Published:Updated:

`மன்னிக்க முடியாத தவறு’ - சாத்தூர் கர்ப்பிணி விவகாரத்தில் விஜயபாஸ்கர் விளக்கம்

`மன்னிக்க முடியாத தவறு’ - சாத்தூர் கர்ப்பிணி விவகாரத்தில் விஜயபாஸ்கர் விளக்கம்
`மன்னிக்க முடியாத தவறு’ - சாத்தூர் கர்ப்பிணி விவகாரத்தில் விஜயபாஸ்கர் விளக்கம்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் கடும் மன வேதனையை அளிக்கிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனை சென்றுள்ளார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரத்தம் குறைவாக இருப்பதால் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், 4 நாள்களுக்குப் பின் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவரது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது அந்தப்பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 

ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் எப்படி ஏற்றப்பட்டது என்பது குறித்து சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ரத்த வங்கி பொறுப்பாளர்கள், சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆய்வக நுட்பனர்கள் போன்றோரிடம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3 பேரை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பான செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்தச் செய்தி கேட்டதும் துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்துறைச் செயலாளர் நேரிடையாக சென்று விசாரணை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அந்தக் குடும்பம் விரும்புகின்ற சிகிச்சை அளிக்கப்படும்.

தனியார் மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் அவர்கள் விரும்பும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். குழந்தைக்கு நோய்த் தொற்று இல்லாதவாறு சிகிச்சை அளிக்கப்படும். தமிழகத்தில் ஒரு வருடத்தில் தனியார் மற்றும் அரசு ரத்த வங்கிகளில் 8 லட்சம் பேர் ரத்தம் வழங்குகின்றனர். அது நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது. ஆனால், இதுவரை இதுபோன்ற புகார் வரவில்லை. இது மன்னிக்க முடியாத தவறு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தவறு நடந்த இடம் கண்டறியப்பட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது குடும்பத்துக்குத் தேவையான வாழ்வாதார உதவி அரசு சார்பில் வழங்கப்படும்.” என்றார்.