Published:Updated:

நிவாரணப் பணிகள்... நீளும் கைகள்!

நிவாரணப் பணிகள்... நீளும் கைகள்!

நிவாரணப் பணிகள்... நீளும் கைகள்!

நிவாரணப் பணிகள்... நீளும் கைகள்!

நிவாரணப் பணிகள்... நீளும் கைகள்!

Published:Updated:
நிவாரணப் பணிகள்... நீளும் கைகள்!

கோடம்பாக்கம் டி.ஏ.வி. பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறாள் சஞ்சனா. கையில் ஒரு உண்டியலோடு விகடன் அலுவலகம் வந்திருந்தாள். கூடவே, அவள் தாத்தா பாட்டியும் வந்திருந்தார்கள். “இடிஞ்சுபோன வீட்டுல நாலைஞ்சு குழந்தைகள் உக்காந்திருக்கிற ஒரு போட்டோவை பேப்பர்ல பாத்திருக்கா... இந்த உண்டியலை எடுத்துட்டு வந்து, ‘இதுல காசு சேத்து வச்சிருக்கேன். இதை அவங்களுக்குக் குடுக்கணும்’னு சொன்னா...” என்றார் சஞ்சனாவின் தாத்தா. ஓராண்டாக சேர்த்து வைத்திருந்த 3,550 ரூபாயை கஜாவால்  பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்தாள் சஞ்சனா. 

நிவாரணப் பணிகள்... நீளும் கைகள்!

கஜா புயலால் நிலைகுலைந்து கிடக்கும் மக்களுக்குக் கரம் கொடுக்க, விகடன் எழுப்பிய கோரிக்கையை ஏற்று, 100 ரூபாய் தொடங்கி லட்சங்கள் வரை தங்களால் இயன்ற தொகையை அனுப்பி நெகிழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள் வாசகர்கள். அதற்கான ஓர் உதாரணம் சஞ்சனா.

புயலின் நேரடி பாதிப்புக்குள்ளான நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 403 நிவாரண முகாம்கள் இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 3 லட்சம் பேர் இன்னும் முகாம்களில்தான் தங்கியிருக்கிறார்கள். இரவு கொடூரமானதாக இருக்கிறது. கிராமங்களில் எந்த இடத்திலும் சிறு வெளிச்சமில்லை. கிடைத்த வெளியில் மக்கள் முடங்கிவிடுகிறார்கள்.

இன்னும் பெரும்பாலான கிராமங்களில் வீழ்ந்த மரங்கள் அப்படியே கிடக்கின்றன. தேங்காய்களும் குரும்பைகளும் சிதறிக்கிடக்கின்றன. முகாம்களுக்குச் செல்லவிரும்பாதவர்கள் இடிந்த வீடுகளில் தார்ப்பாய் சுற்றி அதற்குள் குடியிருக்கிறார்கள். ஆனால், இயற்கை விட்டபாடில்லை. மழை கொட்டித் தீர்த்து வஞ்சிக்கிறது. 

விகடன் வாசகர்கள் அளித்த நிதியின் மூலம், முதற்கட்டமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர்,  திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 2,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. விகடன் குழுவினர்  ஊர், ஊராகச் சென்று  வீடிழந்தவர்கள், உதவி தேவைப்படுவோர் குறித்துப் பட்டியல் தயாரித்தார்கள். அவர்களுக்குத் தலா 1,500 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயலின் தாக்கத்தை முற்றிலுமாக எதிர்கொண்டு, மொத்த வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்த சடையன் கோட்டகம், முதலியார் தோப்பு, வைரவன்பேட்டை அண்ணாநகர், வேட்டைக்காரனிருப்பு, பூவத்தடி, விழுந்தமாவடி, திருப்பூண்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. சடையன் கோட்டகம், முதலியார் தோப்பு, வைரவன்பேட்டை அண்ணாநகர், வேட்டைக்காரனிருப்புப் பகுதிகளில் 90 சதவிகித வீடுகள் முற்றிலும் சிதைந்துவிட்டன. புயலுக்குப் பிறகு, பிற பகுதிகளில் விழுந்த வெளிச்சமும் கவனமும் இந்த கிராமங்கள்மேல் விழவில்லை.

வாசகர் மனோகரன், சடையன் கோட்டகம் காரல் மார்க்ஸ் , முதலியார் தோப்பு செல்லம்மாள், அண்ணா நகர் பாக்கியராஜ், வேட்டைக்காரனிருப்பு ஐயப்பன், பூவத்தடி இதயத்துல்லா ஆகியோர் தொடக்கத்திலிருந்து இறுதிவரை விகடன் குழுவினரோடு இருந்து நிவாரணப் பணிகளில் உதவி செய்தனர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிவாரணப் பணிகள்... நீளும் கைகள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகள் புயலால்  கடுமையாக பாதிப்படைந்தன. குறிப்பாக, பொன்னவராயன் கோட்டை, பழஞ்சூர், மருதங்காவயல், வலசக்காடு, நரியங்காடு, செருவாவிடுதி வடக்கு போன்ற 6 கிராமங்களில் வீடு உட்பட மொத்த வாழ்வாதாரங்களும் பறிபோய்விட்டன. இந்த கிராமங்களில் 500 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.  நிவாரணப் பொருள்களை இருப்பு வைக்க,  பட்டுக்கோட்டை,  கரிக்காட்டில் உள்ள மலர்விழி நடேசன் திருமண மண்டபத்தை இலவசமாகக்  கொடுத்தார் அதன் உரிமையாளர் சண்முகம்.

செருவாவிடுதி சுந்தர், வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், பொன்னராயன்கோட்டை ராஜ்குமார், மருதங்காவயல் தாஸ் ஆகியோர் நிவாரணப் பணிகளில் விகடன் குழுவினருக்கு உதவி செய்தார்கள். திருவாரூர் மாவட்டத்தில் மேலமருதூர், மயிலேறிபுரம், வாலி ஓடை, நெம்மேலி, எக்கல் ஆகிய கிராமங்களைத் தேர்வுசெய்தது விகடன் குழு. குறுகலான மண் சாலை. ஆள் ஆரவம் இல்லை. வாலியோடை கிராமம் ஆழ்ந்த அமைதியில் உறைந்து கிடக்கிறது. தீவுபோல் உள்ளடங்கியிருக்கும் இந்த கிராமத்துக்கு எந்த அடிப்படை உதவிகளும் கிடைக்கவில்லை. அவர்களை அடையாளம் கண்டு உதவிகளைக் கொண்டு சேர்த்தது விகடன் குழு.

மன்னார்குடி அருண்ரவி, ‘மன்னையின் மைந்தர்கள்’ அமைப்பைச் சேர்ந்த வாலிவோடை பாபு, தலைமையாசிரியர் தங்கபாபு, மேலமருதூர் திருமாவளவன் ஆகியோர் நிவாரணப் பொருள்கள் தகுந்தோரைச் சென்றடைய விகடன் குழுவினருக்கு உதவி செய்தார்கள்.

காவிரி டெல்டாவை ஒட்டியிருக்கும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளை துவம்சம் செய்துவிட்டது ‘கஜா’ புயல். மேற்பனைக்காடு புதுக்குடியிருப்பில் மொத்தம் 45 குடும்பங்கள். இவற்றில் 35 கூரை வீடுகள் பறந்துவிட்டன.  மிகவும் பின்தங்கிய கிராமம். மரம் வெட்டுதல், மீன் பிடித்தல்தான் இந்த கிராம மக்களின் தொழில். 

நிவாரணப் பணிகள்... நீளும் கைகள்!

தொடர்ந்து, மழை பெய்துகொண்டிருப்பதால் உடம்பில் போர்வையைச் சுற்றியபடி தார்ப்பாய்க்காகக் காத்திருந்தார்கள் மக்கள். மிகவும் உள்ளடங்கியிருப்பதால் பெரிய அளவில் உதவிகள் சென்றுசேரவில்லை. விகடன் குழுவினர் இந்த கிராமத்தைத் தேர்வு செய்து நிவாரணப் பொருள்களை வழங்கினார்கள்.

“விடாம, மழை பேஞ்சுகிட்டு இருக்கு. அன்றாடம் வேலை செஞ்சாத்தான் சாப்பாடு.  குழந்தை குட்டிகளோட தங்கவும் இடமில்லாம சாப்பிடவும் வழியில்லாம தவிச்சு நிக்கிறோம்...  நிறைய குழந்தைகளுக்குக் காய்ச்சல் வேற அடிக்குது. இப்போதைக்கு, தார்ப்பாயைப் பாக்கும்போது போன உயிர் திரும்பி வந்தமாதிரி இருக்கு...” என்றார் இந்தப்பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள்.

மேற்பனைக்காடு  குறிஞ்சிநகர், நெடுவாசல் மேற்கு, புள்ளான்விடுதி சீரியர் தெரு,  புள்ளான்விடுதி ஆதிதிராவிடர் காலனி, அணவயல் எல்.என்.புரம், காசிம் புதுப்பேட்டை,  துவரடிமனை போன்ற கிராமங்களிலும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்தப்பணியில் தொடக்கம் முதல் இறுதி வரை விகடன் குழுவினரோடு இருந்து அணவயல், நெடுவாசல் மேற்கு இளைஞர்கள் உதவி செய்தார்கள்.

எல்லா கிராமங்களிலும் தங்களுக்கு உதவி செய்ய வருபவர்களுக்கு எதைக்கொடுத்தேனும் உபசரிக்கத் துடிக்கிறார்கள் மக்கள். கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறார்கள். கையெடுத்து வணங்குகிறார்கள். தங்கள் பிள்ளைகளைக் கொஞ்சுவதுபோல கன்னத்தைக் கிள்ளி முத்தமிடுகிறார்கள்.

நெடு வரலாறும் மரபும் பண்பாடும் கொண்டவர்கள்... இன்று பேரிழப்பை எதிர்கொண்டு, நம் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. வீடுகள் செப்பனிடப்பட வேண்டும். முற்றிலும் சிதைந்தவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். வேளாண் நிலங்களை உயிர்ப்பிக்க வேண்டும். மீண்டும் அவர்களின் வாழ்க்கையைப் பசுமையாக்க வேண்டும்.

கைகொடுங்கள்... சேர்ந்து நம் சகோதரர்களுக்காக வேலை செய்வோம்!

விகடன் டீம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism