Published:Updated:

`மகாராஷ்டிராவில் 31, கேரளாவில் 22!' - இந்தியாவில் 107 ஆக உயர்ந்த #Corona பாதிப்பு எண்ணிக்கை #NowAtVikatan

கொரோனா
கொரோனா

15-03-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

15 Mar 2020 10 AM

இந்தியாவில் 93 ஆக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்திருக்கிறது. இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள சந்தைப் பகுதியில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனாவால் உலக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்புகளை இந்த வைரஸ் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில், இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா
கொரோனா

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. வெளிநாட்டினருக்கான விசா நடைமுறைகள் ஏப்ரல் 15ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், மாநில அரசுகள் பலவும் முன்னெச்சரிக்கையாக மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்திருக்கின்றன. மேலும், பொது நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் போன்றவையும் தியேட்டர்கள், மால்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களும் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாலை 5 மணிக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சார்க் நாடுகளின் தலைவர்களோடு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

`லண்டனில் பிறந்த குழந்தைக்கு கொரோனா!' -தாய் மற்றும் குழந்தையை தனிமைப்படுத்திய மருத்துவமனை

இந்தநிலையில், கொரோனாவால் விமானங்கள் ரத்துசெய்யப்பட்ட நிலையில் இத்தாலியில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வந்தனர். அவர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட உள்ளனர். மிலன் நகரிலிருந்து கிளம்பிய அந்த விமானத்தில் 211 இந்திய மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

15 Mar 2020 11 AM

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம்!

தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைவைத் தொடர்ந்து அக்கட்சியின் அடுத்த பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 29-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
15 Mar 2020 12 PM

இந்தியாவில் 107 ஆக உயர்ந்த #Corona பாதிப்பு எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா
கொரோனா

இந்த எண்ணிக்கை 93ஆக இருந்த நிலையில், புதிதாக 14 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 31 பேருக்கும் கேரளாவில் 22 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 14 பேரில் பெரும்பாலானவை மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஹரியானாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 14 பேரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு