Published:Updated:

நான்காவது முறை முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

ஜி.சதாசிவம்
நான்காவது முறை முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!
நான்காவது முறை முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

வீராணம் ஏரி, இந்த ஆண்டு முதல்முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே, வீராணம் ஏரி அமைந்துள்ளது. தமிழகத்தில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி, கடலூர் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் 48 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகா விவசாயிகளின் உயிர் நாடியாக உள்ள இந்த ஏரி, சென்னை மக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்திசெய்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. இதைத் தொடர்ந்து, 3 முறை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தற்போது நான்காவது முறையாக இன்று காலை முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 9-ம் தேதி, ஏரியின் நீர் மட்டம் 46.75 அடியாக இருந்தது. இந்நிலையில், சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் மதகில் உடைப்பு ஏற்பட்டு உள்வாங்கியது. இதனால், பாதுகாப்பு கருதி அனைத்து பாசன மதகுகளிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைப்பைச் சரிசெய்தனர். மேலும், நீர் வரத்து இல்லாததால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வந்தது. இதையடுத்து, இப்பகுதி விவசாயத்திற்காகவும், சென்னை குடிநீர்த் தேவைக்காகவும் கடந்த 15-ம் தேதி முதல் கீழணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது.

இதையடுத்து, நேற்று காலை வீராணம் ஏரி முழுக் கொள்ளவான 47.50 அடியை எட்டியது. இதன்மூலம், இந்த ஆண்டில் முதல்முறையாகவும், ஒரு வருட கால இடைவெளிக்குள் நான்காவது முறையாகவும் முழு கொள்ளவை எட்டியுள்ளது. வீராணம் ஏரியில் இருந்து வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்கு விநாடிக்கு 300 கன அடியும், விஎன்எஸ்எஸ் மதகு வழியாகப் பாசனத்திற்கு விநாடிக்கு 280 கன அடியும், சென்னை குடி நீருக்காக விநாடிக்கு 44 கன அடியும் விடப்படுகிறது. வீராணம் ஏரி முழுக் கொள்ளவை எட்டியுள்ளதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.