Published:Updated:

ஒரே இரவில் வாழ்வைச் சூறையாடிய புயல்!

ஒரே இரவில் வாழ்வைச் சூறையாடிய புயல்!

ஒரே இரவில் வாழ்வைச் சூறையாடிய புயல்!

ஒரே இரவில் வாழ்வைச் சூறையாடிய புயல்!

ஒரே இரவில் வாழ்வைச் சூறையாடிய புயல்!

Published:Updated:
ஒரே இரவில் வாழ்வைச் சூறையாடிய புயல்!

புயல் வந்தால் பெரும்பாலும் நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதிகளைத்தான் பாதிக்கும். கடலிலிருந்து 100 கி.மீ தள்ளி இருக்கும் நம்ம பகுதியிலுள்ள ஊர்களுக்கெல்லாம் பாதிப்பு இருக்காது என்று நினைத்திருந்தேன். அப்படி இருந்தும் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கான அவசரகால உதவிக்கான நம்பர்களை வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கும் ஊரிலுள்ளவர்களுக்கும் அனுப்பியிருந்தேன். 

ஊருக்கு போன் பேசினால், ``ஊர்ல உள்ள முக்காவாசி மரங்க சாஞ்சிருச்சு. தந்தி மரமெல்லாம் கம்பி அறுந்து விழுந்துருச்சு. டீக்கடைக்குப் போக முடியல ரோடெல்லாம் மரம் விழுந்து கிடக்கு. முதல்ல குடிக்கிறதுக்குத் தண்ணி இல்ல. ஊரே அழிஞ்சுபோச்சு’’ என்றார்கள்.  `இப்போதைக்கு சிவசாமி அண்ணன் வீட்டு கிணத்துல எடுத்துகிருங்க. வீ.ஏ.ஓ, தாசில்தார், எம்.எல்.ஏ-வுக்கு போன் பேசுங்க’ என்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன். 


புயலில் மரங்கள் சாய்ந்து சாலைகளை அடைத்துக்கொண்டு கிடந்ததால், இரண்டு நாள்கள் அங்கு பேருந்துகள் செல்லவில்லை. பிறகு ஜே.சி.பி எந்திரம் வந்து சாலைகளில் விழுந்துகிடந்த மரங்களை அப்புறப்படுத்திய பிறகு, பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. தஞ்சாவூரிலும் அதற்கு வடக்கேயும் புயல் பாதிப்பில்லை. தெற்கே 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள எங்கள் ஊருக்கு தஞ்சையிலிருந்து டூவீலரில் சென்றோம். செல்லும் வழியெங்கும் சாலையின் இருபுறங்களிலும் கண்ட காட்சி நெஞ்சை உருக்கிப் பிசைந்தது. பொட்டல் காடாய்க் கிடந்த செம்மண் பூமியைச் சீர்படுத்தி போர்வெல் போட்டு உண்டாக்கியிருந்த தென்னந்தோப்புகளும் நெல் வயல்களின் வரப்பு ஓரங்களில் அரணாக இருந்த தேக்கு மரங்களும் பிடுங்கி எறியப்பட்டிருந்தன. ஒவ்வோர் ஊரிலும் அடர்ந்து வளர்ந்த மரத்தடிதான் பேருந்து நிறுத்தமாக இருக்கும். அவற்றையெல்லாம் அடையாளம் தெரியாமல் ஆக்கியிருந்தது கஜா புயல். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


சின்னா பின்னமான கொய்யா தோப்பு, போர்க்களத்தில் வீழ்ந்துகிடக்கும் வீரர்களைப்போல் தென்னை மரங்கள், சிறு சிறு குன்றுகள் சிதைந்து கிடப்பதுபோல் மாந்தோப்புகள், பலா மரங்கள் எல்லாம் வீழ்ந்து கிடக்கின்றன. இந்த மரங்களையெல்லாம் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தினமும் பள்ளிக்குப் பேருந்தில் பயணிக்கும்போது பார்த்து ஊர்களின் அடையாளங்களாகப் பதிந்தவை... இப்போது வெறிச்சோடிக் கிடக்கின்றன. 


கிராமத்தில் வசிக்கும் யாரும் எவ்வளவு பண முடை வந்தாலும் மரத்தை வெட்ட மாட்டார்கள். அப்படி வெட்டினால், வீடு கட்டுவதற்காக உத்திரம்,  நிலை, கதவு, ஜன்னல் என்று வீட்டு உபயோகத்துக்காகத்தான் மரத்தை வெட்டுவார்கள். இ.பி.காலனியில் தேக்கு மரம், மா மரம் தொடங்கி சூரியம்பட்டி, மருங்குளம், சேவியர் குடிக்காடு, காராமணித்தோப்பு, ஆத்தங்கரைப்பட்டி, தோப்புக்காடு, பாச்சூர், நாயக்கர்பட்டி தெற்கே புதுக்கோட்டை வரை நிறைய  ஊர்களில் பெரும் பாதிப்பு. தென்னை மரங்கள், மாமரங்கள், பலா மரங்கள், வேப்ப மரங்கள், புளிய மரங்கள், கொய்யா தோப்புகள், யூகலிப்டஸ் தோப்புகள், வாழைத்தோப்புகள், சவுக்குத் தோப்புகள், ஆலமரங்கள் எல்லாம் சாய்ந்துகிடக்கின்றன. வழி நெடுகிலும் மின் கம்பிகள் அறுந்தும் மின் கம்பங்கள் தரையில் விழுந்தும் கிடக்கின்றன. பல மரங்கள் ஒடிந்தும் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும் தலைப்பகுதி உடைந்தும் 50 மீட்டர் தள்ளி ரோட்டில் கிடப்பதைப் பார்க்கும்போது இந்தப் புயல் பகலில் வந்திருந்தால்... எத்தனையோ வாகனங்கள் சென்றிருக்கும் எத்தனையோ மக்கள் நடமாட்டமிருந்திருக்கும், ஆதலால் உயிர்ச் சேதமும் மிக அதிகமாக இருந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது.      


வீடுகளின் வழியே செல்லும் உயர் மின்னழுத்தக் கம்பிகள் அறுந்தும், மின்கம்பங்கள் எல்லாம் விழுந்து சாய்ந்தும் கிடக்கின்றன. பல நூறு தென்னைமரங்கள், மண்டபம் போல் படர்ந்து நிழலும் இனிய சுவையுள்ள மாம்பழங்களையும் தந்த பெரிய பெரிய மாமரங்கள், பலா மரங்கள், புளிய மரம், சிலா, கொடுக்கா புளி, பூவரசம் மரமெல்லாம் சாய்ந்துகிடக்கின்றன. கூரை வீடுகள், ஓட்டு வீடுகள், மாட்டுக்கொட்டகை விழுந்து சேதமடைந்துள்ளன.


ஊருக்குச் சென்று விசாரித்தபோது, ``வீட்டுக்கு வீடு ரூவா கலெக்ஷன் செஞ்சு ஜெனரேட்டர வாடகைக்கு எடுத்தாந்து குடிதண்ணிக்கு ஏற்பாடு செஞ்சோம். இன்னைக்கிதான் வீ.ஏ.ஓ வந்து பார்த்துட்டு போயிருக்கார். எம்.எல்.ஏ, கலெக்டர் , தாசில்தார் யாரும் வந்து பார்க்கலை. எந்த நிவாரணமும் வரலை, எல்லாம் 5 கி.மீ தூரத்துக்கும் அங்கிட்டு செல்லம்பட்டியோட போயிடுறாங்க. சின்ன ஊர்களுக்கு யாரும் வரமாட்டேங்கிறாங்க’’ என்றார்கள்.


கொல்லையில் சாய்ந்துகிடக்கும் ஆரஸ்பதி தோப்புகளைப் பார்க்கச் சென்றோம். அங்கே, பக்கத்து கொல்லைக்காரர்கள் நெல் நடவில் சாய்ந்துகிடக்கும் மரங்களை ஆள்வைத்து அறுத்து அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார்கள், அதற்குள் ரம்பம் ரிப்பேர் ஆகிவிட்டதாம், வீட்டுக்குக் கிளம்பினார்கள். அங்கே தோப்புக்காட்டைச் சேர்ந்தவரிடம் விசாரித்தபோது, ``எங்க ரெண்டு வீடும் சாஞ்சிருச்சு. எந்த அதிகாரியும் எட்டிகூட பார்க்கலை’’ என்றவர், ``பாச்சூர்ல 40 மூட்டை அரிசி வந்து எறங்குனுச்சாம். ஒரு நேரம் சாப்பாடு போட்டுட்டு, எல்லாம் ஆளா இருந்தவங்க எடுத்துக்கிட்டாங்க. இந்தப் பக்கம் எதுவும் வரலை. ரேஷன் மாதிரி ஒவ்வொரு கார்டுக்கும் கொடுத்தாதான் எல்லாருக்கும் கிடைக்கும்’’ என்றார். பேசிக்கொண்டு இருக்கும்போதே குட்டியானை வண்டி நிறைய மண்ணெண்ணெய் பேரல்களைக் கொண்டுசென்றார்கள். ஊரில் வந்து கேட்டால், ``இங்கே கொடுக்கலையே” என்றார்கள்.


வீட்டுக்கு வந்தவர்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம், பாச்சூரிலிருந்து வந்த உறவினர், ``இப்பதான் மந்திரி வந்தார்’’ என்றார். `இன்னும் அங்கே இருக்காரா?’ என்றதுக்கு, ``10 நிமிஷம்தான், நின்னு போட்டோ எடுத்துகிட்டு அப்படியே ஆதனக்கோட்டைக்குப் போய்ட்டார்’’ என்றார்.  வீட்டுக்கு வீடு எல்லோரும் சாய்ந்துகிடக்கும் அவர்களுடைய மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார்கள். 

அவரவர்கள் சிப்பந்திகளைத் தனித் தனியாகக் கூட்டிவந்து தங்களுடைய தோப்புகளைக் காண்பிக்கிறார்கள். எங்கள் ஊர் பகுதிகளில் எந்த முகாமும் இல்லை. ஒரே ஆறுதல் சமீப ஆண்டுகளாகப் பசுமை வீடுகள், தொகுப்பு வீடுகள் திட்டத்தால் பல வீடுகள் கான்கிரீட்டுக்கு மாறியுள்ளன. பெரும்பான்மையான வீடுகள் சிறியதாக இருந்தாலும் ஓட்டுவீடுகள். குடிசை வீடுகள் குறைவு என்பதால் உயிர் சேதம் இல்லை என்பதும் எல்லா மரங்களும் சாய்ந்திருந்தாலும் ஒரு பனை மரம்கூட சாயவில்லை என்பதும் ஆறுதலாக இருந்தது. 'மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழமுடியாது என்பது விவசாயிகளுக்கென்று விட்டுவிடாமல், மற்றவர்களும் மனத்தில் பதியமிட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism