Published:Updated:

மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்

மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்
பிரீமியம் ஸ்டோரி
மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்

மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்

மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்

மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்

Published:Updated:
மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்
பிரீமியம் ஸ்டோரி
மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்

#RestoreDelta

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி,  புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைக் கலைத்துப்போட்டு விளையாடி, கோரதாண்டவம் நிகழ்த்தி யிருக்கிறது ‘கஜா’ புயல். 

மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை கஜாவின் மையமாகக் கருதப்பட்ட நாகப்பட்டினம் இயல்பாகவே இருந்தது.  மக்கள் சாதாரணமாக, குழந்தைகளோடு தெருக்களில் நடமாடிக்கொண்டிருந்தார்கள். அதிராம்பட்டினத்தில் சின்ன சலனம்கூட இல்லை. நிமிடங்கள் கரையக்கரைய படிப்படியாகக் கரையேறி வந்தது கஜா. ஒரு கரத்தைக் கோடியக்கரையிலும், மறுகரத்தை அதிராம்பட்டினத்திலும் விரித்து மகா அசுரனைப்போல, சுற்றியிருக்கும் 100 கிலோ மீட்டர் நிலப்பரப்பைச் சூறையாடிவிட்டுப் போய்விட்டது.

நம்பிக்கையோடு உறங்கச் சென்ற மக்கள், கஜா உலவிய நான்கு மணி நேரத்தில் தங்கள் வாழ்வாதாரங்களை மொத்தமாகத் தொலைத்து விட்டார்கள். வீடுகளின் ஓடுகள் பறக்க, மரங்கள் அலையாடி முறிந்து விழ வாழ்க்கையின் மீது எந்த நம்பிக்கையும் இல்லாமல் மரண பயத்தோடு அந்த இரவைக் கடந்தார்கள்.

திருத்துறைப்பூண்டிக்கு அருகேயுள்ள  எல்லை நாகாலடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமியின் முகத்தில் இன்னும் அச்சம் விலகவில்லை. “மூணு பேரு கதையும் முடிஞ்சுபோச்சுன்னுதான் நினைச்சோம். காத்தடிச்சு ஓடெல்லாம் பறந்துச்சு. இனிமே உள்ளே இருக்கக்கூடாதுன்னு வெளியில இருக்கிற கழிவறைக்குள்ள போய் உக்காந்துட்டோம். காலையில அஞ்சரை மணி வரைக்கும் அதுக்குள்ளேயே உக்காந்திருந்தோம்...” என்று கண்கலங்குகிறார். இந்த அவலச்சூழலிலும் ஆசையாக வளர்த்த நான்கு ஆட்டுக்குட்டிகளைக் கைவிடவில்லை. அவற்றையும் தூக்கிச்சென்று  தனக்கருகில் வைத்துக்கொண்டுள்ளார். 

மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்

கஜா புயலின் பெரும்பகுதியைத் தாங்கியது கோடியக்கரைதான். இரண்டுபுறமும் கடல் கொண்ட இந்தப்பகுதியில் உள்நுழையமுடியாத அளவுக்குத் துர்நாற்றம் வீசுகிறது. இங்குள்ள வன விலங்கு சரணாலயத்திலிருந்த ஏராளமான மான்கள், நரிகள், குதிரைகள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கருவாக்குறிச்சியைச் சேர்ந்த கவுதமிக்கு நெஞ்சுவலி வர, கஜா புயலால் உருக்குலைந்து மரங்கள் விழுந்துகிடந்த சாலைகளைத் தாண்டி தஞ்சாவூர் கொண்டுசெல்வதற்குள் அவர் மரணமடைந்துவிட்டார். அதே ஊரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஹனீபா, புயல் காற்றில் தூக்கியடிக்கப்பட்டு இறந்திருக்கிறான்.

தஞ்சை மாவட்ட மக்கள் கடந்த 50 ஆண்டுகளில் எந்தப் புயலையும் கண்டதில்லை.   நேரடியாக, அதன் கோரதாண்டவத்தைக் கண்முன்னால் கண்டு திகைத்துப்போனார்கள். குறிப்பாக, கீழத்தஞ்சை மாவட்டப் பகுதிகளான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் பகுதிகளை மொத்தமாக கஜா கலைத்துப்போட்டுவிட்டது. 

மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்

காவிரி விவகாரம் தலையெடுத்தபிறகு, படுகை விவசாயிகள் நெல் விவசாயத்திலிருந்து படிப்படியாக விலகி, தென்னைச் சாகுபடியின் பக்கம் கவனம் திருப்பினார்கள். ஆனால் இப்போது 80 சதவிகிதத்துக்கும் அதிகமான தென்னை மரங்களைச்  சாய்த்துவிட்டுப் போய்விட்டது கஜா. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த  தென்னை விவசாயி  வீரசேனன் பேசும்போதே கண்கலங்குகிறார். 

“கிட்டத்தட்ட சாவுவீடு மாதிரி கிடக்கு... யார்கிட்ட பேசினாலும் அழறாங்க. என் தோப்புல ஐந்நூறு மரங்கள் விழுந்திடுச்சு. எல்லாம் அறுபது வருஷத்துக்குமேல பலன் கொடுக்கக்கூடிய மரங்கள். ஒரு தென்னங்கன்னு வளர்ந்து பாளை வெச்சுக் குருத்து விட்டவுடனே, நம்ம வாழ்க்கை வளமாகப்போகுதுன்னு பொங்கல் வெச்சு, தென்னை மரத்துக்குப் படையல் போடுவோம். அப்படி சாமிமாதிரி வளர்த்த தென்னைகளை எல்லாம் நொடிப்பொழுதுல சாய்ச்சுப்போட்டுப் போயிருச்சு காத்து.  இனிமே கன்னு வெச்சு வளர்ந்து என் தலைமுறையில பாக்க முடியாது...” வீரசேனனைத் தேற்ற நம்மிடம் வார்த்தைகளில்லை. 

தஞ்சை மாவட்டக் கடலோரப் பகுதிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் பகுதியில்தான் புயல் கரையைக் கடக்கும் என்று அதிகாரிகளின் மொத்த கவனமும் திருப்பப்பட்டது. ஆனால் கணிப்புகளைப் பொய்யாக்கி, அதிராம்பட்டினத்தை இலக்கு வைத்தது கஜா. அதன் வழியாக நிலத்தில் ஏறி திண்டுக்கல், தேனி, கொடைக்கானல் என பலம் காட்டிவிட்டது.  குறிப்பாக,  அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள், உபகரணங்களைச் சுருட்டி கண்காணாத இடத்தில் வீசிவிட்டது. 

மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, வடகாடு, நெடுவாசல், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மரமடக்கி போன்ற பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி யிருக்கின்றன. இந்தப்பகுதிகளிலும் தென்னையே பிரதான விவசாயம். பலா, வாழை, தேக்கும் உண்டு. அனைத்தும் சரிந்துவிட்டன.
  
பாம்பன் அருகே கடல் புயலைக் கடக்கும் என்று கணித்திருந்ததால் ராமநாதபுரம் மாவட்டமே பீதியாகத்தான் இருந்தது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தைச் சுழற்றியடித்துவிட்டுச் சென்றிருக்கிறது கஜா.

சிங்கம்புணரி அருகில் உள்ள நெற்குப்பைப் பேரூராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்க்கும் எலிசபெத் ராணி கஜா புயலுக்குப் பலியானார். புயலன்று அதிகாலை வேலைக்கு வந்தவர், மழைக்காக மர நிழலில் ஒதுங்கினார். அந்த மரம் முறிந்து விழுந்து அவரது உயிரைப் பறித்துவிட்டது.

இதுவரை புயலையே எதிர்கொண்டிராத திண்டுக்கல் மாவட்டத்தையும் ஆட்டுவித்தது  கஜா. குறிப்பாக, கொடைக்கானல். யானை புகுந்த வாழைத்தோட்டம்போலக் குலைந்து கிடக்கிறது. சுற்றுலா வந்துவிட்டு ஊருக்குத் திரும்பிச் சென்றபோது, கார்மீது மரம் விழுந்ததில் கேரளாவைச் சேர்ந்த நீலிமா என்ற பெண் பலியானார். 

மீள்வோம்! - கரை கடந்த கஜா... நிலைகுலைந்த தமிழகம்

தேனிக்குப் புயல் எச்சரிக்கையே இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கமாக முல்லைப்பெரியாற்றில் வெள்ளம் வரும். எப்போதாவது வைகையில் வெள்ளம் வரும். ஆனால், இந்த முறை, ஆச்சர்யமாக வராகநதியில் வெள்ளம் வந்தது. கொடைக்கானல் மலையில் பெய்த கனமழை, மஞ்சளாற்றையும் விட்டுவைக்கவில்லை. வெள்ளம் பெருக்கெடுத்தது. ஏராளமான மரங்களும் சாய்ந்துவிட்டன.

கஜா புயலில் இருந்து உயிர் மீண்ட மக்கள், இழப்புகளிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார்கள். புயலுக்கு முன்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காட்டிய வேகத்தையும் விவேகத்தையும் புயலுக்குப் பிறகு அரசு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எல்லாப் பகுதிகளிலும் அனலடிக்கிறது.  ஊடகங்களும் தடைகளைக் கடந்து பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குள் செல்ல முடியவில்லை. பெரும்பாலான தொலைத்தொடர்பு கோபுரங்கள் உடைந்து விழுந்துவிட்டதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. மக்கள் வாழ்வின் விளிம்பில் தவிக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கிறார். மாமனார் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். இந்தக் கோபத்தில் மக்கள் பிரதிநிதிகளைக் கண்டாலே கோபத்தில் கொந்தளிக்கிறார்கள் மக்கள்.

சமூக ஊடகங்களில் மெள்ள மெள்ள செய்திகள் வெளியாகத் தொடங்கிய பிறகே தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்கள். தங்களுக்கு உதவி செய்ய வரும் நண்பர்களின் வாகனங்களில், இளநீர்க் காய்களை அள்ளி நிரப்பி, தங்கள் அன்பைக் காட்டுகிறார்கள் காவிரிப்படுகை மக்கள்.

இந்த அன்பும் மனிதநேயமும்தான் எப்போதும் வீழ்ந்த வாழ்வை மீட்டெடுத்திருக்கிறது. இப்போதும் அதே நம்பிக்கையும் மனிதநேயமும்தான் அந்த மக்களை மீட்டெடுக்கப்போகிறது. மீள்வோம்!

வெ.நீலகண்டன், மு.ராகவன், ஆர்.குமரேசன், கு.ராமகிருஷ்ணன், சி.ய.ஆனந்தகுமார், எம்.கணேஷ், தெ.பாலமுருகன், இரா.மணிமாறன்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ், தே.தீட்ஷித், அ.குரூஸ்தனம், க.சதீஷ்குமார், அ.ஜார்ஜ், ம.அரவிந்த்,  

கீழத்தஞ்சையில் கஜா புயல் ஏற்படுத்திய இழப்புகள் நிறைய. அவற்றில் இதயம் நடுங்க வைப்பது, பட்டுக்கோட்டை, சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் குடும்பத்துக்கு நேர்ந்தது.  இவருக்கு 22 வயதில் சதீஷ்குமார், 20 வயதில் ரமேஷ்குமார், 18 வயதில் தினேஷ்குமார் என மூன்று பிள்ளைகள். பலத்த காற்று வீசத்தொடங்கியதும் பக்கத்து வீட்டில் படுத்திருந்த பாட்டி ராக்கம்மாளை அழைத்துவர மூவரும் சென்றார்கள். உடன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்த அய்யாத்துரையும் சென்றார். பாட்டியின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தருணத்தில் திடீரென வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி நான்கு இளைஞர்களும் இறந்தார்கள். படுகாயத்தோடு மீட்கப்பட்டார் பாட்டி. மயக்கம் தெளிந்த பாட்டி  ‘என் பேரனுங்க எங்கே’ என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். அவரிடம் நடந்ததைச் சொல்லவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் உறவினர்கள் தவித்த காட்சி துயரத்தின் எல்லை.

ட்டுக்கோட்டையில் நேர்ந்த இன்னொரு சோகம். அணைக்காடு என்ற கிராமத்தில் தென்னந்தோப்பில் குடியிருந்த செல்வராஜின் மகள் விஜயலெட்சுமிக்கு 14 வயது. தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். புதன்கிழமையன்று பூப்பெய்தியிருக்கிறார் விஜயலெட்சுமி. வீட்டுக்கு அருகிலேயே தாய்மாமன் குடிசை கட்டி விஜயலெட்சுமியைத் தங்க வைத்துள்ளார்கள். வியாழக்கிழமை இரவு அம்மா, பாட்டியோடு உறங்கினார். நள்ளிரவு காற்று அதிகமாகி தோப்பில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. ஒரு மரம் விஜயலெட்சுமி படுத்திருந்த குடிசையில் விழ,  சிறுமி பரிதாபமாக இறந்தார். அம்மாவும் பாட்டியும் படுகாயமடைந்தார்கள்.  “’என் ரெண்டாவது பையன் இதே தோப்புலதான் பாம்பு கடிச்சு இறந்தான். ஒரே பொண்ணு... நல்லா படிக்கட்டும்னு நினைத்து தனியார் ஸ்கூல்ல சேர்த்துவிட்டேன்... அதுவும் இந்தத் தோப்பிலேயே செத்துப்போச்சே’ என்று உடைந்து கதறுகிறார் செல்வராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism