Published:Updated:

வீராணம் ஏரிக்கரையில் பாசன மதகு உடைப்பு! - போக்குவரத்து நிறுத்தம்

வீராணம் ஏரிக்கரையில் பாசன மதகு உடைப்பு! - போக்குவரத்து நிறுத்தம்
வீராணம் ஏரிக்கரையில் பாசன மதகு உடைப்பு! - போக்குவரத்து நிறுத்தம்

வீராணம் ஏரிக்கரையில் பாசன மதகில் உடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

தமிழகத்தில் உள்ள பெரிய ஏரிகளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியும் ஒன்று. இந்த ஏரி மூலம் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் பாசனம் நடைபெற்று வருகிறது. ஏரியின் முழு கொள்ளவான 47 அடி தண்ணீர் தற்பொழுது உள்ளது. மேலும் இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.  இந்த ஏரியில் சோத்தியாத்தோப்பு - காட்டுமன்னார்கோயில் சாலையில் வாழைக் கொல்லை கிராமத்தில் உள்ள பாசன வாய்க்கால் மதகு மதியம் திடீரென உள்வாங்கியது. இதனால் ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் வாய்க்காலில் சென்றது. மதகு உள்வாங்கியதால் அந்த பகுதியில் சாலையும் சிறிது, சிறிதாக உள்வாங்கியது-. இதனால் ஏரியின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டது.

அப்பகுதியில் விவசாய பணியில் இருந்த வாழைக்கொல்லை கிராம மக்கள் இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸாருக்கும், பொதுப்பணித் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி ஜவகர்லால்,
இன்ஸ்பெக்டர் ராஜா, சிதம்பரம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர் அருணகிரி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் மணல் மூட்டை அடுக்கி உடைப்பைச் சரி செய்தனர். இந்த ஏரி உடைபட்டிருந்தால் அருகில் உள்ள வாழைக்கொல்லை, வெய்யலூர், வெய்யலூர், ஓடாக்கநல்லூர் நார்த்தங்குடி, தரசூர் உட்படக் 10 கிராமங்கள் மற்றும் விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டிருக்கும். அதேபோல் இரவு நேரத்தில் உடைப்பு ஏற்பட்டிருந்தால் மிகப்பெரிய பாதிப்பை
 ஏற்படுத்தியிருக்கும். ஏரி உள்வாங்கிய பகுதியில் சாலையும் உள்வாங்கியதால் சேத்தியாத்தோப்பு - காட்டுமன்னார்கோயில் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்த கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் இது குறித்து கூறியதாவது. ஏரியில் ஏற்பட்ட உடைப்பு இரவுக்குள் முழுமையாக அடைக்கப்பட்டு
விடும். அதன் பின்னர் சாலையில் போக்குவரத்து செல்ல அனுமதிக்கப்படும் என்றார். 

இது குறித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களில் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரனிடம் பேசினோம். ``தமிழகத்தில் மிகப்பெரிய ஏரி வீராணம் ஏரி, இந்த ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் நடைபெறுகிறது. மேலும் இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதால் முழுக் கொள்ளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இதே பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு பாதிப்பு ஏற்பட்டு, பின்னர் சரி செய்யப்பட்டது.

பொதுப்பணித்து துறை அதிகாரிகளின் அலட்சியமே ஏரி உடைப்பிற்குக் காரணம். நீர் பாசனத்தில் அனுபவம் இல்லாத அதிகாரிகளைக் கொண்டு பராமரிக்கப்படுவதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மதியம் உடைப்பு ஏற்பட்டு இதனை சரி செய்ய நீண்ட நேரம் ஆகியுள்ளது. இதேபோல் கந்தகுமாரன் கிராமத்தில் ராஜா வாய்க்கால் பகுதியிலும் பாதிப்பு உள்ளது. இதுகுறித்து நாங்கள் பல முறை அதிகாரிகளிடம் கூறியும் அலட்சியமாக உள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி பராமரிக்க பொதுப்பணித்துறையில் நீர் மேலாண்மையில் அனுபம் வாய்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை’’ என்றார்.