Published:Updated:

வேளாண் சட்டம்: `அப்போது ஆதரித்தவர்கள், இப்போது தவறாக வழிநடத்துகிறார்கள்!’ - பிரதமர் மோடி #NowAtVikatan

மோடி
மோடி

15-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

15 Dec 2020 4 PM

`விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்’

பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, ``விவசாய அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் பல ஆண்டு காலமாக, இந்த துறையில் சிர்திருத்தங்களை கேட்டு வருகிறார்கள். இந்திய அரசு விவசாயிகளின் நலனில் உறுதியாக உள்ளது. அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வோம்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

இன்று எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருந்து கொண்டு விவசாயிகளை தவறாக வழிநடத்துபவர்கள், அவர்களின் கட்சி ஆட்சியில் இருக்கும் போது இந்த சீர்திருத்தங்களை ஆதரித்தவர்கள் தான். அவர்களின் ஆட்சியின் பொது அதனை அவர்களால் செய்ய முடியவில்லை. இன்று வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவை இந்த அரசாங்கள் எடுத்திருக்கிறது. அப்போது ஆதரித்தவர்கள் இப்போது விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்” என்றார்.

15 Dec 2020 11 AM

ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா!

சென்னை ஐஐடி-யில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படவே, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வரை சுமார் 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஐஐடி சென்னை வளாகத்திலிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்தநிலையில் இன்று ஐஐடி சென்னை வளாகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183-ஆக அதிகரித்திருக்கிறது. ஒரே நாளில் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

ஐஐடி-யில் நூலகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உணவு, விடுதிக்கே கொண்டு சென்று கொடுக்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ``மாணவர்கள் அச்சப்பட வேண்டாம். சுதாதாரத்துறை ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து செயலாற்றிவருகிறது” எனத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கும் அறிகுறி இருந்த காரணத்தால், அங்கிருக்கும் 200 மாணவர்களுக்குப் பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது!

சென்னை ஐஐடி கொரோனா பாதிப்பு தொடர்பாக பேசிய தமிழக சுகாதாரத்துறைச் செயலர், ராதாகிருஷ்ணன், ``மாஸ்க் அணியாதோருக்கும், கொரோனா பாதிப்பு இல்லை என்போருக்கும் சென்னை ஐஐடி ஹாட்ஸ்பாட் ஒரு பாடம்” என்றார்.

15 Dec 2020 11 AM

குளிர்கால கூட்டத் தொடர் ரத்து!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு தொடங்கப்பட்டாலும், திட்டமிட்டதற்கு முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னதாகவே நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

15 Dec 2020 8 AM

நடிகை சித்ராவை தற்கொலைக்குத்  தூண்டியதாக கணவர் கைது!

`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சித்ரா, டிசம்பர் 9-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் கோடம்பாக்கம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் அக்டோபர் மாதம் பதிவுத் திருமணம் நடந்திருப்பதால், ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்திவருகிறார்.

சித்ராவை ஹேமந்த் கொலை செய்துவிட்டதாக சித்ராவின் அம்மா விஜயா பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், ஆர்டிஓ விசாரணைக்காக ஆஜரான விஜயா, அவரின் கணவர் காமராஜ் மற்றும் குடும்பத்தினரிடம் சித்ரா மரணம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

சித்ராவின் அம்மா அளித்த தகவலால் ஹேமந்த்துக்குச் சிக்கல்?! - ஆர்டிஓ-விடம் கதறி அழுத குடும்பத்தினர்

விசாரணை முடிந்து வெளியில் வந்த விஜயா, ``என் மகள் சித்ராவின் மரணத்துக்கு ஹேமந்த்தான் காரணம். நடந்தது கொலை’’ என்று கண்ணீர்மல்கக் கூறினார். இந்தநிலை, நடிகை சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதியப்பட்டு ஹேமந்த் கைதுசெய்யப்பட்டார். நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் ஹேமந்த் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஹேமந்த் ஐ.பி.சி 306-ன் படி கைதுசெய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு