Published:Updated:

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 4,300 சரக்குப் பெட்டகம் கொண்ட பெரிய கப்பல் சேவை துவக்கம்!

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 4,300 சரக்குப் பெட்டகம் கொண்ட பெரிய கப்பல் சேவை துவக்கம்!
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 4,300 சரக்குப் பெட்டகம் கொண்ட பெரிய கப்பல் சேவை துவக்கம்!

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து துாரக்கிழக்கு நாடுகளுக்கு நேரடி சரக்குப் பெட்டக சேவை துவங்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள், சிறிய கப்பல்கள் மூலம் முதலில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பெரிய சரக்கு கப்பல்கள் மூலமாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால் ஏற்றுமதியாளர்களுக்குப் பணம் மற்றும் அதிக கால விரயம் ஏற்பட்டது. இந்த துறைமுகத்துக்கு வரும் இறக்குமதி சரக்குகளும் இதே வழியில் தூத்துக்குடிக்கு வந்தன. இதைத் தவிர்க்கும் வகையில், பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் துறைமுகத்தின் மிதவை ஆழம், 13.2 மீட்டரிலிருந்து, 14 மீட்டராக ஆழப்படுத்தப்பட்டது. இதன்பின், கடந்த அக்டோபர் மாதம் பெரிய நிலக்கரி கப்பல் கையாளப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடியிலிருந்து தூரக் கிழக்கு நாடுகளுக்கு நேரடியாகச் சரக்குப் பெட்டகங்கள் கையாளும் சேவை இன்று துவங்கப்பட்டது. ``தஷின் பாரத் சரக்குமுனைய”த்திலிருந்து சரக்கு கப்பல் சேவையை மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, பொன்ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோர் காணொலி மூலம் துவங்கி வைத்தனர். அப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ``தூத்துக்குடியிலிருந்து தூரக் கிழக்கு நாடுகளுக்குத் துவங்கப்பட்டுள்ள இந்த நேரடிச் சரக்கு சேவையால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு,  ஒரு கண்டெய்னருக்கு, 50 அமெரிக்க டாலர்கள் வரை மிச்சமாகும். அதேபோல, கிழக்கு மேற்கு கடல் வணிக தடத்தின் அருகில் இருக்கும் இத் துறைமுகம், தென்னிந்தியாவின் முழுத் திறன் கொண்ட  முக்கிய சரக்கு பெட்டக மாற்று முனையமாக மாறும்.” என்றார்.

மத்திய நிதி அமைச்சர் நிதின்கட்கரி பேசுகையில், ``கடந்த 4 ஆண்டுகளில் துாத்துக்குடி துறைமுக மேம்பாட்டுக்காக, ரூ.1,500 கோடி செலவளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக்கொண்டு, 39 கோடி ரூபாய் செலவில், 2 புதிய இறக்கு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய் செலவில்,  9-வது தளம் இயந்திரமயமாக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளது. 473 கோடி ரூபாயில், 2 புதிய நிலக்கரி இறங்கு தளங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல், அனல்மின்நிலையத்துக்கான நிலக்கரி இறங்குதளம், 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.  100 கோடி ரூபாய் செலவில், 3 நகரும் கிரேன்கள்  நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

550 கோடி ரூபாய் செலவில் கப்பல் மிதவை ஆழம், 14 மீட்டராக  உயர்த்தப்பட்டுள்ளது. 60 கோடி ரூபாய் செலவில் முயல் தீவுக்கு ரயில் இணைப்பு பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாயில் துறைமுகத்திற்கு சாலை இணைப்புகளும்,  டிரக் டெர்மினலும் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், மும்பைக்கு அடுத்தபடியாக, 1000 ஏக்கரில் தூத்துக்குடியில், பல்பொருள் உற்பத்தி சிறப்பு   பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட உள்ளது. இதனால் தூத்துக்குடி துறைமுகம் தென்னிந்திய கடல் வாணிபத்தில் முக்கிய நகரமாக உருவாகும்.” என்றார்.

இது குறித்து  துறைமுக  பொறுப்புக்கழகத் தலைவர் ரிங்கேஷ் ராய் பேசுகையில், ``தூத்துக்குடி துறைமுகத்தின் குறைவான கட்டணங்கள், கூடுதலாக உள்கட்டமைப்பு திட்டங்கள், வாடிக்கையாளர் அணுகுமுறை ஆகியவை துறைமுகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.” என்றார்.  துறைமுகத்தின் துணைத் தலைவர் வையாபுரி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ``இத்துறைமுகத்தின் கப்பல் மிதவை ஆழம், 14 மீட்டராக ஆழப்படுத்தப்பட்ட பின்னர்,  முதல் முறையாக  மும்பை நவசேவா துறைமுகத்திலிருந்து வான் ஹாய் 510 என்கிற, 4,333 டியுசி திறன் கொண்ட பனாமாக்ஸ் வகை சரக்குப் பெட்டக கப்பல் தூத்துக்குடிக்கு வந்துள்ளது.

இக்கப்பல், இங்கிருந்து மலேசியாவின் பினாங்கு மற்றும் போர்ட் கிளாங் மார்க்கமாக, சீனாவின் ஹாங்காங், கீயூன் டாவ்,  சாங்காய்,  நிப்போ, சிக்கோ ஆகிய துறைமுகங்களுக்குச் சென்று மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தைச் சேரும். சீனா டு இந்தியா  என அழைக்கப்படும், 6  பெரிய கப்பல்களின்  சேவையில்,  சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை  தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும். இந்தச் சேவையில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், நேரடியாகச் சரக்கு அனுப்பும் சேவையில், சரக்கு கையாளும் கட்டணத்தில்  60 சதவிகிதம் வரை தள்ளுபடி  தரப்படும். இந்த முதல் சேவையில் சரக்கு கையாளும்  கட்டணங்களின்றி இலவசமாகக் கையாளப்பட்டன.” என்றார்.