Published:Updated:

நாகையில் மையம் கொண்டுள்ள ‘கஜா’ - 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சத்யா கோபாலன்
நாகையில் மையம் கொண்டுள்ள ‘கஜா’ - 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
நாகையில் மையம் கொண்டுள்ள ‘கஜா’ - 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தில் கரையைக் கடக்கவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது பற்றிப் பேசியபோது, ``கஜா புயல் நாகை மாவட்டத்துக்கு வடகிழக்கில் சுமார் 820 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது வரும் 15-ம் தேதி முற்பகலில் சென்னை - நாகை இடையே கரையைக் கடக்கவுள்ளது. அதனால் 14-ம் தேதி மாலை முதல் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும், இந்த மாவட்டங்களில் கன முதல் மிகக் கன மழை பெய்யக்கூடும். கஜா புயல் காரணமாக வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். காரைக்கால், நாகை, புதுச்சேரி ஆகிய கடலோர மாவட்டங்களில் கடல் சற்று சீற்றத்துடன் காணப்படும். மேலும், இந்தப் பகுதிகளில் இயல்பைவிட கடல் மட்டம் 1 மீட்டர் வரை அதிகரித்துக் காணப்படும். சென்னையைப் பொறுத்தவரை கஜா புயலால் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. மிதமான காற்று வீசக்கூடும். மேலும், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து ரெட் அலர்ட் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், `தற்போது விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் பொதுமக்களுக்கானது அல்ல. அந்தப் பகுதியில் உள்ள நிர்வாகத்துக்கானது. இது தொடர்பான விளக்கம் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புயலினால் முழுத் தமிழகத்துக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. மேலும், இதேபோன்ற சிவப்பு நிறம் வெயில் காலங்களில் அதிகம் வெயில் இருக்கும் பகுதியைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படும். அதனால் இது நிர்வாகத்துக்காகவே வழங்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என விளக்கமளித்துள்ளார்.