Published:Updated:

சேலம் மாவட்டத்தில் 42 ஆண்டுக்குப் பின் மீட்கப்பட்ட சிலை; பொதுமக்கள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டத்தில் 42 ஆண்டுக்குப் பின் மீட்கப்பட்ட சிலை; பொதுமக்கள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டத்தில் 42 ஆண்டுக்குப் பின் மீட்கப்பட்ட சிலை; பொதுமக்கள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோவிந்தப்பாடியில் உள்ளது மாரியம்மன் கோயில். இந்தக் கோயில் சிலை 42 ஆண்டுகளாகத் தனியாருக்குச் சொந்தமான கோயில் ஒன்றில் இருந்து வந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு அதிகாரிகள் அண்மையில் அந்தச் சிலையை மீட்டு, கோவிந்தப்பாடி மாரியம்மன் கோயிலில் வைத்தார்கள். 42 ஆண்டுகளுக்குப் பிறகு சாமி சிலை வைத்ததை அடுத்து, சுற்றியுள்ள எட்டுப்பட்டி ஊர் மக்களும் திரண்டு பக்தி பரவசத்தோடு சாமி தரிசனம் செய்தனர். இத்தனை ஆண்டுகளாகத் தனியார் கோயிலில் இந்தச் சிலை இருக்க என்ன காரணம் என்பதை விசாரிக்கத் தொடங்கினோம்.

கோவிந்தப்பாடியைச் சேர்ந்த வாசுதேவன், ``எங்க மூதாதையர்கள் பழைய கோவிந்தப்பாடியில் வசித்து வந்தார்கள். சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அணைக் கட்டுமானப் பணி நடைபெற்றது. எங்க தாத்தா குழந்தைக் கவுண்டர் அங்கிருந்த திரெளபதியம்மன், மாரியம்மன், பட்டாளம்மன், பிடாரியம்மன், மாங்கோட்டை மாரியம்மன், விநாயகர், கரிய பெருமாள் என ஏழு கற்சிலைகளைக் கொண்டுவந்து வீட்டில் வைத்து வழிபட்டார். 

ஒரு கட்டத்தில் அந்தச் சிலைகளை வைத்து கோயில்கட்ட அவருடைய தம்பிகளான கணபதி, சின்னப்பனிடம் நிலம் கேட்டதற்கு அவர்கள் கொடுக்கவில்லை. அதையடுத்து  தன் சொந்த பட்டா நிலத்தில் திரெளபதி அம்மன் கோயிலும், பட்டா நிலத்துக்கு அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் மாரியம்மன் உட்பட ஆறு சிலைகளுக்கும் தனித்தனியே கோயில்களைக் கட்டினார். இந்த ஏழு கோயில்களையும் கட்ட தன் சொந்தக் காசை செலவு செய்தார்.  

அந்தக் கோயில்களுக்கு பொதுமக்கள் வரலாம். சாமி கும்பிடலாம், விரும்பிய காணிக்கைகளைப் போடலாம். ஆனால் யாரும் உரிமை கொண்டாடக் கூடாது. அந்த ஏழு கோயில்களுக்கும் எங்க தாத்தா குழந்தைக் கவுண்டர் மட்டுமே பூசாரியாகவும், தர்மகர்த்தாவாகவும் இருந்து வந்தார். பிறகு  அனைத்து சாமிகளுக்கும் விலை உயர்ந்த பஞ்சலோக சிலைகள் செய்து பண்டிகை நேரத்தில் மட்டும் அந்தந்த கோயில்களுக்கு எடுத்துச் சென்று பூஜை செய்து விட்டு, திரெளபதி அம்மன் கோயிலில் வைத்துப் பராமரித்து வந்தோம். அதன் பிறகு எங்க தாத்தாவின் தம்பிகளான கணபதி, சின்னப்பன் குடும்பத்தாரும் கோயிலுக்கு வந்தார்கள். அவர்களோடு இணைந்து கோயில் பணிகளைச் செய்து வந்தோம்.  

எங்க ஊர் கோவிந்தப்பாடியை அடுத்த உள்ள கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி. அவர் எங்களுக்கு ஒருவகையில் உறவினர். எங்க குடும்பத்தில் பெண்ணு எடுத்திருப்பதால் மருமகன் என்ற முறையில் ஜி.கே மணியும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பூஜை செய்யும்போது கோயிலுக்கு வந்தால் அவருக்கு முதல் திருநீறு கொடுப்பது வழக்கம். காலப்போக்கில் கோயில் அபார வளர்ச்சியடைந்தது. ஜி.கே. மணியும் பா.ம.க கட்சியில் இணைந்து அசுர வளர்ச்சியடைந்தார். பின்னர் ஜி.கே.மணி மாரியம்மன் கோயில் தர்மகர்த்தா பட்டத்தைக் கேட்டார். கொடுக்க முடியாது என்று கூறி விட்டோம். தனிப்பட்ட பிரச்னையை ஊர் பிரச்னையாக்கிக் கொல்லப்பட்டி மக்களைத் தூண்டிவிட்டு கோவிந்தப்பாடி மக்களை தாக்கச் செய்தார். இதனால் கோவிந்தப்பாடி, கொல்லப்பட்டி மக்களிடையே பகைமை ஏற்பட்டு கலவரம் வெடித்தது. அதையடுத்து அரசு அதிகாரிகள் மாரியம்மன் கோயிலைப் பூட்டுபோட்டு சீல் வைத்து விட்டார்கள்.

பிறகு எங்க பங்காளிகளான கணபதி, சின்னப்பன் குடும்பத்தினருக்கு பா.ம.க கட்சியில் பதவி கொடுத்து அவர்களைத் தூண்டிவிட்டு,  எங்களுக்கு எதிராக வழக்கு போடச் செய்தார். அந்த வழக்கில் எங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தும், அன்றைய ஆர்.டி.ஓ பா.ம.க தலைவர் மணியின் பேச்சைக் கேட்டு மாரியம்மன் கோயில் சாவியைத் தரவில்லை. அதையடுத்து நாங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம். அதிலும் வெற்றிபெற்றோம். அதையடுத்து ஜி.கே மணியின் சித்தப்பா ராமர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து பா.ம.க-வின் வழக்கறிஞர்கள் வாதாடி அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்துவிட்டது. தற்போது மறு சீராய்வு மனு போட்டிருக்கிறோம்.

 இந்நிலையில் 42 ஆண்டுகளாக எங்களுடைய பராமரிப்பில் இருந்த மாரியம்மன் பஞ்சலோக சிலையை அரசு அதிகாரிகள் எங்களிடம் இருந்து வாங்கிச் சென்று மாரியம்மன் கோயிலில் வைத்து ஜி.கே மணி தரப்பை பூஜை செய்ய அனுமதித்து இருக்கிறார்கள். ஜி.கே மணி சுயநலத்திற்காக ஊரையே கலவரமாக்கியவர். தற்போது அவரை எதிர்த்து நாங்கள் மறு சீராய்வு மனு போட்டிருப்பதால் எங்கள் உயிருக்கு அவரால் ஆபத்து இருக்கிறது. எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜி.கே மணிதான் முழுப்பொறுப்பு'' என்றார்.

சின்னப்பன் குடும்பத்தைச் சேர்ந்த அன்புமணி, ``வாசுதேவன் சொல்வது நூற்றுக்கு நூறு பொய். குழந்தைக் கவுண்டர் சிலைகளை எடுத்து வரவில்லை. அவருடைய அப்பா அதாவது எங்களுடைய கொள்ளுத்தாத்தா இருசப்பகவுண்டர்தான் சிலைகளைக் கொண்டுவந்து கோயில் கட்டி, இறைப்பணி செய்து வந்தார். அதனால் இருசப்பகவுண்டருக்குப் பிறந்த குழந்தைக் கவுண்டர், கணபதி, சின்னப்பன் என மூன்று குடும்ப வகையறாக்களுக்கும் இந்தக் கோயில்கள் சொந்தமானவை.

இந்தக் கோயில்கள் அனைத்தும் 7 கிராமங்களுக்கும் உரிமையானவை.   பா.ம.க., தலைவர் ஜி.கே மணியின் அப்பா இந்தக் கோயிலின்  தர்மகர்த்தாவாக இருந்துள்ளார். எங்க குடும்பத்தினருக்கு பூஜை செய்யும் அதிகாரம் மட்டுமே இருக்கிறது. தர்மகர்த்தா பதவி ஜி.கே மணி குடும்பத்தினருக்கு சொந்தமானது'' என்றார்.

இதுபற்றி பா.ம.க தலைவர் ஜி.கே மணியிடம் கேட்டதற்கு, ``குழந்தைக் கவுண்டர் வகையறாக்கள் சொல்வது பொய்யான தகவல். நான் அந்தக் கோயிலுக்குப் போனதும் இல்லை. திருநீறு வாங்கியதும் இல்லை. அந்தக் கோயிலில் எங்க அப்பா தர்மகர்த்தாவாக இருந்தார். அவருக்குப் பிறகு எங்க பங்காளி தர்மகர்த்தாவாக இருந்தார். அதன் பிறகு வேறு ஒருவர் தர்மகர்த்தாவாக இருந்தார். அதெல்லாம் முடிந்துபோன கதை. என்னுடைய அரசியலுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாரம்பர்ய முறையைச் பின்பற்றி கடவுளை வழிபட வேண்டும்'' என்றார்.

ஊர்மக்களிடம் விசாரித்த போது, ``இந்தக் கோயில் கோவிந்தப்பாடி, கொல்லப்பட்டி, கீரக்காரனூர், ஒகேனக்கல் மற்றும் காவிரிக் கரையில் உள்ள ஏழு கிராமங்களுக்கும் சொந்தமானது. ஒரு சமுதாயத்துக்கு மட்டுமானது அல்ல. பிற சமுதாயத்தினருக்கும் இந்தக் கோயிலில் உரிமையுண்டு. சாமி கும்பிடவும், கோயிலை நிர்வகிக்கவும் அனைவருக்கும் உரிமை வழங்க வேண்டும்'' என்றார்கள்.