Published:Updated:

“நாங்கள் இந்துக்கள் அல்ல!” - அய்யா வழியினரின் உரிமைக்குரல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நாங்கள் இந்துக்கள் அல்ல!” - அய்யா வழியினரின் உரிமைக்குரல்
“நாங்கள் இந்துக்கள் அல்ல!” - அய்யா வழியினரின் உரிமைக்குரல்

“நாங்கள் இந்துக்கள் அல்ல!” - அய்யா வழியினரின் உரிமைக்குரல்

பிரீமியம் ஸ்டோரி

‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்று கர்நாடக மாநில லிங்காயத்துகளின் வழியில், தமிழகத்தில் குரல் எழுப்பியிருக்கிறார்கள் ‘அய்யா வழி’யினர். ‘எல்லோரும் சமம் என்ற உயர்ந்த நோக்குடன் தமிழில் வழிபடும் அய்யா வழி சமூகத்தைச் சிறுபான்மை மதமாக அங்கீகரித்து உரிமை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையைத் தமிழக அரசிடம் வைத்திருக்கிறார்கள் இச்சமூகத்தினர்.

“நாங்கள் இந்துக்கள் அல்ல!” - அய்யா வழியினரின் உரிமைக்குரல்

அய்யா வழியின் தற்போதைய தலைவர் பால பிரஜாபதி அடிகளாரிடம் பேசினோம்.

‘‘சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மதம் ‘அய்யா வழி’. இங்கே சாதிய ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. ஆராதனை, அபிஷேகம், பூஜை, படையல் போன்ற சம்பிரதாயங்கள் கிடையாது. வழிபாட்டில் தமிழுக்குத்தான் முக்கியத்துவம். ‘அனைவருமே கடவுளின் அம்சம்தான்’ என்ற தத்துவ அடிப்படையில், கண்ணாடிமுன் நின்று ‘தன் வழிபாடு’ செய்கிறோம். தமிழகம், கேரளா மற்றும் மகாராஷ்ட்ராவில் 2,000-க்கும் அதிகமான ‘அய்யா வழி’ பதிகள் (கோயில்கள்) உள்ளன. ஆண், பெண் பேதமின்றி ஆண்டவனுக்கு அனைவருமே பணிவிடை செய்வோம். இப்படியான தனித்தன்மைகள் கொண்ட ‘அய்யா வழி’யினரை எப்படி ‘இந்து மதம்’ என்ற கட்டமைப்புக்குள் கொண்டுவர முடியும்?

சிறுபான்மை மதத்தினராக அங்கீகாரம் பெற்றால், கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க முடியும். சிறுபான்மையினருக்கான நிதி உதவிகள் கிடைக்கும். ஜெருசலேம், ஹஜ் யாத்திரை செல்வதுபோல, டெல்லியில் இருப்பவர்களும், கன்னியாகுமரியில் உள்ள சாமித்தோப்புக்கு வந்து, அய்யா வழி மதத்தினை அறிந்துசெல்லும் வாய்ப்பு ஏற்படும்.

‘அய்யா வழி ஆலயத்துக்கு எந்த முள்வேலி போடப்பட்டாலும் அந்த வேலிகளை என்னுடைய அரசு ஆணையிட்டு அகற்றும்’ என்று எங்களுக்கு ஆதரவாக நின்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எனவே, அவர்வழியில் ஆட்சி செய்வதாகச் சொல்லும் இந்த அரசும் எங்கள் கோரிக்கை குறித்துக் கட்டாயம் சிந்தித்துச் செயல்படும் என்று நம்புகிறேன்.

“நாங்கள் இந்துக்கள் அல்ல!” - அய்யா வழியினரின் உரிமைக்குரல்

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் மாவட்டத்திலிருந்து இப்படியொரு கோரிக்கை எழுந்திருப்பதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகப் பேச்சு எழுவதில் அர்த்தமில்லை. எங்கள் கோரிக்கைக்கு எல்லாக் கட்சியினருமே ஆதரவளிப்பவர்கள்தான். இன்றைக்கு அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோரின்  முன்னோர்களும்கூட ஒருகாலத்தில், இதே சுசீந்திரம் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள்தானே?

மந்திரம், தந்திரம், பூஜை, புனஸ்காரங்களைப் பாதுகாத்துவரும் அடிப்படை இந்துக்கள்தான் ‘எங்கே நமது பிடிமானம் அழிந்துபோய்விடுமோ’ என்று எங்கள் கோரிக்கையைக் கண்டு பயப்படுகிறார்கள். அய்யா வழியைப் பின்பற்றும் பக்தர்களின் வாக்குகள், தொகுதிக்கு ஐயாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை இருக்கின்றன. திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இன்னும் அதிகமாகும். நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து நின்றால், கர்நாடகத்தில் மாற்றம் வந்ததுபோல், தமிழகத்திலும் மாற்றம்வரும்’’ என்றார் அவர்.

- த.கதிரவன்
படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு