Published:Updated:

வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம்.. போலீஸ் தடியடி.. திடீர் பரபரப்பு! #NowAtVikatan

போராட்டம்
போராட்டம்

இன்றைய (14.2.2020) முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

14 Feb 2020 10 PM

சிஏஏவுக்கு எதிராக போராட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையம் அருகே இஸ்லாமியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டம் காரணமாக அங்கு கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பழைய வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, தேனி மாவட்டம் போடி கட்டபொம்மன் சிலை அருகே சுமார் 500பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் திடீரென போராட்டம் நடைபெற்றுவருகிறது.

14 Feb 2020 9 PM

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் உள்ளிட்டவற்றுக்கான தொகையை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இன்றிரவு 11.59க்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வோடாபோன் நிறுவனம் ரூ.55,000 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ.35,500 கோடியும் செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிப்.20 ரூ.10,000 கோடியை மத்திய அரசுக்கு செலுத்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருபப்து குறிப்பிடத்தக்கது.

14 Feb 2020 5 PM

வெளியானது `ஒரு குட்டி கதை' சிங்கிள்!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் மாஸ்டர். அண்மையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் `குட்டி கதை' பிப்ரவரி 14 வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள்களில் இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளதாக அறிவிப்பு வெளியாக, பாடலின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. எனினும் இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் குறித்த தகவலை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இதன் காரணமாக நடிகர் விஜய் தான் பாடலை எழுதியிருப்பார் என்ற தகவல்கள் பறந்தது. இந்நிலையில் சற்று முன்னர் குட்டி கதை பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

14 Feb 2020 2 PM

`யாருக்கும் பத்தாத பட்ஜெட்!' - ஸ்டாலின்

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் என எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

2020-21ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பின் சபாநாயகர் தனபால் தலைமையில் கூடிய அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், நடப்பு கூட்டத்தொடரை வரும் 20ம் தேதி வரை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்
`பேருந்துகளில் சிசிடிவி முதல் முத்திரைத்தாள் வரி குறைப்பு வரை!'- தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் #TNBudget2020

பட்ஜெட் குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ``ஏறக்குறைய 196 நிமிடம் பட்ஜெட் உரையை ஓ.பன்னீர்செல்வம் வாசித்திருக்கிறார். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கக் கூடிய பட்ஜெட், அவரைப் பொறுத்தவரையில் 10வது பட்ஜெட். யாருக்கும் பத்தாத, எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. இது இந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கை. இந்த ஆட்சியைப் பொறுத்தவரை, நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை மற்றும் கடன்சுமை என தொடர்ந்து இதுதான் இருந்துகொண்டிருக்கிறது. கடன்சுமையைப் பொறுத்தவரை ரூ.4,56,660 கோடி கடன்சுமை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீதும் ரூ.57,000 கடன் சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் இருந்தவரை தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடியாகத்தான் இருந்தது. ஆனால், அ.தி.மு.க ஆட்சி வந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன்சுமை மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது'' என்றார்.

14 Feb 2020 11 AM

11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு முடித்துவைப்பு!

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கும் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக ஓ.பி.எஸ், செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி வாக்களித்தனர். அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மிஸ்டர் கழுகு: “தம்பிக்கு உதவி செய்ய முடியாது!” - கறார் ஓ.பி.எஸ்

இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், சபாநாயகர் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைக் கேட்டு பதில்தரும்படி தமிழக சட்டப்பேரவை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவெடுப்பார் என்று நம்புவதாகக் கூறி, வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட முடியாது என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

14 Feb 2020 8 AM

ஓ.பி.எஸ் தாக்கல் செய்யும் 10-வது பட்ஜெட் #TNBudget2020

தமிழக அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்
Vikatan

நடப்பு ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கடந்த ஜனவரி 6-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 9ம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு பட்ஜெட் 2020-21... பசுமை விகடன் கொடுத்த முக்கியமான 
பரிந்துரைகள்!

பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இது, அவர் தாக்கல் செய்யும் 10-வது பட்ஜெட் ஆகும். அதேபோல், 15-வது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழுநீள பட்ஜெட்டும் இதுவே. இன்றைய பட்ஜெட்டில், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு