Published:Updated:

"மேக்கே தாட்டூ விவகாரம்: மத்திய அரசின் அனுமதி தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்!’’ - சூழலியலாளர் முகிலன்

"மேக்கே தாட்டூ விவகாரம்: மத்திய அரசின் அனுமதி தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்!’’ - சூழலியலாளர் முகிலன்
"மேக்கே தாட்டூ விவகாரம்: மத்திய அரசின் அனுமதி தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்!’’ - சூழலியலாளர் முகிலன்

``ஊர் உலகத்துக்கே சோறுபோட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள், கஜா ஆடிய ருத்ரதாண்டவத்தால், இன்று சாலைகளெங்கும் கையை விரித்தபடி நிவாரணத்துக்கு அலையும் நிலையில், அவர்களின் வயிற்றில் பாலைவார்க்காத மத்திய அரசு, மாறாக மேக்கே தாட்டூவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஆய்வுசெய்ய அனுமதி அளித்திருக்கிறது. அதை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்; இல்லையென்றால், போராட்டம் வெடிக்கும்" என்று வெடிக்கிறார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்.

மேக்கே தாட்டூவில் அணைகட்டும் கர்நாடக அரசின் ஆய்வு தொடர்பாக, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகிகளோடு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற முகிலன், தமிழக அரசு அடுத்து செய்ய வேண்டியது குறித்தான மனுவை அளித்தார். அவரிடம் பேசினோம்.

 

``மேக்கே தாட்டூவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். உடனடியாக அந்த அனுமதியை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஆளும் தமிழக அரசு அதற்கான அழுத்தத்தைத் தர வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டூவில் புதிய அணை கட்டி தண்ணீரைத் தேக்கிப் பாசனப் பரப்பை மேலும் விரிவுபடுத்திப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் வரையப்பட்ட, கர்நாடக மாநிலத்தின் 5,912 கோடி ரூபாய் மதிப்புள்ள `விரிவான திட்ட அறிக்கை'க்கு இந்திய அரசு கடந்த 27-ம் தேதி அனுமதி அளித்துள்ளது. 

இந்திய அரசின் இந்த அனுமதியால் சென்னை உட்பட தமிழகத்தின் 21 மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையும், 12 மாவட்ட மக்களின் விவசாயமும் ஐந்து கோடி மக்களின் வாழ்வாதாரமும் முழுமையாகப் பாதிக்கப்படும். ஏற்கெனவே மீத்தேன், ஓ.என்.ஜி.சி, ஹைட்ரோ கார்பன் எனச் சீரழிந்துவரும் டெல்டா மற்றும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து, வஞ்சித்து அடியோடு அழித்திடும் திட்டமாக மேக்கே தாட்டூ அணை கட்டும் திட்டம் மாறிவிடும். மேட்டூர் அணையில் தற்போது நீர் தேக்கிவைக்கும் அளவுக்கு (93 டி.எம்.சி-யில் அணை 100 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாததால் சுமார் 65 டி.எம்.சி நீர் மட்டுமே தேக்க முடிகிறது) கர்நாடகா மேக்கே தாட்டூவில் அணைகட்டி 66 டி.எம்.சி நீரைத் தேக்கிவைக்கும் இந்த அணைத் திட்டம் தமிழினத்தை அழிக்கும் திட்டமாகும். 'புதிய அணைகட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 'விரிவான திட்ட அறிக்கை' தயார் செய்ய 2016-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு 25 கோடி ரூபாய் ஒதுக்கியபோதே, தமிழகத்தில் உள்ள அனைத்து மக்கள் அமைப்புகள், தமிழக விவசாயிகள், அனைத்து அரசியல் கட்சிகள் எனப் பலதரப்பும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவற்றையெல்லாம் இந்தியாவை ஆளும் பி.ஜே.பி அரசு சிறிதுகூட மதித்துப் பொருட்படுத்தவில்லை.

மாறாக, தமிழகத்தை அழிக்கும் நோக்கோடு கர்நாடக அரசு மேற்கொள்ளும் இந்த மேக்கே தாட்டூ அணை கட்டும் திட்டத்துக்கு இந்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கெனவே, வர்தா மற்றும் ஒகி புயலின்போது தமிழகத்துக்குப் போதுமான நிவாரணம் கொடுக்காமல் வஞ்சித்த இந்திய அரசு, தற்போது டெல்டாவை உருக்குலைத்துப் போட்டிருக்கும் கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதலுக்கு ஒரு வார்த்தையும்கூடப் பேசாமல் அமைதிகாக்கிறது. 

கடமைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புயல் அடித்து 12 நாள்கள் கழித்து வந்து பார்வையிட்டிருக்கிறார். கஜா புயலில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான டெல்டா மக்களை இந்திய பிரதமர் நேரில் வந்து சந்திக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொண்டிருக்கிறார். இப்படி இயற்கையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு உதவவில்லை என்றால்கூடப் பரவாயில்லை, உபத்திரம் செய்யும்விதமாகக் கர்நாடக அரசுக்கு அணைகட்ட  ஆய்வுசெய்ய அனுமதி வழங்கியிருப்பது டெல்டா விவசாயிகளை தற்கொலை நிலைக்குக் கொண்டுபோகும். காவிரியில் 1972 -ல் கர்நாடகம் பாசனம் செய்த பரப்பு 6.8 லட்சம் ஏக்கர். சட்டப்படி தமிழக அரசின் ஒப்புதல் பெறாமலேயே தற்போது கர்நாடகம் பாசனம் செய்யும் பரப்பு 25 லட்சம் ஏக்கராகும்.

ஆனால், ஏற்கெனவே அடாவடியாகக் கர்நாடகம் கட்டியுள்ள அணையினால் தமிழகத்தின் பாசனப் பரப்பு 28.2 லட்சம் ஏக்கரிலிருந்து 15 லட்சம் ஏக்கராகச் சுருங்கியுள்ளது. கர்நாடகத்தின் வடிகாலாக மட்டுமே தமிழகம் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே முல்லைப் பெரியாறில் 152 அடி தண்ணீர் தேக்க, அணையைப் பலப்படுத்த வனத்துறை அனுமதி கொடுக்காமல் உள்ளதோடு, கேரளம் முல்லைப் பெரியாறில் புதிய அணையை அமைக்க இந்திய அரசு மறைமுகமாக உதவிவருகிறது. அதேபோல, பாலாற்றில் ஆந்திர அரசு சித்தூர் மாவட்டத்தில் 22 தடுப்பணைகள் அமைத்ததை இந்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. பவானியின் குறுக்கே கேரளா தடுப்பணை அமைப்பதை இந்திய அரசு தடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துவருகிறது. இப்படி, தமிழகத்தை அழிக்க, தமிழக விவசாயிகளை, விவசாயத்தை 100 சதவிகிதம் அழித்தொழிக்கும் உறுதியுடன் செயல்படும் மத்திய அரசு, உச்சகட்டமாக தமிழகத்தின் ஜீவாதார நதியான காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூவில் அணைகட்ட நினைக்கும் கர்நாடக அரசுக்குத் துணைபோவது கண்டிக்கத்தகது. இதனால் தமிழகம், குறிப்பாக டெல்டா பகுதிகள் பாலைவனமாகும். அதனால், தமிழக அரசு இந்திய அரசுக்கு கடிதம், நீதிமன்ற நடவடிக்கை என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், பல வகையில் அழுத்தம் கொடுத்து கர்நாடக அரசின் இந்த மகாபாதக அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும்" என்றவர், இதற்காக தமிழக அரசு செய்ய வேண்டியதையும் பட்டியலிட்டார்.

``மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது தமிழகம் இழந்த எல்லைகளை மீட்பதற்கான கோரிக்கைகளை, இப்போது அரசு முன்வைக்க வேண்டும். தமிழகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் நெய்வேலி மற்றும் கூடங்குளம் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்திய அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கையாக, தமிழகம் மேக்கே தாட்டூ அணைகட்டும் பிரச்னையைப் பார்க்க வேண்டும். தமிழகத்தைப் பாலைவனமாக்கி, அங்குள்ள 300 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரியையும், பல லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பனையும் எடுக்கும் சதித்திட்டத்தைப் போன்றே மேக்கே தாட்டூ அணைகட்டும் பிரச்னையைப் பார்க்க வேண்டும். கஜா புயலை தேசிய பேரிடர் என அறிவித்து, அதற்கான உதவியை இந்திய அரசு செய்ய வேண்டும். தமிழக மக்களை மேக்கே தாட்டூ அணை போன்ற திசை திருப்பும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபடுவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். வர்தா மற்றும் ஒகி புயலின்போது தமிழகத்துக்குப் போதுமான நிவாரணம் கொடுக்காமல் வஞ்சித்த இந்திய அரசு, தற்போது கஜா புயலுக்கும் தராமல் வஞ்சித்தால், இந்திய அரசு தமிழகத்தில் வரி வசூலில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இவற்றை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உடனே செய்ய வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசுக்கு எதிராக மட்டுமல்ல, மாநில அரசுக்கு எதிராகவும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்" என்றார் வேகமுடன்.