Published:Updated:

``25 ஆண்டுகள் வெளிநாட்டில் சம்பாதித்ததை `கஜா’ அழித்துவிட்டது!’’ - முத்துக்குமரன்

தென்னந்தோப்பில் 75% மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. மிச்சமுள்ள தென்னைகளின் மேற்பகுதி முறிந்துவிட்டன. கரும்புத்தோட்டம் மொத்தமும் ஒடிந்து சாய்ந்துவிட்டது. நெல் வயக்காடு புயலில் சிக்கி, தண்ணீரில் மூழ்கி வீணாகிப்போய் கிடக்கிறது.

``25 ஆண்டுகள் வெளிநாட்டில் சம்பாதித்ததை `கஜா’ அழித்துவிட்டது!’’ - முத்துக்குமரன்
``25 ஆண்டுகள் வெளிநாட்டில் சம்பாதித்ததை `கஜா’ அழித்துவிட்டது!’’ - முத்துக்குமரன்

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் லட்சக்கணக்கான மக்கள் எதிர்காலத்தைத் தொலைத்து பரிதவித்து நிற்கின்றனர். குடும்பத்தைவிட்டுப் பிரிந்து 25 ஆண்டுகள் சிங்கப்பூரில் பணியாற்றிச் சம்பாதித்த சொத்து, கஜா புயலில் சிக்கி தன் கண் முன்னே சின்னாபின்னமானதைப் பார்த்து நிலைகுலைந்து நிற்கிறார் முத்துக்குமரன்.

``பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள பெரியகோட்டை கிராமத்திலிருந்து எனது 17 வயதில் சிங்கப்பூருக்குக் கூலித்தொழிலாளியாக கான்கிரீட்டுக்கு கம்பி கட்டும் பணிக்காகச் சென்றேன். அந்த வேலை கிடைப்பதற்காக ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கித்தான் கொடுத்தேன். கம்பி கட்டும் பணிக்குப் பிறகு, கார்பென்டர், கொத்தனார் எனப் படிப்படியாக எனது பணியில் உயர்ந்து, பெயின்டராகப் பல வருடங்கள் பணியாற்றினேன். இறுதியாக, அதே நிறுவனத்தில் பாதுகாப்புத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினேன். தொடக்கத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது தினமும் 14 டாலர் சம்பளம் வாங்கினேன். அந்தச் சம்பளத்தில் மிகச் சிக்கனமாகச் செலவழித்ததுபோக சில ஆயிரங்கள் மிச்சம்பிடித்து வீட்டுக்கு அனுப்பிவந்தேன். நீண்ட காலம் கடுமையாக உழைத்து, படிப்படியாக முன்னேறி, இந்தியாவில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசைக்காகவே, 2016-ம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினேன். திரும்பிவரும்பொழுது இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சம் ரூபாயைச் சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தேன்.

என் உடன்பிறந்த நான்கு அக்காக்களில்ஒருவருக்கு எனது சம்பாத்தியத்தால்தான் திருமணம் நடந்தது. குடும்பப் பாரம்பர்யச்சொத்தாக மூன்று ஏக்கர் நிலம் இருந்திருக்கிறது. எனக்கு விவசாயம்தான் உயிர். நான் சம்பாதித்த பணத்திலிருந்து பத்து ஏக்கர் நிலம் வாங்கினோம். அடுத்து இன்னொரு பத்து ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கினோம். ஏற்கெனவே இருந்த 3 ஏக்கர் தென்னை மரங்களோடு கூடுதலாக இரண்டு ஏக்கரில் தென்னை போட்டுள்ளோம். 30 வருஷ தென்னையும், 12 வருஷ தென்னையும் எனது தோப்பில் இருக்கின்றன. கரும்பு ஒரு ஏக்கருக்கு விளைய வைத்துள்ளோம். மிச்சமுள்ள நிலத்தில் நெல் விளைய வைத்துள்ளோம். எனக்கு ஒரு மகன். இந்த விவசாயத்திலிருந்து வரும் வருமானத்தில்தான் என் மகனைப் படிக்க வைக்கிறேன். 

விவசாயம்போக, விபார்ம் என்ற பெயரில் நாட்டுக்கோழிப்பண்ணை வைத்துள்ளேன். கோழிப்பண்ணை வைப்பதற்காக அரசாங்கத்தில் பயிற்சி எடுத்து அவர்களின் ஆலோசனைப்படி மானிய உதவியோடு கிட்டத்தட்ட 500 கோழிகள்வரை வளர்த்துவந்தேன். மேலும் மாட்டுப்பண்ணையும் வைத்திருந்தேன். தற்போது கஜா புயலில் சிக்கிக் கோழிப்பண்ணையின் கொட்டகை தகர்த்தெறியப்பட்டு, தகரமே ஒரு கிலோமீட்டர் தொலைவில் விழுந்து கிடந்தது. கோழிகளில் 50-க்கும் மேலே செத்துக்கிடந்தன. மிச்சக் கோழிகள் புயலால் எங்கே இழுத்துச்செல்லப்பட்டன என்றே தெரியவில்லை. தென்னந்தோப்பில் 75% மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. மிச்சமுள்ள தென்னைகளின் மேற்பகுதி முறிந்துவிட்டன. கரும்புத்தோட்டம் மொத்தமும் ஒடிந்து சாய்ந்துவிட்டது. நெல் வயக்காடு புயலில் சிக்கி, தண்ணீரில் மூழ்கி வீணாகிப்போய் கிடக்கிறது.

அரசாங்க நிர்வாக அதிகாரிகளிடம் எனது இழப்பு குறித்து முறையிட்டபோது, கோழிகளுக்கு நிவாரண உதவி கொடுக்க வழியில்லை என்று மறுத்துவிட்டார்கள். சாய்ந்த தென்னை மரங்களைக் கணக்கு எடுத்துச் சென்றார்கள். இழப்பீடு குறித்து எதுவும் சொல்லவில்லை. தென்னையிலிருந்து மட்டும் ஒரு வெட்டுக்கு 75,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். 45 நாள்களுக்கு ஒரு வெட்டு இருக்கும். தற்போது தென்னை மரங்கள் மொத்தமும் அடிபட்டுப்போனதால் எனது வருமானத்தை மொத்தமாக இழந்து கையறு நிலையில் இருக்கிறேன்.

எங்கள் பகுதியில் அடிக்கடி மின்வெட்டுப் பிரச்னை இருந்ததால் போன ஆண்டு சாகுபடிக்காக பம்ப்செட் இயக்குவதற்காக ஒரு ஜெனரேட்டர் வாங்கியிருந்தேன். தற்போது அந்த ஜெனரேட்டரை வைத்துத்தான் எங்கள் ஊரிலுள்ள 11 தண்ணீர் டேங்குகளுக்குத் தண்ணீர் ஏற்ற இலவசமாகக் கொடுத்துள்ளேன். என்னைப்போலதான் மக்களும் அனைத்தையும் இழந்து கஷ்டப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு என்னாலான உதவியாக இதைச் செய்கிறேன். இப்படித்தான் எங்கள் ஊரிலுள்ள மக்கள் ஒருவருக்கு ஒருவர் நமக்கு நாமே என்று உதவிசெய்துகொள்கிறோம். இன்னமும் மின்சாரம் வரவில்லை. மின்சாரம் வந்தாலும் இனி நாங்கள் இழந்த வாழ்க்கையைத் திரும்பப் பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனது 25 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கையும் கஜா புயலால் அழிந்துபோனதே" என்று கண்ணீர்மல்கக் கூறினார். அவரது துயரம் பார்த்து அவரது மகனும் கண்ணீர் சிந்த ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டார்கள்.