Published:Updated:

தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 10 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

15.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

15 May 2020 8 PM

தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 10 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு

தமிழகத்தில், 'இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 434 ஆக உள்ளது' என மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108 ஆக இருக்கிறது.

15 May 2020 7 PM

அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றம்!

மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படுகிறது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப் படுவார்கள் என்றும், பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கின்றனர். 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாறுகின்றன.

15 May 2020 7 PM

படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு!

படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு ஏற்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பேசியவர், ``கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் எனக் கூறியுள்ளார்.

15 May 2020 5 PM

சுயசார்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்பு!

சுயசார்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். அதன்படி, தமிழகத்தில் விளையும் மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய விளைபொருட்கள் போக்குவரத்திற்கு 50% மானியம், குளிர் பதன வசதிக்கு 50% மானியம். 2 லட்சம் தேனீ வளர்ப்பவர்களுக்கு உதவ 500 கோடி வழங்கப்படும். தேனீ வளர்ப்பின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது எனக் கூறியுள்ளார்.

15 May 2020 4 PM

மதுவாங்க வண்ண டோக்கன்கள்!

தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 10 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு #NowAtVikatan

தமிழகத்தில் சென்னை தவிர பிறமாவட்டங்களில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு தீவிரம் காட்டி வருகிறது. ’மதுக்கடைகளில் மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை கிழமை வாரியாக வண்ண டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள் கடைக்கு வந்து மதுவாங்கிக் கொள்ளலாம்.சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும்” என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 May 2020 1 PM

தடை நீக்கம் - ஏ.என்.ஐ ஊடகம் தகவல்!

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் 43 நாள்கள் கழித்து, கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் சென்னை நீங்கலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் கடைகளில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் முடிவில் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

விசாரணையில் ஆன்லைனில் தற்போதைக்கு மதுபானம் விற்பது சாத்தியமில்லை, மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தமிழக அரசு வாதம் செய்தது.

இதனிடையே மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.

15 May 2020 12 PM

மதுபான வழக்கு தள்ளுபடி!

மதுபான கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் எனக் கௌதம் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது சிஸ்டம் தொடர்பான விஷயம் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

15 May 2020 12 PM

124 ஆண்டுகளில் முதல்முறையாக ரத்தாகும் ஊட்டி மலர்க் கண்காட்சி!

124 ஆண்டுகளில் முதல்முறையாக ரத்தாகும் ஊட்டி மலர் கண்காட்சி. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு தடை...

Posted by Vikatan EMagazine on Thursday, May 14, 2020

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இன்று தொடங்குவதாக இருந்த 124 வது மலர்க் கண்காட்சி ரத்தாகிறது. இருந்தபோதிலும் பல மாத உழைப்பில் உருவாக்கிய மலர் பல்லாயிரக்கணக்கான மலர் செடிகளை பூங்கா ஊழியர்கள் காட்சி மாடத்தில் அழகுடன் அடுக்கியுள்ளனர்.

வீடியோ - கே.அருண்

15 May 2020 11 AM

கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம்!

``கொரோனா வைரஸ் நோய்த்தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு, தொற்று பாதிப்புக்குள்ளான 34 சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும்” என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்திருக்கிறார்.

15 May 2020 10 AM

கல்லூரிகள் திறப்பது எப்போது?

தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளி பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரிகள் திறப்பு தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையில், `தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுமையாக முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும்’ என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருக்கிறார். மாணவர்களுக்கு பயம் இல்லை என்ற நிலை வந்த பிறகே கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்த அமைச்சர், கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சென்ற பிறகு, தூய்மைப்படுத்தும் பணிகள் நடக்கும் என்றார்.

15 May 2020 9 AM

இந்தியாவில் உயர்ந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 3,967 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

இதனால் இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,003-லிருந்து 81,970 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,549-லிருந்து 2,649 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 27,920 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு