Published:Updated:

`மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது!’ - கமல்ஹாசன் #NowAtVikatan

கமல்
கமல்

15-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

15 Jan 2021 5 PM

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்!

தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படாமல் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துவந்தது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ``மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்சப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!” என ட்வீட் செய்திருக்கிறார்.

15 Jan 2021 5 PM

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடிவரும் சூழலில் இன்று விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இரு தரப்பும் தங்களின் முடிவில் உறுதியாக இருப்பதால், இன்னும் முடிவு எட்டப்படாமல் நீள்கிறது. 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருக்கும் நிலையில் வரும் 19-ம் தேதி 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

15 Jan 2021 10 AM

அஞ்சல் அலுவலகத் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்!

அஞ்சல்துறைக்கு கணக்கர் பதவிகளுக்கான அறிவிப்பில் இந்,தி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இந்தத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. `கணக்கர் பதவிகளுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வெளியிடும் வரை, இந்தத் தேர்வை நடத்தத் கூடாது’ எனத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவந்தனர்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

இந்தநிலையில், தமிழ்நாடு வட்டத்துக்குட்பட்ட அஞ்சல் அலுவலகத் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என எம்.பி. சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்திருக்கிறது. மேலும், ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வும் தமிழிலும் நடத்தப்படு​ம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

15 Jan 2021 9 AM

பொறிபறக்கும் ஜல்லிக்கட்டு!

உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார். இதில் 800 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், அரசு வகுத்து தந்திருக்கும் விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. முதல் சுற்றில் 94 காளைகள் சீறிப் பாய்ந்தன. அவற்றில் 22 காளைகள் வீரர்களால் பிடிக்கப்பட்டன. இதுவரை மூன்று பேர் காயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு