Published:Updated:

'முதலமைச்சர் நிவாரண நிதி' ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 1 கோடி ரூபாய் நிதி! #NowAtVikatan

 ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

15-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

15 May 2021 7 PM

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கினார்

தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று ஆளுநரைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர். அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். மேலும் தனது ஒரு மாத சம்பளத்தையும் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொது மக்கள் நிதி வழங்க வேண்டும் எனவும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

15 May 2021 1 PM

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டாஸ் சட்டம்!

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டாஸ் சட்டம் பாயும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுயுள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் ரெம்டெசிவிர், ஆக்ஸிஜனை அதிக விலைக்கு விற்பது மிக கடுமையான குற்றமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

15 May 2021 10 AM

கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு வழங்கும் 2 ஆயிரம் ரூபாயை மழையிலும் வரிசையாக நின்று காத்திருந்து வாங்கிச் செல்லும் மக்கள்!

இடம்: சேலாஸ், நீலகிரி மாவட்டம்.

15 May 2021 10 AM

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் வாங்க குவிந்த கூட்டம்!

சென்னையில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து, கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு பதில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அங்கு மருந்து வாங்க குவிந்திருக்கும் மக்கள் கூட்டம்!

15 May 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,43,72,907 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை
கொரோனா இரண்டாம் அலை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,890. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,66,207-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,04,32,898-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 36,73,802 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,53,299 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 18,04,57,579 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது

15 May 2021 9 AM

திடீர் விசிட் அடித்த ஸ்டாலின்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருந்தாலும் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா வார் ரூமிற்கு முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு திடீர் விசிட் அடித்தார். அப்போது அங்கு நடைபெறும் பணிகளை கண்காணித்தார். அந்த நேரம் உதவி கோரி வந்த அழைப்பு ஒன்றுக்கு, `நான் ஸ்டாலின் பேசுறேன்’ என தானே பதில் அளித்து தேவையான உதவிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்த வார் ரூம் மூலம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பு விவரத்தினை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அனைத்து அழைப்புகளுக்கும் முறையான உதவி மற்றும் ஆலோசனைகள் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு