Published:Updated:

பேராவூரணி அருகே பொங்கும் கிணறு! - ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் ஆய்வால் விவசாயிகள் அச்சம்

பேராவூரணி அருகே பொங்கும் கிணறு! - ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் ஆய்வால் விவசாயிகள் அச்சம்
பேராவூரணி அருகே பொங்கும் கிணறு! - ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் ஆய்வால் விவசாயிகள் அச்சம்

பேராவூரணி  அருகே விவசாயி ஒருவரின்  கிணற்றில் ஒரு மாதத்துக்கும் மேலாகத் தண்ணீர் நிற்காமல் பொங்கிக்கொண்டே இருக்கிறது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமுடன் பார்த்துச் சென்றபடி உள்ள நிலையில் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் கிணற்றை ஆய்வு செய்து மக்கள் பயப்படத் தேவையில்லை என்று கூறியதோடு இரண்டு பாட்டில்களில் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். கிணற்றை ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் ஆய்வு செய்தது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ளது வளப்பிரமன்காடு என்ற கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரின் மகன் ரவிச்சந்திரன். இவர்களுக்கு அதே ஊரில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், அந்த நிலத்தில் 40 அடி ஆழ கிணறு உள்ளது. இதில் 1982-ம் ஆண்டு 100 அடி ஆழத்தில் போர்வெல் போடப்பட்டது. இந்த கிணற்றில் கஜா புயல் ஏற்பட்ட கொஞ்ச நாளிலேயே அதிகளவில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் பொங்க ஆரம்பித்தது. நாள் ஆக ஆக தண்ணீர் பொங்குவது சரியாகிவிடும் என நினைத்த ரவிச்சந்திரன் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் கிணற்றில் தண்ணீர் நுரையுடன் பொங்குவது நிற்கவே இல்லை. மேலும், இந்தத் தகவல் அந்தப் பகுதி முழுக்க பரவியது. அந்தப் பகுதியில் உள்ள கிணறுகளில் மிகக் குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில் சிங்காரத்தின் கிணற்றில் மட்டும் நீர்  பொங்கிக்கொண்டே இருக்கிறது. தண்ணீர் பொங்குவதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமுடன் பார்த்துச் சென்றபடி உள்ளனர். அதாவது, கிணற்றுக்குள் இருந்து அதிக அளவில் வாயுக்கள் வெளியேறி நீர்க்குமிழிகள் வெளியேறுகிறது. அதேநேரத்தில் தண்ணீரும் பொங்கிக்கொண்டே இருக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேநேரத்தில் தண்ணீரில் எந்த வித்தியாசமும் இல்லை. குடிக்கும்போது எந்த மாற்றமும் தெரியவில்லை. இதை அறிந்த கலெக்டர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கிணற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், புவியியல் துறை மற்றும் ஓ.என்.ஜி.சி அலுவலர்களைக் கொண்டு கொந்தளிப்பு ஏற்படும் கிணற்றை ஆய்வு செய்யுமாறு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து  தாசில்தார் பாஸ்கரன் முன்னிலையில், ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் ஜெய்கணேஷ் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் கிணற்றைப் பார்வையிட்டு நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு நடத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.என்.ஜி.சி நிறுவன அதிகாரி ஜெய்கணேஷ் பேசினார். ``கிணற்றில் நீர் பொங்குவது குறித்து பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை. கிணற்று நீரில் எரிபொருள் தொடர்பான மூலக் காரணிகள் ஏதும் கண்டறியப்படவில்லை. வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்பது குறித்து, கிணற்றில் உள்ள 37 அடி தண்ணீரை வெளியேற்றி ஆய்வு செய்தால்தான் தெரியவரும். எனவே, விரைவில் தண்ணீரை வெளியேற்றிவிட்டு நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்ய உள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன’’ என்றார்.

இது குறித்து விவசாயி ரவிச்சந்திரனிடம் பேசினோம். ``ஆரம்பத்தில் இந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. அதனால் தான் 100 அடி ஆழத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்தோம். இப்போது கஜா புயலுக்குப் பிறகு தண்ணீர் ஊறியதோடு எப்போதும் பொங்கிக் கொண்டே உள்ளது. கலெக்டர் தொடங்கி பல அதிகாரிகள் வந்து கிணற்றைப் பார்வையிட்ட வண்ணம் உள்ளனர். அதேபோல் காரைக்காலிலிருந்து ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். விஷ வாயுக்களால் இது போன்று பொங்கவில்லை எனக் கூறினர். இரண்டு பாட்டில்களில் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். அந்த முடிவு வந்த பிறகே, ஏன் கிணறு பொங்குகிறது எனத் தெரியவரும் என்று கூறியிருக்கிறார்கள்.

கிணற்றில் நீர் பொங்குவது எங்கள் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இந்தநிலையில், ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் வந்து கிணற்றை ஆய்வு செய்தது, விவசாயிகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.