`மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவை அரசு துரத்திப்பிடித்து கட்டுப்படுத்துகிறது!’- அமைச்சர் விஜயபாஸ்கர் #NowAtVikatan

15.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
கொரோனாவை அரசு துரத்திப்பிடித்து கட்டுப்படுத்துகிறது!’- அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா நிலவரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``மிகப்பெரிய வல்லரசு நாடுகளையே கொரோனா தொற்று உலுக்கிக் கொண்டிருக்கிறது. மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா தொற்றை, அரசு துரத்திப்பிடித்துக் கட்டுப்படுத்துகிறது.

கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸைக் கட்டுப்படுத்த உயிரைக் கொடுத்து போராடி வருகிறோம். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறேன். கொரோனாவை கண்டு பயம், பீதி வேண்டாம். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரே நாளில் 1,843 பேருக்குப் பாதிப்பு!
தமிழகத்தில் இன்று மட்டும் 1,843 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,504 -ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,257 பேருக்குப் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 479-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 797 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் முழு முடக்கம்!
சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் பழனிசாமி. அதைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் 30 -ம் தேதி வரை மீண்டும் முழு முடக்கம் அமலுக்கு வருகிறது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா உச்சம் - ஐ.சி.எம்.ஆர் மறுப்பு
இந்தியாவில் நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என சமூகவலைதளங்களில் கடந்த சில நாள்களகத் தகவல்கள் பரவின. இந்த நிலையில் அந்தத் தகவல் தவறானது என்றும் அப்படியான ஆய்வு எதுவும் நடைபெறவில்லை எனவும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா! - அப்டேட்ஸ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,922-லிருந்து 3,32,424 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 11,502 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,195-லிருந்து 9,520ஆக அதிகரித்திருக்கிறது.
அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379-லிருந்து 1,69,798 ஆகவும் உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் 1,53,106 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகளவில் கொரோனா நிலவரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 79,82,822 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 41,03,984 ஆக அதிகரித்தது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,35,166 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 21,62,144 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,17,853 ஆக இருக்கிறது.