Published:Updated:

`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்" - காவிரி ரதயாத்திரைக் குழுவினர்!

கே.குணசீலன்
`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்" -  காவிரி ரதயாத்திரைக் குழுவினர்!
`காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்" - காவிரி ரதயாத்திரைக் குழுவினர்!

காவிரி ஆற்றைப் பாதுகாக்க எட்டு ஆண்டாக ரதயாத்திரை பயணம் நடைபெற்று வருகிறது. இதில் காவிரியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காவிரியில் தடுப்பணை கட்டாததால் சுமார் 100 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கிறது. காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் வந்த காவிரி ரதயாத்திரைக் குழுவினர் தெரிவித்தனர்.

அகில பாரதிய துறவியர் சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் காவிரி விழிப்பு உணர்வு ரத யாத்திரை கடந்த மாதம் 23-ம் தேதி கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் தொடங்கியது. இந்த யாத்திரை வரும் 15-ம் தேதி பூம்புகாரி்ல் நிறைவடைய உள்ளது. காவிரி ஆறு ஓடும் கரையோரப் பகுதிகள் வழியாக இந்த ரத யாத்திரை பயணம் வந்து கரையோர ஊர்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும்பகுதிகளில் காவிரி ஆற்றினை மாசுபடுத்தக்கூடாது, தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ரதயாத்திரை குழுவினர் பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வருகிறனர். மேலும், இந்த ரதத்தில் காவிரி அன்னையின் சிலை அமைக்கப்பட்டு அதற்கு பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது. காவிரி அன்னை ரதத்துடன் கும்பகோணம் வந்த அகில பாரதிய துறவியர்கள் சங்கத் தலைவர் ராமானந்தா சுவாமிகள், ஒருங்கிணைப்பாளர் வேதாந்தானந்தா சுவாமிகள் மற்றும் ஏராளமான துறவிகளை, மாசிமக ஆரத்தி பெருவிழா மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமகம் அறக்கட்டளையைச் சேர்ந்த பொறுப்பளார்கள் வரவேற்றனர்.

பின்னர் ரதத்தில் உள்ள காவிரி அன்னைக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து  பாலக்கரை காவிரி படித்துறையில் காவிரி அன்னைக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அகில பாரதிய துறவியர்கள் சங்கத் தலைவர் சுவாமி இராமானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``நீர் நிலைகளைத் தூய்மையாக வைத்திருத்தல், பராமரித்து பாதுகாத்தல், காவிரிக்கு நன்றி செலுத்தி வணங்குதல் ஆகியவை முக்கியமான நமது கடமையாகும். இது குறித்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக  8 ஆண்டாக காவிரி ரத யாத்திரை பயணம் நடைபெற்று வருகிறது.

காவிரியில் தடுப்பணை கட்டாததால் சுமார் 100 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்தது. இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு, நீர் மேலாண்மைக்கு என தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். ஆனால் நீர் மேலாண்மை குறித்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது வேதனைக்குரியது. தமிழக அரசு நீர் ஆதாரத்தைப் பாதுகாக்காமலும், கவனம் செலுத்தாமல் இருப்பது அரசுக்குப் பின்னடைவாக இருக்கும். காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.