Published:Updated:

நிவாரணம் என்னும் நீதி!

நிவாரணம் என்னும் நீதி!
பிரீமியம் ஸ்டோரி
News
நிவாரணம் என்னும் நீதி!

நிவாரணம் என்னும் நீதி!

`கஜா'  புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து காவிரி டெல்டா மக்கள் மீள, இன்னும் சில மாதகாலம் ஆகலாம் என்கின்றன செய்திகள். மீண்டும் மீண்டும் எத்தனை முறை எழுதினாலும், வார்த்தைகளுக்கு அப்பால் துயரத்தைச் சுமந்து  நிற்கின்றனர், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள்.

நிவாரணம் என்னும் நீதி!அடித்த சூறைக்காற்றில் குடியிருந்த வீடு, கால்நடைகள், மரங்கள், நெற்பயிர்கள் என்று அத்தனையும் இழந்து வசதியான விவசாயிகள் என்று அழைக்கப்பட்டவர்கள்கூட வயிற்றுப்பசியை ஆற்றிக்கொள்ள யாராவது உணவுப்பொட்டலம் கொடுக்கமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு நடு வீதிகளுக்கு வந்துவிட்டார்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களின் குடிநீர்த் தாகத்தைக்கூடத் தணிக்க முடியாத குற்ற உணர்ச்சியில் தவிக்கும் இளைஞர்கள்மீது, நிவாரணப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழிமறிப்பதாகக் குற்றச்சாட்டும் இப்போது சேர்ந்திருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் தரும் விதமாக, புயலுக்கு உயிர் தப்பிய ஒவ்வொரு உயிரும் ஓராயிரம் துயரக்கதைகளைத் தாங்கி நிற்கிறது. இதயத்தைச் சுக்குநூறாக்கும் அப்படியொரு கதை நாகை மாவட்டம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நீர்முளை கிராமத்தில் அமைந்திருக்கும் புயல் நிவாரண முகாம் அருகே நடந்திருக்கிறது. புயல் ஓய்ந்து ஒரு வாரகாலமாகியும் மின்சாரம் கிடைக்காத பல கிராமங்களைப் போலத்தான் இந்தக் கிராமமும் அன்று இருளில்  மூழ்கியிருந்திருக்கிறது. நிவாரண முகாமும் இருளில் இருந்ததால் சாலையோரத்தில் அமர்ந்து அந்த ஊர் மக்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது நிவாரணப் பணிகளுக்காக வேகமாக வந்த ஒரு வாகனம் அங்கே அமர்ந்திருந்த சுமதி, அமுதா, ராஜகுமாரி, சரோஜா என்ற நான்கு பெண்மணிகள்மீது ஏறி அவர்களின் உயிரைப் பறித்திருக்கிறது.  வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்கள், வாழ்வையும் இழந்த சம்பவம் துயரத்திலும் துயரம்.

மனிதநேயத்துடன் வழங்கப்படும் உதவிகள், அவர்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகச் சீரமைத்துவிடுமா என்று தெரியவில்லை. ஆனால் அரசும் மக்களும் கருணையுடன் களத்தில் இறங்கவேண்டிய நேரமிது. நிவாரணப் பணிகள் தொடர்பாகத் தமிழக அரசுமீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அரசியலுக்கு அப்பால் முழுமனதுடன் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முழுவீச்சுடன் செயற்பட வேண்டும். அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்திருக்கும் மனுவைப் பரிசீலித்து, நிவாரணப் பணிகளுக்கான தொகையை ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். களத்தில் பல தன்னார்வலர்கள் தங்களால் ஆன பணிகளைச் சிறப்பாக ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழகமும் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது. நம் சகோதரர்களின் துயர் துடைக்க நீளட்டும் நம் கரங்கள்.

கைகோப்போம்!

`கஜா' துயர் துடைப்போம்!

#RestoreDelta

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz