Published:Updated:

Corona: ஒரே நாளில் 5,697 பேருக்குத் தொற்று! - தமிழகத்தில் 5.14 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு #NowAtVikatan

கொரோனா
கொரோனா

15-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

15 Sep 2020 6 PM

தமிழகத்தில் 5.14 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,14,208-ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 8,502-ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 5,735 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,58,900-ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 46,806 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,50,572 ஆக அதிகரித்தது.

குழந்தைக்கு கொரோனா காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா...? - கண்டுபிடிக்கலாம் இப்படி!
15 Sep 2020 3 PM

Corona: `விதிமுறைகளை மீறினால் ரூ.200 முதல் ரூ.5,000 வரை அபராதம்!

கொரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு வழிகாட்டு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையிலான அவசரச் சட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்தது. ஆளுநரும் இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், இது தொடர்பான சட்ட மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதன்படி, கொரோனா விதிமுறைகளை மீறும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்க இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. முகக்கவசம் அணியாதவர்கள், உரிய தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இரண்டு நாள்களில் ரூ.2 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

அதேபோல், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்யும் மசோதாவும் தமிழக சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்திய இந்த மசோதாவும் நிறைவேறியது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறலாம்.

15 Sep 2020 2 PM

எட்டு மாதங்களில் நீட் தேர்வை எப்படி ரத்து செய்வீர்கள்?

சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வு தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்தன. ``நீட் தேர்வுக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணியில் இருந்த தி.மு.க-வும்தான் காரணம்’’ என முதல்வர் ஆவேசமாகப் பேசினார். தொடர்ந்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``நீட் விவகாரத்தில் தி.மு.க-வின் யோசனையை ஏற்கத் தயார்’’ என்றார்.

தமிழக சட்டசபை
தமிழக சட்டசபை
மாதிரிப் படம்

விஜயபாஸ்கர், `` `எட்டு மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம்’ என தி.மு.க கூறுகிறது. நீங்கள் எப்படி ரத்து செய்வீர்கள் என்ற வழியைக் கூறுங்கள். தி.மு.க அதற்கான வழியைச் சொன்னால், இப்போதே தமிழக அரசு அதைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறது’’ என்றார்.

15 Sep 2020 12 PM

ஸ்டாலினுக்கு முதல்வர் கேள்வி

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று நீட் தேர்வு குறித்து பேரவையில் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். அப்போது பேசிய ஸ்டாலின், `நீட்-க்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்தத் தீர்மானத்துக்கு இதுவரை ஒப்புதல் வாங்கவில்லை’ என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``நீட் தேர்வைக் கொண்டு வந்தபோது மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்ததா இல்லையா?” என பதில் கேள்வி எழுப்பினார்.

15 Sep 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 49,30,237 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,054 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்துள்ளன. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்புகள், 80,776 -ஆக அதிகரித்துள்ளன.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இதுவரை 38,59,400 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள். 9,90,061 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு