தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்!

எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்!
பிரீமியம் ஸ்டோரி
News
எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்!

எடை குறைப்பு ஏ டு இஸட்டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

‘இலக்கை அடைவதில் உங்கள் திட்டம் பலனளிக்கவில்லை என்றால் திட்டத்தை மாற்றுங்கள், இலக்கை அல்ல’ என்றொரு பொன் மொழி உண்டு. எடை குறைப்பு முயற்சிக்கு மிகப் பொருத்தமான பொன்மொழி இது.

எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்!

எடையைக் குறைக்க நினைக்கிற பலரும் இப்படித்தான். கண்டதையும் கேட்டதையும் வைத்து, கண்மூடித்தனமாக எடை குறைப்பு முயற்சிகளில் இறங்குவார்கள். சிலருக்கு வொர்க் அவுட் ஆகலாம். பலருக்குத் தோல்வியே மிஞ்சும். ஏடாகூடமான வழிகளைப் பின்பற்றியதில் எடை குறைந்ததோ இல்லையோ, ஆரோக்கியம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். தோற்றத்தில் அழகும் பொலிவும் திடீரென  மிஸ் ஆகி, `நோயாளி லுக்' வந்திருக்கும். பார்ப்பவர்கள் எல்லாம் துக்கம் விசாரிக்க, ‘நமக்கு இதெல்லாம் செட்டே ஆகாது’ என இலக்கை மறந்து, இன்னும் சிலபல கிலோ எடை கூடி, ‘நமக்கெல்லாம் நல்ல மனசு... அதான்’ என காமெடி பண்ணிக்கொண்டிருப்பார்கள்.

வடிவேலு பாணியில் சொன்னால், ‘எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணாம பண்ணினா இப்படித்தான். பிளான் பண்ணிப் பண்ணணும்.'

எடையைக் குறைத்தே தீருவேன் என உறுதிமொழி எடுத்துவிட்டீர்களா? மகிழ்ச்சி. அதற்கான முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன், சில முன் தயாரிப்புகள் அவசியம். அதாவது சில டெஸ்ட்டுகளை எடுத்து உங்கள் உடலின் கண்டிஷனைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ரத்தப் பரிசோதனைகள்

`எடையைக் குறைக் கிறதுக்கு எதுக்கு ப்ளட் டெஸ்ட்? நல்லா கேட்கிறாங்கய்யா டீடேயிலு' என்றுதானே முணுமுணுக் கிறீர்கள்!

எடை குறைப் புக்கு மனதளவில் தயாராகி விட் டீர்கள்... நல்லது. உடலளவிலும் அதற்கு நீங்கள் தயாரா எனத் தெரிந்துகொள்ளத்தான் இந்த டெஸ்ட்ஸ். எடை குறைப்பு முயற்சியில் இறங்குவதற்கு முன் மருத்துவரைச் சந்தித்து உங்கள் பிரச்னைகளை விவாதிக்கலாம். உதாரணத்துக்கு உங்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை இருந்தால் அது உங்கள் எடை குறைப்பு முயற்சிகளை பாதிக்கும். உங்கள் எனர்ஜி குறையும், வாயைக்கட்ட முடியாமல் கண்டநேரத்தில் கண்டதையும் சாப்பிடத் தோன்றும், வயிற்று உப்புசம் இருக்கும், மனநிலையில் மாற்றங்கள் இருக்கும். அடிப்படையான அந்தப் பிரச்னையை அறிந்து அதைச் சரிசெய்யாமல் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறாது.  அது புரியாமல் ‘ஒண்ணுமே வொர்க் அவுட் ஆகலை. ஒரு கிலோகூட வெயிட் குறையலை’ எனப் பின்வாங்குவீர்கள்.

கம்ப்ளீட் பிளட் கவுன்ட், தைராய்டு புரொஃபைல், வைட்டமின் பி 12 மற்றும் டி3, சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் ரத்தச் சர்க்கரை அளவுக்கான பரிசோதனை அல்லது ஹெச்பிஏ1சி போன்றவை அவசியம் செய்யப்பட வேண்டிய சோதனைகள். முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், எல்.ஹெச், எஃப்.எஸ்.ஹெச், மற்றும் புரோலாக்டின் ஹார்மோன்களின் அளவுகள் பரிசோதிக்கப்பட வேண்டும்.
 
பாடி காம்போசிஷன் (Body Composition)

தசைகள், எலும்புகள் மற்றும் கொழுப்பு போன்றவற்றைத் தவிர்த்துவிட்டே எடையைக் கணக்கிடுகிறோம். ‘டெக்ஸா’ (DEXA) என்கிற டெஸ்ட்டே இதற்கான சரியான முறை. பரிசோதனை மையங்களில் இந்த டெக்ஸா சோதனையை, எலும்புகளின் அடர்த்தியை அறியவே செய்வார்கள். அதே மெஷின் மூலம் உங்கள் தசை அளவு, கொழுப்பு,  வலது கைகால்கள், இடது கைகால்கள் மற்றும் உடலின் மற்ற பாகங்களில் உள்ள கொழுப்பின் அளவு, எலும்புகளைப் பற்றிய தகவல்கள் என எல்லாவற்றையும் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம். இந்த டெஸ்ட்டுக்கு 2,000 முதல் 3,000 ரூபாய் வரை செலவாகலாம். பொதுவாக இது வருடத்துக்கொரு முறையோ, இருமுறைகளோ பரிந்துரைக்கப்படும். 

ஃபிட்னெஸ் சென்டர், ஸ்லிம்மிங் கிளினிக், காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை மையங்கள், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிற மருத்துவமனைகள் போன்ற இடங்களில் BIA  (Bioelectric Impedance  Analysis) என்கிற மெஷினைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் வயது, பாலினம், எடை மற்றும் உயரம் போன்றவற்றைப் பதிவு செய்ததும் அந்த மெஷின்மீது ஏறி நிற்பீர்கள். மெலிதான மின்சாரம் ஒரு காலின் வழியே பரவி இன்னொரு காலுக்குப் போவதை உணர்வீர்கள். கொழுப்பு தரும் எதிர்ப்பு அளவானது மெஷினில் டிஸ்ப்ளே ஆகும். அதாவது அதுதான் உங்கள் உடல் கொழுப்பின் அளவு. உடலிலுள்ள தண்ணீரின் அளவு, தசைகளின் அளவுகள் என இன்னும் விவரங்கள் தரும் அட்வான்ஸ்டு மெஷின்களும் இருக்கின்றன.

கர்ப்பிணிகள், பேஸ் மேக்கர் அல்லது உடலுக்குள் மெட்டல் இம்ப்ளான்ட் பொருத்தியவர்கள் இந்த முறையை முயற்சி செய்ய வேண்டாம். மற்றவர்களும் உடலின் நீர்ச்சத்தின் அளவு சரியாக இருக்கிறதா எனத் தெரிந்துகொண்டு இந்த மெஷினைப் பயன்படுத்தலாம். அதாவது ஞாயிற்றுக்கிழமை மூச்சுமுட்டச் சாப்பிட்டுவிட்டு, திங்கட்கிழமை காலையில் இதில் எடை பார்த்தீர்கள் என்றால் அது தவறாகவே காட்டும்.

எடை பார்க்கிற நேரமும் கவனிக்கப்பட வேண்டும். முழுச் சாப்பாடு சாப்பிட்டிருந்தால் மூன்று மணி நேரமும், நொறுக்குத்தீனிகள் சாப்பிட்டிருந்தால் ஒரு மணி நேரமும் இடைவெளி இருக்க வேண்டும்.

உடல் அளவுகள்

இதை `ஆந்த்ரோபாமெட்ரி' (Anthropometry) என்று குறிப்பிடுகிறோம். உயரம், எடை, இடுப்பு, வயிறு, நெஞ்சு, தொடைகள் போன்றவற்றின் அளவுகள் இன்ச் டேப் கொண்டு அளக்கப்பட வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு ‘ஸ்கின் ஃபோல்டு கேலிப்பர்’ என்கிற கருவியை வைத்து ‘பின்ச் டெஸ்ட்’ முறையில் அளவிடுவோம் மாதம் ஒரு முறை இப்படி உடல் அளவுகளைச் சரி பார்ப்பது நீங்கள் எவ்வளவு எடை மற்றும் கொழுப்பைக் குறைத்திருக்கிறீர்கள் என்று காட்டும். அவ்வப்போது நீங்கள் சரி பார்க்கிற எடை அளவு, சில நேரங்களில் எகிறும். அதன்படி எடை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டிய தருணங்கள் இவை...

மாதவிடாய் நாள்களில்...  (ஒரு வாரம் முன்பும் பின்பும் எடை அதிகரித்துக் காணப்படும்).

ஜலதோஷம் பிடித்திருக்கும்போதும், இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டிருக்கும்போதும். (உடலில் நீர் கோத்திருக்கக்கூடும் என்பதால்)அலர்ஜியோ, உணவு ஒவ்வாமையோ ஏற்பட்டிருக்கும்போது... அதாவது உங்களுக்கு வேர்க்கடலை, சோயா, கோதுமை, முட்டை, பார்லி, பால் பொருள்கள் போன்றவை ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் அது உடலில் நீர்கோத்தது போலவே பிரதிபலிக்கும்.  அதாவது அந்த மாதிரி நேரத்தில் எடை பார்த்தீர்கள் என்றால் எடை மெஷினில் அதிகமாகவே காட்டும். உண்மையில் அது உடலிலுள்ள நீரின் அளவுதானே தவிர, கொழுப்பாக இருக்காது.

குறிப்பிட்ட சில மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது (அதுவும் உடலில் நீரின் அளவை அதிகரிக்கும்).

உணவு ஒவ்வாமை பரிசோதனை

வேர்க்கடலை, சோயா, க்ளூட்டன் உணவுகள், எலுமிச்சை, பால் பொருள்கள், நட்ஸ் போன்றவை உங்களுக்கு ஏற்றுக் கொள்ளாதபோது உடலில் நீர் அதிகம் கோத்துக்கொள்ளும். தினமும் முறையாக உடற்பயிற்சி செய்பவராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளாத இத்தகைய உணவுகளைச் சாப்பிட்டால் எடை குறையாது. உடலுக்குள் ஏற்படுகிற வீக்கமும் நீர்கோத்துக்கொள்ள காரணமாகலாம். இதைக் கண்டுபிடிக்க மிகவும் நவீனமான டெஸ்ட்டுகள் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு 15,000 முதல் 30,000 ரூபாய் வரை செலவாகும்.

ஜீன் டெஸ்ட்


கடந்த சில வருடங்களால பல நிறுவனங் களும் ஜீன் டெஸ்ட் அறிவிப்புடன் களமிறங்கி யிருக்கின்றன. ‘ஜெனெடிக் கோடிங்’ முறையில் ஒருவருக்கு இதயநோய், புற்றுநோய் வரும் வாய்ப்புகள் கண்டறியப்படுவதுடன், அவரது உடல் காபி, பால் பொருள்கள், உப்பு, க்ளூட்டன் போன்றவற்றை ஏற்றுக் கொள்ளாததையும் கண்டுபிடிப்பதாகச் சொல்கிறார்கள். இது தரும் முடிவுகள் நம்பகமானவை என்று ஒரு பிரிவினரும், நம்பகத்தன்மையை சந்தேகிக்கிற இன்னொரு பிரிவினரும் இன்றும் விவாதங்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.  இதையும் மீறி இந்த டெஸ்ட் தேவையா, இல்லையா என்பது அவரவரின் தனிப்பட்ட முடிவு.

- நம்மால் முடியும்...

ஆர்.வைதேகி

எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்!

தமிழ் சினிமாவின் செம ஸ்மார்ட் ஹீரோ அவர். மாதக்கணக்கில் சிக்ஸ் பேக்குக்காக முயற்சி செய்துகொண்டிருந்தார். தினமும் நான்கு மணி நேரம் உடற்பயிற்சி, உப்பில்லாத உணவு என மெனக்கெட்டும் அவருக்கு சிக்ஸ் பேக் வரவில்லை. அவருடைய கொழுகொழு கன்னங்களும் மாறவில்லை. விரக்தியில் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அவரைப் பரிசோதித்த பிறகு வழக்கமாக அவர் சாலட்டின் மேல் தூவிச் சாப்பிடுகிற வேர்க்கடலையையும், ஓட்ஸ் பிஸ்கட்டுகளையும், வீட் ஃப்ளேக்ஸையும், முசிலியையும் முழுவதும் தவிர்க்கச் சொன்னேன். இவற்றைச் செய்ததும் உப்பிய அவரின் கன்னங்கள் மெலிந்ததோடு, அடுத்த படத்துக்கு சிக்ஸ் பேக்குடன் தயாரானார்.

எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்!

சூப்பராக ஒரு சாலட் சாப்பிடுவோமா?

தேவையானவை:
வேகவைத்த சோளம் அரை கப், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் ஒன்று, பொடியாக நறுக்கிய பச்சை மாங்காய் 2 டேபிள்ஸ்பூன், துருவிய முட்டைகோஸ் 4 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கேரட் அரை, பொடியாக நறுக்கிய பீட்ரூட் கால், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் 2 டேபிள்ஸ்பூன், மாதுளை முத்துகள் 6 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கலர் குடமிளகாய் 6 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டேபிள்ஸ்பூன், முளைகட்டிய பச்சைப் பயறு 2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லித் தழை அலங்கரிக்க, உப்பு, மிளகு மற்றும் ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு சிறிது.

செய்முறை:
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி சாப்பிடவும். ஒரு டீஸ்பூன் ஃபிளாக்ஸ் சீட் (ஆளி விதை) பவுடர், ஒரு டீஸ்பூன் பூசணி விதை, ஒரு டீஸ்பூன் துருவிய நெல்லிக்காய் சேர்த்தால் இதையே வைட்டமின் சி `ரிச்' சாலட்டாக மாற்றலாம்.