Published:Updated:

`வாலிபால் போட்டியில் தங்கம்!’ - அசத்திய வேலூர் மாற்றுத்திறனாளிகள்

லோகேஸ்வரன்.கோ
`வாலிபால் போட்டியில் தங்கம்!’ - அசத்திய வேலூர் மாற்றுத்திறனாளிகள்
`வாலிபால் போட்டியில் தங்கம்!’ - அசத்திய வேலூர் மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற வேலூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இருவரை கலெக்டர் பாராட்டினார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (30). காட்பாடி உள்ளிப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி (26). இருவரும் மாற்றுத்திறனாளிகள். கடந்த மாதம் 9-ம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கில் 9 மாவட்டங்கள் பங்கேற்ற மாநில அளவிலான சக்கர நாற்காலி வாலிபால் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில், வெங்கடாச்சலம் மற்றும் வேலுசாமி ஆகிய இருவரும் கலந்துகொண்டு தங்கம் வென்று வேலூர் மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்தனர். மேலும், தேசிய அளவிலான சக்கர நாற்காலி வாலிபால் போட்டிக்கு 12 நபர்கள் அடங்கிய தமிழக குழுவில் இருவரும் தேர்வாகினர்.

இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ஈரோடு மாவட்டம் வி.ஓ.சி. மைதானத்தில் 19 மாநிலங்கள் பங்கேற்ற போட்டியில் தமிழகம் சார்பான குழுவில் விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்று வேலூர் மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்தனர்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளி வீரர்களான வெங்கடாச்சலம் மற்றும் வேலுசாமி ஆகிய இருவரும் கலெக்டர் ராமனை நேற்று சந்தித்தனர். பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.