Published:Updated:

`உத்தரவை மீறி தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் கொடுப்பதா?’ - கலெக்டரிடம் பொங்கிய விவசாயிகள்

`உத்தரவை மீறி தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் கொடுப்பதா?’ - கலெக்டரிடம் பொங்கிய விவசாயிகள்
`உத்தரவை மீறி தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் கொடுப்பதா?’ - கலெக்டரிடம் பொங்கிய விவசாயிகள்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்குத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தண்ணீர் வழங்கி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

``ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையிலிருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தின் கீழ் 21 தொழிற்சாலைகளுக்கு நாள் ஒன்றுக்கு 9.2 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதால், இப்பகுதியில் நடைபெற்று வரும் நெல், வாழை  விவசாயத்துக்கும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், விவசாயம் குறைந்துவிட்டது. மேலும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த அணையிலிருந்து குடிநீருக்கும் விவசாயத்துக்கும் மட்டுமே தண்ணீர் வழங்க வேண்டும். தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்கக் கூடாது” எனத் தி.மு.க சார்பில் மாநில இளைஞரணி துனைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 29-ம் தேதி  ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் எடுக்கத் தடை விதித்து தீர்ப்பளித்தது தீர்ப்பாயம்.

இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மீறி, ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்குத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது எனத் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு அளித்த அன்றே ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

ஆனால், இந்தத் தொழிற்சாலைகளின் பணியாளர்கள், அலுவலகக் குடியிருப்புகள், இதுசார்ந்த மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு குடிநீர் இணைப்பு வழங்கலாம் எனக் கூறப்பட்டிருந்தால் இவற்றுக்கு மட்டும் அத்தியாவசியத் தேவை எனக் கருதி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் இணைப்பு அளிக்கப்படவில்லை” என்றார். இருப்பினும், இதுகுறித்து விவசாயிகள் பலமுறை கேள்வி எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், “தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தொழிற்சாலை விவசாய பாசனக் குளங்கள், கண்மாய்கள் ஆகியவற்றைத் தூர்வாரி வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது. மூடப்பட்ட ஓர் ஆலை தனது சமூக பங்களிப்பு நிதியை எப்படிச் செலவழிக்க அனுமதிக்கலாம். இதனால், ஆலைத்தரப்பு மக்களிடம் நன்மதிப்பை பெறும் வகையில் செயல்பட்டு வருவதாகவே தெரிகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளித்து வருகின்றனர். விவசாயிகள் அல்லாத நபர்களை அடையாளம் கண்டு அவர்களது மனுக்கள், சங்கங்களின் பெயர்களை சரிபார்க்க வேண்டும்” என்றனர் விவசாயிகள். இவ்வாறு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயம் குறித்து பேசியதைவிட ஸ்டெர்லைட் ஆலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள்தான் அதிகம்.

இறுதியாக படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 இழப்பீடி வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து விவசாயிகள் பேசுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார், எட்டயபுரம் ஆகிய ஐந்து தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் மானாவாரியாகப் பருவமழையை நம்பி கடந்த புரட்டாசி மாத ராபி பருவத்தில் 1.7 ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் 80 சதவிகித விவசாயிகள் மக்காச்சோளப் பயிரை சாகுபடி செய்துள்ளோம். தனியார் விதை நிறுவனங்களில் இருந்து வாங்கி விதைத்த விதை, வழக்கம்போல முளைத்து வளர்ச்சி சீராக இருந்தது. பருவத்தில் கதிர் பிடித்த நேரத்தில் படைப்புழுக்கள் பயிர் முழுவதும் தாக்கியது.

மக்காச்சோள கதிர்களில் மணிகள் இல்லாமல் வெறும் சக்கை கதிர்களாகத்தான் இருக்கு. இதனால் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டிருக்கு. இந்த 5 தாலுகா பகுதிகளை வறட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும். விதைகள், உழவு, நடவு, களை எடுப்பு என ஒரு ஏக்கருக்கு ரூ.20,000 வரை செலவு செஞ்சிருக்கோம். பயிர் சாகுபடிக்காக வங்கிகளில் வாங்கிய கடனை எப்படி அடைப்பது. இதற்காக அடகு வைத்த நகைகளை எப்படி மீட்பது எனவும் தெரியலை. எனவே, படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் வேளாண் அதிகாரிகள் முறையான ஆய்வு பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிகூட விடுபடாமல் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர்.