நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மனதையும் உடலையும் நிர்வகிப்பது எப்படி?

மனதையும் உடலையும் நிர்வகிப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
மனதையும் உடலையும் நிர்வகிப்பது எப்படி?

மனதையும் உடலையும் நிர்வகிப்பது எப்படி?

ந்தத் துறையைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தாலும், வெற்றி பெற வேண்டும் எனில், உங்கள் உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். பிசினஸ்மேன்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பிசினஸ் வெற்றிவாகை சூடியவர்களும், இனி சூட இருப்பவர்களும் தங்கள் தொழிலில் வெற்றி பெறவேண்டுமெனில், மனதையும் உடலையும் நிர்வகிப்பது எப்படி என்பது குறித்து மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் ஒரு சிறப்புக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சென்னையின் மிக முக்கியமான மருத்துவ நிபுணர்கள் இருவர் பேசினர். அவர்கள் பேசியதன் சுருக்கம் இனி...

மனதையும் உடலையும் நிர்வகிப்பது எப்படி?

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசினார் சென்னை மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன். 

*ஒரு சமயத்தில் ஒரு வேலை

 “மனித உடலின் அனைத்து உணர்வுகளையும் கட்டுப்படுத்தும் உறுப்பு மூளைதான். நமது அன்றாடச் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றுவதும் இந்த மூளைதான்.

எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். சிலருக்கு ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்யும்  திறமை இருக்கும். நமது மூளையும் ஒரே நேரத்தில் பல செயல்களில் கவனம் செலுத்தும் தன்மையைப் பெற்றிருக்கிறது. ஆனாலும், ஒரு நேரத்தில் ஒரே செயலில் மட்டும் கவனம் செலுத்துவதுதான் வெற்றியை நோக்கி நம்மை நகர்த்துவதற்கான முதல்படி.

*நோ நெகட்டிவ் சிந்தனை

சில நேரங்களில் மூளை பலதரப் பட்ட தகவல்களால் மாசடைந்து விடும். எதிர்மறையான தகவல்களைப் படிக்கும்போதோ, கேள்விப்படும் போதோ மூளையில் சுரக்கும் ரசாயனங்கள் உடலில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருநாளில் நமது செயல்பாட்டையே முழுமை யாகப் பாதித்துவிடும் அளவுக்கு வலிமை வாய்ந்தவை எதிர்மறை விஷயங்கள். அதனால் நேர்மறையான தகவல்களை மட்டுமே எப்போதும் உள்வாங்க முயற்சி செய்ய வேண்டும்.

நாம் அனைவருமே தொழில்நுட்பங்களை நம்பியே பணியாற்றுகிறோம். நமது உடலில் இருக்கும் தொழில்நுட்பங்களும் மிகவும் அபூர்வமானவை. நாம் பார்க்கும் காட்சிகளைத் தகவல்களாக மூளைக்கு அனுப்பும் பணியைச் செய்யும் நரம்பு, ஒரு நொடிக்கு 16 ஜிகா பைட் அளவுள்ள தகவல்களை உள்வாங்கிக் கொள்கிறது. அதிலும் தெரிவுசெய்யப்பட்ட விஷயங்களை மட்டுமே உள்வாங்குகிறது. உதாரணமாக, ஒரு காட்சியை நாம் பார்க்கிறோம் என்றால், அதில் இருக்கும் அனைத்து விஷயங்களையும், அனைத்து மனிதர்களையும், அனைத்து வண்ணங்களையும் மூளை உள்வாங்கிக் கொள்ளாது. நாம் உள்வாங்கும் விஷயங்களில் ஒரு நாளைக்கு ஆயிரம் தகவல்களை மட்டுமே மூளை பதிவு செய்கிறது. மீதமுள்ள தகவல்களை அதன் ஆழ்நிலையில் சேமித்து வைத்துக்கொள்ளும். மூளையின் செயல்பாட்டைப் போன்றே தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

மனதையும் உடலையும் நிர்வகிப்பது எப்படி?

*சச்சினின் நூறாவது செஞ்சுரி

வர்த்தகத் துறையில் எண்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கும். வரவு செலவாக இருக்கலாம், லாப நஷ்டமாக இருக்கலாம், பங்குச் சந்தையாக இருக்கலாம். அனைத்திலும் எண்களின் வலிமை தான் அதிகம். ஆனால், எண்கள் குறித்து அதிக கவனம் எடுத்துக் கொண்டால் மன நிம்மதி போய்விடும். கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் 99-வது செஞ்சுரியிலிருந்து 100-வது செஞ்சுரியை அடிப்பதற்கு எடுத்துக் கொண்டது 134 இன்னிங்ஸ்கள்.

 “ஏன் இத்தனைக் காலம் எடுத்துக் கொண்டீர்கள்?’ என்று சச்சினிடம் கேட்டபோது, ‘‘100-வது செஞ்சுரியை அடைய வேண்டும் என்று ஒவ்வொரு முறை நான் மைதானத்தில் விளையாடும்போதும், ஸ்கோர் போர்டில் இருக்கும் எண்கள் என்னைப் பயமுறுத்தின. அதனால்தான்...’’ என்றார்.  வர்த்தகத் துறையில் இயங்குவோர் எண்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், நேர்மையுடன் உழைத்தால் வெற்றி தானாகக் கைகூடும்.

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், உடல்நலம் பேணுதல், ஆரோக்கியமான உணவு, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுதல், சுறுசுறுப்பான இயக்கம், மனதுக்குப் பிடித்த இசையைக் கேட்டல் ஆகிய ஐந்தையும் பின்பற்றினால் போதும்” என்றார் அவர்.

அவரைத் தொடர்ந்து இரைப்பைக் குரல் சிகிச்சை நிபுணர் வி.எஸ்.சங்கரநாராயணன் பேசினார்.

*இரு வகை மனிதர்கள்

“பொதுவாக, மனிதர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை மனிதர்கள், ஒரே நேரத்தில் பலவகையான செயல்களைச் செய்யும் ஆற்றல் உள்ளவர் களாகவும், நேரம் தவறாமை, சுயவிமர்சனம் செய்தல், போட்டி மனப்பான்மை ஆகிய குண நலன்கள் உடையவர்களாகவும் இருப்பார்கள். மேலும், பொறுமை யின்மை, விரைவில் உணர்ச்சி வசப்படுதல், கையாள முடிந்த அளவைக் காட்டிலும் கூடுதல் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்ளுதல், தனது அந்தஸ்தை விட்டுத் தராமை போன்ற குணங் களையும் கொண்டிருப்பார்கள். கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். ஆனால், இவர்களுக்கு வேலை நிமித்தமான மன அழுத்தம் அதிகமாக இருக்கும். சமூகத்தில் தான்மட்டும் தனித்துவிடப்பட்டு விட்டதாக நினைப்பார்கள். இதுபோன்றவர்களுக்கு இதய நோய், மாரடைப்பு, குறிப்பிட்ட வயதுக்கு முன்பாக உயிரிழப்பு ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மனதையும் உடலையும் நிர்வகிப்பது எப்படி?

இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள், எதையும் எளிதாக எடுத்துக்கொள்வார்கள்; பிறருடன் இணக்கமாகப் பணியாற்றுவார்கள்; எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள்; எதையும் பதற்றத்துடன் இல்லாமல் அமைதியாக அணுகுவார்கள்; கருத்துகளை வெளிப்படையாகப் பேசுவார்கள். இந்தக் குணங்களை உடையவர்கள் மன அழுத்தம் தரும் விஷயங்களைச் சரியாகக் கையாள்வார்கள்; துரிதமாக இல்லாமல் நிதானமாகப் பணியாற்றுவார்கள்; பொறுமை யுடனும் மகிழ்ச்சியுடனும் பணியைச் செய்வார்கள். இதனால் அவர்களால் ஆரோக்கிய மான வாழ்க்கையையும் வாழ முடியும். ஆபத்தான சமயங்களிலும், தோல்வியடையும் நிலையிலும்கூட அந்தச் சூழலைத் திறமையாகக் கையாள்வார்கள்; ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்வார்கள். இதனால் உடல், மனம் இரண்டையும் சரியாக நிர்வகிப்பார்கள். இரண்டாவது வகைக்குள் நம்மைப் புகுத்திக் கொள்வதுதான் ஆரோக்கியமானது.

*
மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெற

எல்லோருக்கும் மனஅழுத்தம் வரும். ஒரு குறிப்பிட்ட சூழலை நிர்வகிக்க முடியாதபோதுதான் மன அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் பல உடல் சார்ந்த நோய்களுக்குத் திறவுகோலாக இருக்கிறது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மன அழுத்தம் வரும். ஆனால், அவர்கள் மன அழுத்தம் தரும் பிரச்னைகளை எளிதாகக் கையாண்டு, அதிலிருந்து வெளியேறிவிடுவார்கள்.  

வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும். அதன்பிறகு இலக்கை அடைவதற்கான தடைகள் எவை என்று கண்டறிய வேண்டும். இலக்கை எட்டுவதற்கான நேர்மறையான வழியை மனதில் உருவாக்க வேண்டும். இலக்கை அடைவதில் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மனதைத் தயார் படுத்த வேண்டும். சவால்களைத் துணிந்து சந்திக்க வேண்டும். எந்தப் பிரச்னை வந்தாலும் இலக்கை நோக்கிப் பயணித்தால், இறுதியில் வெற்றிக் கனியைப் பறிப்பது நிச்சயம்’’ என்றார் டாக்டர் சங்கரநாராயணன்.

வெற்றியை நோக்கி பிஸியாக உழைத்துக் கொண்டிருக்கும் பிசினஸ்மேன்கள் அனைவரும் மருத்துவர்கள் சொன்னபடி நடக்கலாமே.

-ஜெனி ஃப்ரீடா

படங்கள் : தி.குமரகுருபரன்