்துரை செய்தால்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடக்கும். அதற்கு இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டு ஆணையம் கூட்டப்பட்டாலும்கூட, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வருமா என்பதும் கேள்விக்குறிதான். பல ஆண்டுகளாகத் தண்ணீர் இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடிநீர் அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. காவிரித் தண்ணீர் வந்தால்தான் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவுக்காவது உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியும். காவிரி தண்ணீர் வரவில்லையென்றால், இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம்” என்றார்.
‘அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க’த்தின் தஞ்சாவூர் மாவட்டத் துணைத்தலைவர் வெ.ஜீவக்குமார், “ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்குரிய நீரைத் தர வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டது. 

ஆணையம் வந்தது... தண்ணீர் வரவில்லை... இந்த ஆண்டும் பொய்த்துப்போன குறுவைச் சாகுபடி!

ஆனால், மத்திய அரசு உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே தாமதப்படுத்தியிருக்கிறது. ஆணையத்துக்கு நிரந்தரத்தலைவரை நியமிக்காமல், மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி. சிங்கைத் தற்காலிகத் தலைவராக நியமித்திருப்பதும் மோசடிதான். யு.பி.சிங், எப்போதுமே தமிழ்நாட்டுக்கு எதிராகவே சிந்திக்கக்கூடியவர். அவர் கர்நாடகா மாநிலத்துக்குத்தான் சாதகமாக நடந்துகொள்வார். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது’ என உச்ச நீதிமன்றத்தில் பிடிவாதம் செய்தவர் யு.பி.சிங். இந்தியாவில் மற்ற ஆறுகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மேலாண்மை வாரியங்களில் எல்லாம் தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ ஓய்வுபெற்ற நீதிபதிகள்தான் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டுக்கு 4 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் எனக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீர் வளத்துறை செயலாளர் என்ற முறையிலோ அல்லது காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவர் என்ற முறையிலோ அந்தத் தண்ணீரைப் பெற்றுதர யு.பி.சிங் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆணையத்தால் தமிழ்நாடு இன்னும் பல மோசமான ஆபத்துகளைச் சந்திக்கவுள்ளது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி தண்ணீர் வழங்க உத்தரவிடப் பட்டிருந்தது. அதனை உச்சநீதிமன்றம் 177.25 டி.எம்.சி-யாகக் குறைத்தது. குறைக்கப்பட்ட 14.75 டி.எம்.சி தண்ணீர், எந்த மாதத்தில் குறைக்கப்படும் எனத் துல்லியமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப் படவில்லை. 

ஆணையம் வந்தது... தண்ணீர் வரவில்லை... இந்த ஆண்டும் பொய்த்துப்போன குறுவைச் சாகுபடி!

இதைக் கர்நாடகா, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு... ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களின் ஒதுக்கீட்டில் கை வைக்க வாய்ப்புள்ளது. இதனால், நான்கு லட்சம் ஏக்கர் பரப்பில் நடைபெற வேண்டிய குறுவை நெல் சாகுபடியை இழக்க நேரிடும்.

இதனால், இந்த ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும். காவிரி நீர் முறையாகக் கிடைக்காததால், டெல்டா மாவட்டங்களில் ஏராளமான விளைநிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. வீட்டு மனைகளாகவும் மாறிக் கொண்டு இருக்கின்றன” என்றார், வேதனையுடன்.

ஆற்றில் நீர் வருமா அல்லது கானல் நீராகவே போய்விடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.