Published:Updated:

கோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை! - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்!

கோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை! - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்!
பிரீமியம் ஸ்டோரி
கோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை! - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்!

முகங்கள்

கோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை! - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்!

முகங்கள்

Published:Updated:
கோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை! - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்!
பிரீமியம் ஸ்டோரி
கோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை! - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்!

சியாற்ற மட்டுமல்ல, ஆரோக்கியத் துக்கும் உணவுதான் அடிப்படை. நோய்களைக் குணமாக்குவது மட்டுமல்ல, பல நேரங்களில் நோய்களை உருவாக்கும் காரணியாகவும் உணவு மாறிவிடுகிறது. எதை உண்பது, எதைத்  தவிர்ப்பது எனக் குழம்பும் இன்றைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள் உணவியல் நிபுணர்கள். சமீபகாலமாக உணவியல் நிபுணர்களின் தேவை அதிகமாகி வருகிறது. ஆனால், அவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இந்தத் துறை பற்றி போதிய விழிப்பு உணர்வும் ஏற்படவில்லை. இச்சூழலில், இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே இந்தத் துறைக்குள் நுழைந்து, தனக்கென தனி அடையாளத்தைப் பெற்றிருப்பவர் தாரிணி கிருஷ்ணன். இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி என எல்லா ஊடகங்களிலும் உணவு குறித்து விழிப்பு உணர்வூட்டிவருபவர். விரிவுரைக்காக உலகெங்கும் பறந்துகொண்டிருப்பவர். உணவியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொள்பவர். ‘இந்தியன் டயட்டிக் அசோசியேஷன்’ அமைப்பில் இணைந்து, அதன் தேசியத் தலைவராக உயர்ந்தவர். சமீபத்தில் அவள் விகடன் கிச்சன் இதழ் வழங்கிய `சிறந்த டயட்டீஷியன்' விருது, தாரிணியின் உழைப்புக்குக் கிடைத்த அறுசுவை அங்கீகாரம்!

மூத்த உணவியல் நிபுணரான தாரிணி கிருஷ்ணன், தன் 34 ஆண்டுக் கால அனுபவத்தில் அதிகம் அறியப்படாத ‘உணவியல்’ துறையின் சவால்கள் பற்றியும், தான் இந்தத் துறைக்கு வந்த காரணம் குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.

கோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை! - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்!

நீங்கள் வளர்ந்த சூழல், உணவியல் படிப்பைத் தேர்வுசெய்த காரணம் பற்றி...

எங்க அப்பா வெங்கடாசலபதி, இன்ஜினீயர். பூர்வீகம் கோபிசெட்டிப் பாளையம். வேலைக்காக சென்னை வந்தவர், திருமணத்துக்குப் பிறகு இங்கேயே செட்டிலாகிவிட்டார். அம்மா பாகீரதி, அந்தக் காலத்திலேயே பி.எஸ்ஸி முடித்தவர். ஓர் அண்ணன், ஓர் அக்கா... அம்மாவைத் தவிர, தாத்தா, அப்பா, உடன்பிறந்தவர்கள், மாமா எல்லோரும் இன்ஜினீயர்கள். அதனால் எங்கள் குடும்பத்தையே ‘இன்ஜினீயர் ஃபேமிலி’ என்று சொல்வார்கள். எல்லோரும் இன்ஜினீயரிங் படித்து இருந்ததால், நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று பள்ளியில் படிக்கும்போதே முடிவெடுத்து விட்டேன். அந்த ஆர்வத்தில்தான் அறிவியல் பாடம் எடுத்தேன். ஆனால், மருத்துவப் படிப்புக்குத் தேர்வாக முடியவில்லை. மருத்துவம் சார்ந்த ஏதாவது ஒரு படிப்பைப் படிக்கலாம் என்கிற எண்ணத்தில்தான் ‘டயட்டீஷியன்’ படிப்பைத் தேர்வுசெய்தேன். அந்தக் கால கட்டத்தில்தான், ஹோம் சயின்ஸ் துறையில் டயட்டீஷியன் படிப்பு அறிமுகமாகியிருந்தது. அதனால், என் குடும்பத்தினரே, ‘இந்த படிப்புக்கெல்லாம் என்ன எதிர்காலம் இருக்கப்போகிறது?’ என்று பயந்தார்கள். நான் உறுதியாக இருந்ததால்,  ஒரு வழியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் பி.எஸ்ஸி ‘டயட்டீஷியன்’ படிப்பில் சேர்ந்தேன்.

வகுப்புச் சூழல் எப்படி இருந்தது..?

கோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை! - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்!அந்தக் காலகட்டத்தில், அந்தப் படிப்பு அவ்வளவு பிரபலமாக இல்லை. நான் சேர்ந்த கல்லூரியிலேயே இரண்டாண்டுகளுக்கு முன்புதான் அந்தப் பாடத்தைத்  தொடங்கியிருந்தார்கள்.   பாடத் திட்டத்தில் மருத்துவப் படிப்புக்கு நிகரானதுதான். அதனால் மிகவும் விருப்பத்தோடு படித்தேன். 35 பேர் பயின்ற வகுப்பில், பல பாடங்களில் நான் முதலிடம் பெற்றேன். பி.எஸ்ஸி முடித்ததும், அதே துறையில் பட்ட மேற்படிப்பை மும்பையிலுள்ள நிர்மலா நிகேதன் கல்லூரியில் படித்தேன்.

எம்.எஸ்ஸி முடித்த கையோடு, நான் படித்த மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பணியாற்றினேன். அந்த நேரத்தில்தான், வெளிநாடுகளிலிருந்து கோதுமை தமிழகத்துக்கு அறிமுகமானது. கோதுமையை எப்படி உணவாகப் பயன் படுத்துவது என்று நிறைய பேருக்குத் தெரியாது. அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த விவசாயிகள் சென்னை வந்திருந்தார்கள். அது எப்படி விளைகிறது என்பது பற்றி விளக்கினார்கள். அவர்களை வைத்து என்னுடைய தோழிகள் மூவருடன் சேர்ந்து கோதுமை பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டேன். அதன் தொடர்ச்சியாக ‘Appetising Wheat Treats’ என்ற தலைப்பில், நூறு ரெசிப்பிகள் அடங்கிய ஒரு புத்தகத்தை வெளியிட்டோம். அது, மிகுந்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. அந்த அங்கீகாரம்தான்  அடுத்த கட்டம் நோக்கி நகர ஓர் உந்துதலாக இருந்தது.

முதன் முதலாக ‘கிளினிக்’ தொடங்கிய அனுபவம்?

விரிவுரையாளர், டயட்டீஷியன், ஆய்வாளர் என்கிற எல்லையோடு முடிந்துவிடக் கூடாது என முடிவெடுத்துக்கொண்டேன். ஆனாலும், அனுபவங்களுக்காக கே.ஜே. மருத்துவக் கல்லூரியில் டயட்டீஷியனாகவும்,  மருத்துவர்களுக்கு ஊட்டச்சத்து விரிவுரையாளராகவும் ஏழு ஆண்டுகள்
பணியாற்றினேன். அதன்பிறகு, ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் சில ஆண்டுகள்  ஊட்டச்சத்துத் துறையில்  பணியாற்றினேன். 1991-ல் தனியாக ஒரு கிளினிக் தொடங்கினேன். அந்த நேரத்தில் உணவியல் துறை பற்றி கல்லூரிகள், மருத்துவமனைகளைத் தவிர மக்களிடம் பெரிதாக விழிப்பு உணர்வு இல்லை. அருகில் இருந்தவர்கள் என்னுடைய கிளினிக் போர்டைப்  பார்த்துவிட்டு, ‘இது என்ன மாதிரியான மருத்துவம், இப்படி ஒரு துறை இருக்கிறதா' என்று ஆச்சர்யமாகக் கேட்பார்கள். ‘இது, மருத்துவப் படிப்பே இல்லை. நீங்கள் மருத்துவர் என்ற வார்த்தையைப்  பயன்படுத்தக் கூடாது’ என்று பலரிடமிருந்து எதிர்ப்புகூட வந்தது.

கோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை! - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்!

அந்தச் சூழலை எப்படி எதிர் கொண்டீர்கள்?

கிளினிக் தொடங்கியதே மக்களை நம்பிதான். ஆனால், யாரிடம் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கே விழிப்பு உணர்வு இல்லை. எப்படியாவது இந்தத்துறை குறித்த விழிப்பு உணர்வை  மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காகப் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதினேன்.  டி.வி, வானொலி என எல்லா ஊடகங்களிலும் பேசத் தொடங்கினேன். ஓர் இணையதளத்தையும் ஆரம்பித்தேன். சில வருடங்களிலேயே அதற்குப் பலன் கிடைத்தது. மக்கள் தேடி வந்தார்கள்.

உணவியலை தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றதில் உங்கள் பங்கு நிறைய அதுகுறித்துச் சொல்லுங்கள்...

‘டைஜஸ்ட்’ (Digest) என்ற பெயரில் உணவுக்கட்டுப்பாடு மென்பொருள் உருவாக்கினேன். அதை இன்று ஏராளமான  டயட்டீஷியன்கள் பயன்படுத்துகிறார்கள்.  வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகளிலும் அது பயன்படுத்தப்படுகிறது. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்திலும், தமிழ்நாடு காசநோய் திட்டத்திலும் பயன்படுத்துகிறார்கள்.

ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்களுடன் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் மதிய உணவு தொடர்பான ஆய்வு மேற்கொண்டோம்.  வழக்கமாக நாம் எவ்வளவு கலோரி உணவு சாப்பிடுகிறோம்; எவ்வளவு கலோரி செலவழிக்கிறோம் என்பதைக்  கணக்கீடு செய்ய, ‘நியூட்ரி டிராக்ஸ்’ (Nutritracs) என்ற பெயரில் ஒரு மென்பொருள் உருவாக்கினோம். அதை  ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தும் வகையில் ஒரு ஆப் உருவாக்கினோம். இதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

உணவியல்  துறை சார்ந்த படிப்புகளுக்கு என்னென்ன வாய்ப்புகள்  இருக்கின்றன?


இப்போதெல்லாம், உடல்நலன் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்துவிட்டது. உணவியல் நிபுணர்களை மக்கள் தேடிவருகிறார்கள். இந்திய வேளாண் அமைச்சகம், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய சுகாதார அமைச்சகம், அரசு மற்றும் தனியார் உணவு பதப்படுத்துதல் துறை நிறுவனங்கள், மத்திய மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் ஆய்வு அமைப்புகள், உணவுத் தொழிற்சாலைகள், ஊட்டச்சத்து உணவியல் துறை சார்ந்த படிப்புகளைப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமானது, நாம் அத்துறையில் அப்டேட்டாக இருப்பதுதான். உணவுத் துறையில் ஏராளமான ஆராய்ச்சி வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு முயற்சி செய்யலாம். பாடத்திட்டக் கல்வியோடு நிறுத்திக்கொள்ளாமல், துறை சார்ந்த ஆராய்ச்சிகளைப் பற்றியும் படித்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மொபைல் ஆப், இணையம் எனத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் இளம் உணவியல் நிபுணர்களுக்கும் அந்தத் துறைக்கும் வளர்ச்சியைக் கொடுக்கும்.

எதிர்கால உணவியர் நிபுணர்களே வாருங்கள்... வெல்லுங்கள்... வாழ்த்துகிறேன்!

கோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்த கதை! - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்!

- ஜி.லட்சுமணன் 

படங்கள் : தே.அசோக்குமார்