Published:Updated:

`இந்தியாவுக்கு எதிராக சாதனை பாட்னர்ஷிப்!' - 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா #INDvAUS #NowAtVikatan

வார்னர் - பின்ச்
வார்னர் - பின்ச் ( ICC )

14.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

14 Jan 2020 8 PM

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா!

இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்திய அணி நிர்ணயித்த 256 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி, 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான வார்னர் 128 ரன்களும் ஆரோன் பின்ச் 110 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கெதிராக எந்தவொரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பாட்னர்ஷிப் இதுவே.

14 Jan 2020 8 PM

`சமுதாயம் ரொம்பக் கெட்டுப்போயிருக்கு..!' - துக்ளக் விழாவில் ரஜினி

துக்ளக் இதழின் 50வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்த இதழின் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோருடன் நடிகர் ரஜினிகாந்தும் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, ``சமுதாயம் ரொம்ப கெட்டுப்போயிருச்சு. அரசியல் ரொம்பக் கெட்டுப்போயிருச்சு. இன்றைய காலகட்டத்தில் சோ போன்ற பத்திரிகையாளர்கள் அவசியம் தேவை. பால் போன்ற செய்தியில் சில ஊடகங்கள் தண்ணீர் போன்று பொய்யைக் கலக்கின்றனர். எது பால் எது தண்ணீர் என பிரித்தறிய வேண்டும். முரசொலி வைத்திருந்தால் திமுக என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். நடுநிலை என்பது மிகவும் முக்கியமானது. கவலைகளை நிரந்தரமாக்கிக் கொள்வதும் தற்காலிகமாக்கிக் கொள்வதும் நம் கையில்தான் இருக்கிறது. கவலைகளை நிரந்தரமாக்கிக் கொண்டால் நோயாளி, தற்காலிகமாக்கிக் கொண்டால் அறிவாளி'' என்று பேசினார்.

14 Jan 2020 5 PM

ஆஸ்திரேலியாவுக்கு 256 ரன்கள் இலக்கு #INDvAUS

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் ஷிகர் தவான் 74 ரன்களும் கே.எல்.ராகுல் 47 ரன்களும் எடுத்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், 255 ரன்களுடன் இந்திய அணி திருப்திப்பட்டுக் கொண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் பேட் கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

14 Jan 2020 2 PM

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மனு தள்ளுபடி

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் வினய் சர்மா, முகேஷ் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் குற்றவாளிகள் நால்வரும் வரும் 22-ம் தேதி தூக்கிலிடப்படுவது உறுதியானது.

14 Jan 2020 1 PM

தி.மு.க-வும் காங்கிரசும் இணைந்த கரங்கள்

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

‘உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் காங்கிரஸ் கருத்தை மட்டுமே நான் கூறினேன். தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி தொடரும். தி.மு.கவும் காங்கிரசும் இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை’ என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

14 Jan 2020 10 AM

குமரி போலீஸ் அதிரடி!

எஸ்.எஸ்.ஐ வில்சன்
எஸ்.எஸ்.ஐ வில்சன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளில் போலீஸாருக்கு துப்பாக்கித் தரப்பட்டுள்ளது. களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 303 ரைபிள் என்ற வகை துப்பாக்கி 37 சோதனைச் சாவடிகளில் உள்ள போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

14 Jan 2020 8 AM

இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி!

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் தற்போது தான் ஒருநாள் போட்டியில் சந்திக்க உள்ளனர். இதனால் இன்றையை போட்டிக்கு ரசிகர்கள் மத்தியல் கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கோலி
கோலி

இந்திய அணியின் கேப்டன் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்தால், கேப்டனாக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். அதாவது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து கேப்டனாக 324 போட்டிகளில் விளையாடி 41 சதங்கள் அடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் கோலி, தற்போது வரை 169 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 சதங்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் கோலி சதமடிக்கும்பட்சத்தில், பாண்டிங்கை வீழ்த்தி முதலிடம் பிடிப்பார். ஆஸ்திரேலிய தொடரில் கோலி 4 -வது வீரராக களமிறங்கபோவதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த 4 -வது வீரர் சிக்கலும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது போட்டி இன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும்!

14 Jan 2020 7 AM

போகிப் பண்டிகையின் காலை பொழுது!(சென்னை)

14 Jan 2020 7 AM

அரசுப் பேருந்து மூலம் பயணமானவர்களின் எண்ணிக்கை மட்டுமே இது!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. இன்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் வெளியூர்களிலிருந்து பணிக்காகவும் படிப்புக்காகவும் வந்த பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். தமிழக அரசு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த 10 -ம் தேதி முதல் நேற்று இரவு 10 மணி வரையில் அரசுப் பேருந்து மூலம் மட்டும் 5.84 லட்சம் மக்கள் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்று மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் இது அரசுப் பேருந்து மூலம் பயணமானவர்களின் எண்ணிக்கை மட்டும்தான். இது தவிர, தனியார் பேருந்துகள், ரயில்கள் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் பயணமானவர்களின் எண்ணிக்கை என்பது தனி எண்ணிக்கை.

அடுத்த கட்டுரைக்கு