Published:Updated:

இந்தப் பருவமழைக்குத் தாங்குமா சென்னை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்தப் பருவமழைக்குத் தாங்குமா சென்னை?
இந்தப் பருவமழைக்குத் தாங்குமா சென்னை?

இந்தப் பருவமழைக்குத் தாங்குமா சென்னை?

பிரீமியம் ஸ்டோரி

சென்னையில் ஒரு மழைக்காலம் என்றால்... கவிதை, சூடான பஜ்ஜி, குடை, இளையராஜா பாடல்கள் எனக் கொண்டாடிக்கொண்டிருந்தவர்களை, 2015-ம் ஆண்டு ஓர் உலுக்கு உலுக்கியது. அந்த ஆண்டு சென்னையை மூழ்கடித்த பெருமழைக்குப் பிறகு, மழை கொஞ்சம் வலுத்தாலும் என்ன நடக்குமோ என்கிற அச்சம் சென்னைவாசிகளுக்கு அதிகம்.

அந்த மழை, நிறைய பாடங்களைச் சொல்லிக்கொடுத்தது. சென்னையில் எவ்வளவு நீர்நிலைகள் இருந்தன என்பதை அடையாளம் காட்டியது. சக மனிதன்மீதான அக்கறை அதிகமாகவே இருக்கிறது என்பதை உணர்த்தியது; நம்மைக் காக்க வேண்டிய அரசின் அலட்சியத்தை, மெத்தனப்போக்கை அம்பலப்படுத்தியது; வாழ்வாதாரத்துக்குத் துடிப்பவன்மீது ஏறிநின்று தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் அற்பத்தனத்தையும் வெளிக்காட்டியது.

இந்தப் பருவமழைக்குத் தாங்குமா சென்னை?

இந்த ஆண்டு பருவமழைக்குத் தேவையான முன்தயாரிப்புகளை சென்னையில் செய்யவில்லை என்ற கூக்குரல் எழுந்துள்ளது. அவ்வப்போது பெய்த மழைக்கே சில பகுதிகள் மிதக்க, சென்னைவாசிகளுக்கு கவலை கூடியது. சென்னையில் இன்னொருமுறை அதிக மழை பெய்தால் மீண்டும் அதே பாதிப்பு ஏற்படுமா? அல்லது, படிப்பினைக்கு ஏற்றாற்போல் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோமா?

2015-ல் அதிகம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு என்னென்ன பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன என்பதை அறிய முடிச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்றோம். அந்தப் பகுதிவாசியான ராஜசேகர், ‘‘அடையாறு ஆற்றையொட்டி இருபுறமும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எங்களுக்கு வேணும். அடையாற்றில் கழிவுநீர் விடுவதைத் தடுத்து நிறுத்தணும். அடையாற்றின் கரைகளைச் செப்பனிட்டதுக்குப் பிறகு வேலி அமைக்கணும். குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் தார்ச்சாலை அமைக்கணும். குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கணும்... இப்படி நிறைய இருக்குங்க. அந்தப் பேரிடர் நிகழ்ந்து மூணு வருஷம் முடியப்போகுது. எங்களுக்கு இவ்வளவு கோரிக்கை இருக்குன்னு தெரிஞ்சுக்கறதுக்கே மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. இந்தப் பகுதியிலுள்ள எல்லா வீடுகளும் முதல் தளத்துக்கு மேலே மூழ்கிப்போய் நிறைய உடைமைகளை இழந்தோம். இதையெல்லாம் முன்கூட்டியே அரசு செய்திருந்தா எங்களுக்கு எந்த பாதிப்பும் வந்திருக்காது” என்றார். பெருமழை வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இவர்களின் கோரிக்கைகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்தப் பருவமழைக்குத் தாங்குமா சென்னை?

குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்த நரசிம்மன், “அந்த வெள்ளத்துல நாங்க கடுமையா பாதிக்கப்பட்டோம். அதுக்கு முன்னாடில்லாம் ரெண்டுநாள் தொடர்ந்து மழை பெய்தாகூட தண்ணி நிக்காது. இப்போ, ஒரு மணி நேர மழைக்கே வீட்டுக்குள்ள தண்ணி வந்துடுது. வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு எடுத்துக்கொண்ட முயற்சி கம்மிதான். எங்கப் பகுதியைச் சுற்றியுள்ள ஏரிக்குப் போற எந்தவொரு கால்வாயையும் தூர்வாரலை. கலெக்டர்கூட வந்து பார்த்துட்டுப் போனாங்க. வீடு இருக்கிற பகுதிகள்தான் இப்படின்னா, குரோம்பேட்டை ஜி.ஹெச் நிலைமை இன்னும் மோசம். அடையாறைச் சுற்றியுள்ள கால்வாய்ப் பகுதிகளை ஆழப்படுத்தணும்னு 2005-லயே சொன்னோம். எங்க பகுதியில் மட்டுமல்ல, பல்லாவரம் பகுதியில இருக்கிற சின்னச்சின்ன ஏரிகளையும் ஆழப்படுத்தணும். என்ன செய்யப்போறாங்கன்னு தெரியலை” என்றார் கவலையுடன்.

பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், செப்டம்பர் 18-ம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது. மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்கவும், தொற்றுநோய் வராமல் தடுக்கவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ‘மழைநீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கே பம்புசெட்டுகள் அமைக்கவும், வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும் வேண்டும்’ என முடிவெடுத்த அதிகாரிகள், ‘‘சென்னையில் 15 மண்டலங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாமல் இருந்த 469 இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை மழைநீர் வடிகால்வாய்களுடன் இணைக்கும் பணியைச் செய்யவேண்டும்’’ என்றும் கூறியுள்ளனர்.

இந்தப் பருவமழைக்குத் தாங்குமா சென்னை?

மழை நெருங்கும்போதுதான் இவற்றைக் கண்டறிய வேண்டுமா? முன்கூட்டியே இந்தப் பணிகளைச் செய்திருக்க முடியாதா? இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான சத்யகோபாலிடம் பேசினோம். ‘‘2015 வெள்ளத்துக்குப் பிறகு, 2016 செப்டம்பரில் ஒரு பெரிய ஆயத்தப்பணியைத் தொடங்கினோம். கடந்த காலத்தில் எந்தெந்த பகுதிகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது என ஆராய்ந்து அதைச் சீர்செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. நீர்நிலைகளைத் தூர்வாருதல், அகலப்படுத்துதல், ஆற்றுப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அப்புறப்படுத்துதல் என பணிகள் நடக்கின்றன. நிவாரண மையங்கள் உருவாக்கியுள்ளோம். வானிலை மாற்றங்கள் குறித்து எங்களின் ட்விட்டர் பக்கத்தில் செய்திகள் கொடுத்து வருகிறோம். கடந்தமுறை பெய்ததைவிட அதிக மழை பெய்தாலும், இம்முறை சென்னையில் முன்பு ஏற்பட்ட பாதிப்பு ஏற்படாது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதே சமயம் இது மக்களின் ஒத்துழைப்புடன்தான் சாத்தியமாகும்’’ என்றார் அவர்.

- தமிழ்ப்பிரபா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு