Published:Updated:

`மயங்கிவிழுந்தாகூட இங்க குடிக்கத் தண்ணீர் இல்லை!’ - தேனி கலெக்டர் அலுவலக நிலை குறித்து மக்கள் புகார்

`மயங்கிவிழுந்தாகூட இங்க குடிக்கத் தண்ணீர் இல்லை!’ - தேனி கலெக்டர் அலுவலக நிலை குறித்து மக்கள் புகார்
`மயங்கிவிழுந்தாகூட இங்க குடிக்கத் தண்ணீர் இல்லை!’ - தேனி கலெக்டர் அலுவலக நிலை குறித்து மக்கள் புகார்

தேனி மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டக் கலெக்டராகப் பல்லவி பல்தேவ் உள்ளார். இன்று (25.1.2019) காலை கலெக்டர் தலைமையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிக்கத் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டனர். கலெக்டர் அலுவலக வாயிலில் உள்ள தண்ணீர் டேங்க் செயல்படாமல் முடங்கியுள்ளது. இது ஒருபுறம் என்றால், மனு கொடுக்கும் இடமான கலெக்டர் அலுவலக பின்புறத்தில் நல்ல தண்ணீர்க் குழாய்கள் ஏதும் இல்லை. அங்கே இருக்கும் உப்புத்தண்ணீர் குழாயில்தான் மனு கொடுக்கவரும் பொதுமக்களும் விவசாயிகளும் தண்ணீர் குடிக்கிறார்கள். சிறுமலை போன்ற கரட்டுப்பகுதியில் அமைந்திருக்கும் கலெக்டர் அலுவலகத்திலிருந்து புதிய பேருந்துநிலையத்துக்கு சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். வழியில் குடிப்பதற்குத் தண்ணீர் வசதிகள் எதுவும் இல்லை.

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அல்லல்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய பொதுமக்கள் சிலர், ``புது பஸ்டாண்டில் இருந்து நீண்ட தூரம் நடந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுக்க வருகிறோம். இங்கே வந்தால் குடிக்கத் தண்ணீர்கூட இல்லை. கலெக்டர் அலுவலக வாசலில் ஒரு தண்ணீர் டேங்க் இருக்கிறது. சங்கிலியால் டம்ளர் கட்டப்படுள்ளதே தவிர, டேங்கில் தண்ணீர் இல்லை. ஒருவர் வெயில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தால்கூட அவருக்குக் கொடுக்க தண்ணீர் இல்லை என்பதுதான் இன்றைய கலெக்டர் அலுவலக நிலைமை. சரி, அலுவலர்கள் எப்படி தண்ணீர் குடிக்கிறார்கள் என்று பார்த்தால், அனைவரது அலுவலகங்களிலும் தண்ணீர் கேன்கள் இருக்கின்றன. அல்லது உப்புத்தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் பியூரிபயர் இயந்திரம் வைத்திருக்கிறார்கள். கலெக்டர் அலுவலகம் வரும்போது மனுக்களோடு தண்ணீர் கேன்களை சுமந்து வர வேண்டும்போல!" என்றார்கள் கொதிப்போடு. தினமும் தனது அலுவலகத்துக்கு வந்து செல்லும் மாவட்டக் கலெக்டர் அவர்கள், தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் தண்ணீர் டேங்க்கை பார்த்துவிட்டுதான் செல்கிறார்! இனியாவது கவனிப்பாரா?